புதன், 8 ஜூலை, 2015

குறுந்தொகை - அரிய செய்தி - 11-15

குறுந்தொகை - அரிய செய்தி - 11
                                                                      உணவு
ஆண் யானை யா மரப் பட்டையை உரித்துப் பெண்யானைக்கு நீரூட்டும் 
    குறுந். 37,அகம். 335.
                                            மயில் ஈன்ற முட்டை
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
-                                    கபிலர், குறுந்.38 : 1, 2
காட்டில் உள்ள மயில்  பாறையில் ஈன்ற முட்டைகளைக் கருங்குரங்கின் குட்டிகள் உருட்டி விளையாடும். பறவை  வல்லுநர்வழி – ஆய்க.

குறுந்தொகை - அரிய செய்தி - 12
                                                         கோசர் வரலாறு
…. ............................. நன்னன்
நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வண்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே
                                        பரணர், குறுந். 73 : 2 – 5


குறுந்தொகை - அரிய செய்தி - 13

                                               இளவேனில் ஆனேறு
வேனில் ஆனேறு போல
                    விட்ட குதிரையார், குறுந்.74 : 4
வேனிற்காலத்தில் பசுவினால் விரும்பப்பட்ட காளைபோல வேனில் பருவத்திற்கும் காளைக்கும் உள்ள தொடர்பு.விலங்கு நூல் அறிவியல் கொண்டு ஆய்க. மேலும் காண்க : குறிஞ்சிப்.136, 235.
குறுந்தொகை - அரிய செய்தி - 14

                                                             பதுக்கை
................................. வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
                                மதுரை மருதன் இளநாகனார், குறுந். 77 : 2, 3
கொடிய பாலை நிலத்து அருவழியில் இறந்த வழிப்போக்கருடைய உடல்களை மறைத்துத் தழையால் மூடப்பட்டுள்ள கற்குவியலானது உயர்ந்த நல்ல யானைக்கு அமைக்கப்பட்ட நிழலாகப் பயன்படும். பதுக்கை – கற்குவியல் – இறந்தவர் உடல் – தழை இட்டு மூடல் - காட்டு வழியில் -  ஆய்க.
மேலும் காண்க : அகநா. 109,157, 215, 231
குறுந்தொகை - அரிய செய்தி - 15
                                                             தழை ஆடை
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும் ...
                    ஒளவையார், குறுந். 80 : 1 – 3
கூந்தலைப் போன்ற நெறிப்பினையுடைய ஆம்பலின் முழுமையான செறிந்த இலைகளைத் தழையாடையாக உடுத்தி, பெருவெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி யாம் புனல்விளையாட்டை அயர்கச் சென்றோம்.
இது மருத நிலத்துத் தழை ஆடை  - பரத்தை கூற்று – குறிஞ்சி , குறமகள் அசோக மரத்தின் பெரிய தழை- குறுந். 214. அகநா.331,390.  ஐங்.191- தழையாடை -
 தழை ஆடை உடுத்தும் வழக்கம் -  இம்மக்களின் வாழ்க்கை முறை – ஆய்க.   
 முதன்மை நோக்கு :  மானிடவியல் ஆய்வு. 

மேலும் காண்க : புறநா. 248                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக