புதன், 20 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1141


திருக்குறள் -சிறப்புரை :1141

115. அலர் அறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால். ---- ௧௧௪௧

யான் கொண்ட காதலையறிந்த இவ்வூரார் தூற்றும் பழிச்சொற்களைக் கேட்டும் என் உயிர் போகாமல் நின்றது ; அஃது யான் பெற்ற பெரும் பேறாகும் என்பதைப் பலரும் அறியார்.

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்ற
…………………………………..
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
அலர்சுமந்து ஒழிக இவ்வழுங்கல் ஊரே.” நற்றிணை.

தோழி..! நம் தெருவில் உள்ள மாதர்களுள் சிலரும் பலரும் வேறோரிடத்தில் கூடிநின்று, கடைக் கண்ணால் சுட்டி நோக்கி, வியப்புடையார் போலத் தத்தம் மூக்கின்மேல் சுட்டு விரலை வைத்துப் பழிச் சொற்கூறித் தூற்றினரே………!
நள்ளிருளில் தேரேறிவருகின்ற கொண்கனொடு செல்ல நீ எழுவாயாக..! அலர் தூற்றும் இவ்வூர் யாது செய்யும்..? வேண்டுமேல் அலர் தூற்றி ஒழிவதாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக