தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் - 4.
வழிபாடுகள்: தொல்காப்பியம்-
தொல் தமிழர்தம் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டுச் சிறப்பினையும் அறிந்துகொள்வதற்குத் தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியங்கள், தொல்லியல் ஆய்வுகள்முதலிய சான்றுகள் நமக்குத் துணைபுரிகின்றன.
அண்மைக்கால ஆய்வுகளின்படி கி.மு. 700க்கு முந்தைய தொல்காப்பியமும் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்களாகி்ய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் கொண்டு தமிழர்களின் வழிபாடுகளையும் திருவிழாக்களையும் அறிந்துகொள்வோமாக.
தொல்காப்பியம் :
“ முதலெனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே”- (தொல்.பொரு.4.)
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு . முதல் என்று சொல்லப்படுவது நிலமும் காலமும் ஆகிய அவ்விரண்டினது இயற்கை என்று சொல்லுவர் உலகின் இயல்பு உணர்ந்தோர். இயற்கை என்பதனால் செய்துகோடல் பெறாமை அறிந்து கொள்க. நிலம் என்பதனால் பொருள் தோற்றுதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதமும் கொள்க” -இளம்பூரணர் உரை.
இயற்கை மக்களைத்தோற்றியது, அவர்கள் வாழிவியல் நெறிகளை வகுத்து நன்னெறி நின்று ஒழுகுவதற்கு காரணமாகிய நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆகிய ஐம்பூதங்களையும் தெய்வங்களாகப் போற்றி வழிபட்டனர்.
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.”(தொல்.பொரு.5. )
மாயவன் மேவிய காடுபொருந்திய உலகமும் ; சேயோன் - முருகவேள் மேவிய மைவரை உலகமும் ; இந்திரன் மேவிய தீம்புனல் உலகமும் ; வருணன் மேவிய பெரு மணல் உலகமும் ; முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையினானே சொல்லவும் படும்.” - இளம்பூரணர்.
நானிலம் என்பதே தமிழ் வழக்கு. பாலை நிலம் இயற்கையன்று. பாலைக்குத் தெய்வமாகக் காளியைக்குறிப்பார் பாவாணர்.
..............................தொடரும்.....................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக