வெள்ளி, 4 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1096


திருக்குறள் -சிறப்புரை :1096

உறா தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.-------- ௧0௯ ௬

அன்பற்றார்போல் பேசினாலும் வெறுப்பில்லாது வெளிப்படும் சொற்களினால், அவள் உள்ளத்தே விருப்பம் இருக்கிறது என்பதனை எளிதில் உணர்ந்துகொள்ள முடிந்தது.

“கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
வயமான் அடித்தேர்வான் போல தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன் பல்நாளும். “ --கலித்தொகை.

குளத்து நீலமலர் போலும் மையுண்ட கண்ணினை உடையாய்..! யான் கூறுவனவற்றை எண்ணிப்பாராய்..! ஒப்பில்லாத ஒருவன், வலிமைபெற்ற யானை முதலியவற்றின் அடியைத் தேடுவான் போல,  அழகுறக் கட்டிய கண்ணியை உடையவனாய் ; வில்லை ஏந்தி வரும் ;அங்ஙனம் வருபவன் என்னைப் பார்த்து, தான் உற்ற நோயைக் குறிப்பால் யான் உணருமாறு, காட்டுவதன்றிக் கூற்றால் கூறானாய்ப் பலநாளும் மீண்டும் செல்வான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக