வெள்ளி, 7 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1306


திருக்குறள் -சிறப்புரை :1306

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயு மற்று.---- 0

விரும்பி நுகரப்படும் காம இன்பத்தில்,   நெடுநாள் நீடிக்கும் துனியும் சிறிதுநேரம் தோன்றி மறையும் புலவியும் இல்லையென்றால் காமம்,  உண்ணும் பருவம் கடந்த பழத்தைப்போன்றும்  உண்ணத் தகாத இளங்காயைப் போன்றும் பயனற்றதாகும்.

பெய்யாது வைகிய கோதைபோல
மெய்சா யினையவர் செய்குறி பிழப்ப
உள்ளி நொதுமலேர் புரை தெள்ளிதின்
வாரன் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே
புணரி பொருத பூமணல் அடைகரை
யாழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றாற் கானலானே” ----நற்றிணை.

தலைவி…! அவர் செய்த குறி இடையீடுபட்டுத் தவறுதலாலே, சூடாது கிடந்த பூ மாலை போல, நின் மெய் வாடினையாகி, அயலார் மொழியும் பழிச்சொல்லைக் கருதி, இனி உறுதியாக அவர் நம்மிடத்து வரமாட்டார் என்னும் புலவியை நீ உட்கொள்ளாது, நின் நெஞ்சத்து அதனை ஒழிப்பாயாக. அலைவந்து மோதும் கடற்கரையில், தாம் ஊர்ந்து வருகின்ற தேர்ச்சக்கரத்தில் படாதவாறு நண்டுகளை விலக்கிப் பாகன் வாரைப் பிடித்து ஆராய்ந்து செலுத்துமாறு கானலிடத்து நிலவு விரிந்தது காண்பாயாக.  

1 கருத்து:

  1. நெடுநாள் நீடிக்கும் துனி...துனி புரியவில்லை ஐயா.
    புலவி என்றால் செல்லமாக கோபித்துக்கொள்வதுதானே. புலவி உட்கொள்ளாது என உள்ளதே ஐயா.

    பதிலளிநீக்கு