புதன், 19 ஜூன், 2019


அன்புடையீர் வணக்கம்
                     திருக்குறளுக்கு உரை திருக்குறளே”, அறிஞர் எம். டயசு அவர்களின் கருத்து எத்துணைப் பொருத்தமானது என்பதை  நன்கு உணர்ந்தேன். எனினும் திருக்குறளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எழுத்தும் என் நாவில் தவழ வேண்டுமென்ற  ஆவலினால் படிக்கத் தொடங்கினேன்;பின்னர் எழுதவும் துணிந்தேன்.
                                2006 ஆம் ஆண்டு, மார்ச்சு திங்களில் மைசூரில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணியேற்றபொழுது, ஒரு வலைப்பூவைத் தொடங்கிச்  (kalappal.blogspot.com)    செம்மொழித் தமிழ் தொடர்பான செய்திகளை வெளியிட்டேன். அந்நாளில்தான் அயலகத் தமிழர்களின் தமிழ் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டேன். தொடர்ந்து பல்வேறு இலக்கியப் பகிர்வுகளோடு உலகத் தமிழர் உறவு  உறுதியாகவே, 2016 ஆம் ஆண்டில் திருக்குறள் சிறப்புரை என்னும் தொடரை நாள்தோறும் ஒரு குறளுரை  என வெளியிட்டேன்.     
                          திருக்குறள் சிறப்புரை இன்றுடன் நிறைவுற்றது. 1330 அருங்குறட்பாக்களின் சிறப்பினைச் சான்றோர் நெறிநின்று  உரைத்துள்ளேன்; சிற்சில இடங்கள் வேறுபடுதலுமுண்டு.  1330 அருங்குறட்பாக்களுக்கு 1330  செய்யுட்பகுதிகள் மேற்கோள்களாக இடம் பெற்றுள்ளன. ஆர்வலர்கள் குறட்பாவின் கருத்தை அறிந்து கொள்ளும் பொழுது மேலொரு இலக்கியக் கருத்தையும் சுவைக்கும் நோக்கில் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன.  
                                  இன்றுவரை என் வலைப்பூவில் .70,000 மேற்பட்ட பார்வைகள் பதிந்துள்ளன. நாள்தோறும் 10 முதல் 30 வரையிலான தமிழ் ஆர்வலர்கள் திருக்குறளைச் சுவைத்துள்ளனர் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
திருக்குறள் சிறப்புரை- நூல் வடிவில் வெளிக்கொணர விரும்பி, நாளைமுதல்  மீள் பார்வையில்  திருத்தம்மேற்கொள்ளவிருக்கிறேன்.
இப்பணியில் என்னை ஊக்கிய உலகத் தமிழர்களுக்கு என்றும் நன்றி உடையேன்…..!
                              நன்றி நண்பர்களே.....! மீண்டும் ஒரு செவ்விலக்கியக் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.
வணக்கமும் வாழ்த்தும்
நன்றியுடன்
முனைவர் இரெ. குமரன்.


1 கருத்து:

  1. தொடர்ந்து உங்கள் பதிவினை வாசிப்போரில் நானும் ஒருவன் ஐயா. உங்கள் பதிவுகள் மூலமாக பல அரிய தகவல்களைத் தெரிந்துகொள்கின்றேன். நூல் வடிவாக்கம் பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு