தமிழமுது –292– தொல்தமிழர் இசை மரபு:152 - நீட்சியும் -
வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - சிற்றிலக்கியங்கள் :
தமிழிசை மரபின் நீட்ட்சியைக் காலந்தோறும் காணக்கூடியதாவே அமைந்துள்ளது.
”சிற்றிலக்கியங்களின் தோற்றம் சங்க காலத் தொன்மை வாய்ந்தது. காலந்தோறும் சிற்றிலக்கியங்கள் தோன்றின. எடுத்துக்கொண்ட பொருளை முற்ற முடித்துக்காட்டியதோடு சுருங்கிய அளவில் வட்டாரச் சார்பில், கடவுளரை, மன்னரை, வள்ளலை,
தலைமக்களைப் புகழ்வதற்குரிய அடிப்படையைக் கொண்டு திகழ்வன. தமிழ்ச் சிற்றிலக்கியவகை என்பதைப் பிரபந்த வகை என வடமொழியில் வழங்குவதுண்டு. பிரபந்தம் என்ற சொல்லிற்கு “நன்கு கட்டப்பெற்றது” என்று பொருள் கூறப்படும். இப்பிரபந்த வகைகள் அதிக எண்ணிக்கையில் தோன்றிடவே அவ்விலக்கியங்களைக்கொண்டு பின்னர் பிரபந்த இலக்கணங்கள் தோன்றின. அப்பிரபந்த இலக்கண நூல்களில் தொன்மையானது ‘பிரபந்த மரபியல்’ என்பதாகும். பின்னர் ‘பிரபந்த திரட்டு’ ‘பொருட்தொகை நிகண்டு; சதுரகராதி’ ஆகிய இலக்கண நூல்களும் தோன்றின. இவற்றைத் தவிர்த்துத் தமிழ்ப் பாட்டியல் நூல்களும் தோன்றின. எனவே தமிழ்ச் சிற்றிலக்கியங்களுக்கு ஒரு சிறப்பு. சிற்றிலக்கியங்கள் பன்னூறு தோன்றியது போலவே அவற்றிற்குரிய இலக்கண நூல்களும் பல தோன்றின. பிரபந்த வகைகளை 96 என்று வகுக்கின்றன.
‘”பிள்ளைக்கவி முதல் புராணம் ஈறாகத்
தொண்ணூற்றாறு எனும் தொகையதான.”
எனக் கூறும் ‘பிரபந்த மரபு நூலின் முதல் சூத்திரம் ஆகும்.
ஆனால் பாட்டியல் நூல்கள் 96 வகைகளைக் குறிப்பிடவில்லை. பன்னிரு பாட்டியல் 62 வகைகளையும், வெண்பா பாட்டியல் 53 வகைகளையும், நவநீதப்பாட்டியல் 45 வகைகளையும் கூறுகின்றன.சிற்றிலக்கியங்கள் வகைப்பாடு என்ற முறையில் 96 என்று கூறும் அளவிற்கு பரந்து விரிந்து கிடந்தாலும் பல வகைகள்் சிறப்பின்றித் திகழ்கின்றன. சிற்றிலக்கிய வகையில் தலைமைகொண்டு திகழ்வனவாக - ஆர்றுப்படை, அந்தாதி, மாலை, பதிகம், கோவை. உலா, பரணி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், தூது, சதகம், மடல், பள்ளு , குறவஞ்சி, ஆகிய 14 வகைப்பாட்டைக் குறிப்பிடலாம்.
சிற்றிலக்கியக் கொடை தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்று எண்ணும் போது சிற்றிலக்கிய அமைப்பு, தமிழ் மொழியின் யாப்பு இலக்கணம் யாப்பு அமைப்பைக் காப்பாற்றிவருவதைக் குறிப்பிடலாம். இன்ன இலக்கியம் இன்ன வகை- யாப்பில் பாட வேண்டும் என்று பாட்டியல் இலக்கணமரபு கூறுவதால் தமிழ் மொழியின் யாப்பு இலக்கணம் காக்கப்பெற்றுள்ளது எனலாம்.
அகவல் இலக்கியம் அகவற்பாவால் பாடப்பெற வேண்டும் என்பதும் அரசன் விருத்தம் கலித்துறை, விருத்தம், கலித்தாழிசையால் பாடப்பட வேண்டும் என்பதும் அலங்காரப் பஞ்சகம் என்பது வெண்பா, கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், வண்ணம் ஆகிய ஐந்தும் மாறி மாறிப் பாட வருவது என்பதும் இரட்டை மணிமாலை என்பது வெண்பா, கலித்துறையால் பாடப்பெறுவது என்பதும் இது போன்று கோவை இலக்கியம் கட்டளைக் கலித்துறை யாப்பில்்400 பாடல்களால் பாடப்பட வேண்டும் என்பதும் விதி..(முனைவர் பழ. முத்தப்பன்.)
....................................................தொடரும்.................................... .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக