செவ்வாய், 26 மே, 2015

அகநானூறு – பொன்மொழிகள் – பகுதி - 2

அகநானூறு – பொன்மொழிகள் – பகுதி - 2
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
பயன் இன்மையின் பற்றுவிட்டு ஒரூஉம்
நயனில் மாக்கள் போல ..
                                             அந்தி இளங்கீரனார்,அகநா. 71 : 1 -3
செல்வம் நிறைந்தாரைத் தேர்ந்து அவரை அடையும் பொருட்டுச், செல்வம் குறைந்தார் இனிப் பயன்படார் எனக் கருதி அவரை விட்டொழித்து நீங்கும் நன்றியில்லாத மாக்களைப் போல.

அரும்வொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்
பெரும் பேரன்பினர் தோழி.........
மாமூலனார், அகநா. 91 :8, 9
தலைவி வாழி பெறுதற்கரிய பொருள் விருப்பத்தால் தலைவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றார் ஆயினும் நம்மீது பேரன்புடையவர்.

உள்ளாங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச்சொல் நாணி
வருவர்
                      பாலை பாடிய பெருங்கடுங்கோ, அகநா.111 : 1 - 3
 தலைவி ! தம்மிடம் உள்ள பொருள் போதும் என்று மகிழ்ச்சி அடையாமல்,பகைவர் இகழந்து கூறும் அம்பு போன்ற சொல்லிற்கு நாணி மேலும் பொருள் ஈட்டும் பொருட்டுச் சென்ற நம் தலைவர் விரைந்து வருவார்.

கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
                    நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்,அகநா. 112 : 11,12
சான்றோர், மிகுந்த காதல் கொண்டார் ஆயினும் பழியுடன் வரும் இன்பத்தை விரும்பமாட்டார்கள்.



நன்றுஅல் காலையும் நட்பில் கோடார்
                                                             கல்லாடனார்,அகநா. 113 : 1
நட்பிற் சிறந்தோர், நண்பர்கள் ஆக்கம் இழந்து கேடு உற்ற போதும் அவர்பால் கொண்ட நட்பில் ஒருபோதும் மாறுபாடு கொள்ளார்.

உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி
                                   விற்றூற்று மூதெயினனார், அகநா. 136 : 19
எம் தலைவியோ மாதர்க்கு இன்றியமையாத கற்பைக் கடமாகப் பூண்டவள் என் உயிர்க்கு உடம்பாகும் பொருத்தம் உடையவள்.
                                                                                                
சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண்  நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
              எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், அகநா. 149 : 8 – 10
சுள்ளி என்னும் பெயர் கொண்ட பேரியாறு சேர அரசர்க்கு உரித்தானது. அவ்வழகிய யாற்றினது வெண்ணிற நுரை சிறுமாறு யவனர்கள் கொண்டு வந்த தொழில் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம், பொன்னை விலையாகக் கொடுத்துவிட்டு மிளகை ஏற்றிச் செல்லும்.

நம் நயந்து உறைவோர்த் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்
                        காவன் முல்லைப் பூதரத்தனார், அகநா. 151 : 1 – 3
வறுமையுற்றோர், தம்மை விரும்பி வாழ்வேரைப் பாதுகாத்துத் தாம்விரும்பிய இனிய சுற்றத்தோடு இன்பம் மிகும்படி மகிழ்ந்திருத்தல் இயலாது வருந்துவர்.
                                                                                             

நனவின் வாயே போல துஞ்சுநர்க்
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே
                                                            கபிலர், அகநா. 158 : 10, 11
நனவில் தோன்றும் உண்மை நிகழ்வுகள் போன்று,  உறங்குவோர் கனவிலும் நிகழ்வுகள் உண்மையெனத் தோற்றி மயக்கவும் கூடும்.

சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின்
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே
                      ஆமூர்க் கவுதமன் சாதேவனார், அகநா. 159 : 19 – 21
 தலைவியே,சிறப்பு மிக்க ஆமூரையே பரிசாகப் பெறுவதாயினும் நம் தலைவர் நின் பூண் அணி வனமுலை பொருந்துதல் மறந்து, சென்ற இடத்தில் தங்குவார் அல்லர், விரைந்து வருவார்.

கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து
          கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான், அகநா. 168 : 6, 7
பிறர்க்குக் கொடுத்தலாகிய கடமையை ஏற்று, ஒருபால் கோடாத நெஞ்சையுடைய உதியன் என்பான் இரவலர்க்கு ஓயாது உணவளிக்கும் தன்மையால் அவனது அடுக்களையில் எப்பொழுதும் ஆரவாரம் மிகுந்திருக்கும்.
                                                                              
அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் ...
                                     முள்ளியூர்ப் பூதியார், அகநா. 173 : 1- 3 
அற நெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை நடத்துவதும் உவந்து ஏற்ற சுற்றத்தாரின் துன்பங்களைப் போக்குவதும் ஆகிய இச்சிறப்புகள் முயற்சியும் ஊக்கமும் இல்லா உள்ளம் உடையோர்க்கு இல்லையாகும்.

இரு பெரு வேந்தர் மாறுகொள் வியன் களத்து
ஒரு படை கொண்டு  வரு படை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் ...
      மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், அகநா.174 : 1 – 3
பேரரசர் இருவர் தம்முள் பகை கொண்டு போரிடும் பெரிய போர்க்களத்தே, ஒப்பற்ற தன்படையைக் கொண்டு தன்முன் வருகின்ற படைகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யும் போர்க்கள வெற்றியாகிய செல்வமே பெருமை உடையது, அப்பெருமையே நிலைபெற்ற செல்வம் ஆகும்.

என்ன கடத்தளோ மற்றே தன்முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி
                    மருதம் பாடிய இளங்கடுங்கோ, அகநா. 176 : 21. 22
தலைவனே ! நின் மனைவி என்ன கடப்பாடு உடையவளோ? ஓவியர் பார்த்து எழுதுவதற்குக் காரணமாக விளங்கும் தன் முகத்தினது அழகு கெடுமாறு ஏக்கமுற்று அழுதனள்.

கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வன் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்னராட்டி ...
                           மதுரை மருதன் இளநாகனார், அகநா. 184 : 1 – 3
தெய்வத்தன்மை பொருந்திய கற்புடன், குடிக்குக் சிறப்பினைத் தரும் மகனைப் பெற்ற நற்குணங்கள் நிரம்பிய  இல்லத்தரசி.
                                                                                              
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும் தன் உடனுறை பகையே
                                                            பரணர், அகநா. 186 : 19, 20
அழகிய நெற்றியில் பசலை பரவிடத் தன் மனைவியை   விட்டு நீங்கும் கணவனே அவளுக்கு நீங்காப் பகையாவான்.
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
                                                                   பரணர்,அகநா. 198 : 12
தலைவி,  நிறைந்த கற்புடையாள் உயர்ந்த பெருமை உடையாள்.
                                                                                          
உருகெழு  பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு
அலரும் மன்று பட்டன்றே ...
                                                      மாமூலனார், அகநா. 201 : 9, 10
 தலைவியே ! அச்சம் பொருந்திய பெரிய கடலானது நிறைமதி நாளில் ஆரவாரித்து எழுந்தாற் போல, ஊரார் கூறும் அலரும் மன்றின் கண் பரவியதே.

உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பில்
செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்
 தையல் நின்வயின் பிரியலம் யாம் ...
                                                               நக்கீரர், அகநா. 205 : 1 – 3
 தோழீ ! உயிருடன் கலந்து ஒன்றியோர் போல; பல பிறவிகளிலும் தொடர்ந்து வரும் நட்பினால் குற்றமற்ற நெஞ்சத்தால் கலந்தோர் போல;  பெண்ணே, நின்னை விட்டு என்றும் பிரியமாட்டேன் என்றாரே?
                                                                               -----  தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக