வெள்ளி, 11 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 49 - 51

     நற்றிணை – அரிய செய்தி – 49            
புன்னையது நலன்
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வையாகும் என்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே
………………………………. நற்.172 : 1 – 5
 தலைவனே ! தோழியர் கூட்டத்தோடு விளையாடிய நாங்கள் – ஒரு நாள் புன்னை விதையை வெள்ளிய மணலுள் அழித்தி விளையாடியபின் அதனை மறந்து போனோம்/. அவ்விதை வேரூன்றி  முளைத்துத் தோன்ற அதனைக் கண்டு மகிழ்ந்த நாங்கள் நெய்யோடு கலந்த இனிய பாலை நீராக ஊ ற்றி வளர்த்தோம். அதனைக் கண்ட அன்னை ; “ நீங்கள் வளர்க்கும் இப்புன்னை உங்களை விடச் சிறந்ததாகும் ; அது உங்களோடு பிறந்த தங்கையாகும் தகுதி உடையது காண்பீர் “ என்று அப்புன்னையின் நலனை அன்னை கூறினாள்.
நற்றிணை – அரிய செய்தி – 50            
நிறம் மாற்றும் ஓந்தி – இசை கேட்கும்
கானம் வெம்பிய வறங்கூர் கடத்திடை
வேனில் ஓதி நிறம்பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடுநிலை யாஅம் ஏறும் தொழில
………………. நற்.186 : 5 – 8
 அச்சமுடைய காட்டு வழியில்  – வேனிற் காலத்தில்  மாறி மாறித்தன் நிறம் வேறுபடுகின்ற ஓந்திப் போத்து யாமரத்தில் ஏற இயலாது வருந்தும் – அவ்வழிச் செல்லும் பாணர் தம் வருத்தம் தீரச் சிறிது பொழுது யாழ் இசைக்க – அவ்விசையைக் கேட்டு ஓந்தி தன் வருத்தம் தீர்ந்து அந்த யாமரத்தின் மீது ஏறும்.
நற்றிணை – அரிய செய்தி – 51            
வலிமையோ – எளிமையோ ?
கொலைவல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பிஅம் சினை வெரூஉம்
……………………. நற். 189 : 7 – 9

 கொலைத் தொழில் வேட்டுவன்  விரித்து வைத்த வலையை அறுத்து விட்டோடும் காடின்கண்ணுள்ள சேவற் புறா – சிலந்திப் பூச்சி தன் வாயின் நூலாலே கட்டிய வலையைக் கண்டு அஞ்சும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக