திங்கள், 21 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 80 -82

நற்றிணை – அரிய செய்தி – 80 -82
கறையான் புற்று
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரைதேர் வேட்கையின் இரவில் பொகி
நீடுசெயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முரவாய் வள் உகிர் இடப்ப வாங்கும்
மதுரைக் காருலவியங் கூத்தனார். நற். 325 : 1 – 5
 சுரவழியில் – கறையான்களின் தொகுதி முயன்று புற்றுகள் சமைத்திருக்கும் . அப்புற்றுகளில் பாம்புகள் வாழும்; கவிந்த தலையையும் பருத்த மயிரையும் உடைய ஆண் கரடி தான் இரைதேடி உண்ணும் விருப்பத்தில் இரவின்கண்  அங்கு வாழும் கறையான்கள் முழுவதும் ஒழியுமாறு அப்புற்றுகளைத் தன் வளைந்த முனையை உடைய பெரிய நகங்களால் பறித்து புற்றின் உள்ளமைந்த புற்றாஞ்சோற்றை உறிஞ்சி இழுக்கும்.
நற்றிணை – அரிய செய்தி – 81
சாதலும் இனிதே
நாடல் சான்றோர் நம்புதல் பழிஎனின்
பாடில கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே காதல் அம் தோழி
அந்நிலை அல்ல ஆயினும்…….
அம்மூவனார்.நற். 327 : 1 – 4
 காதல் மிக்க என் தோழி !நம்மை நாடி ஒழுகும் பெரும் பண்புகள் அமைந்த நம் தலைவரை நாம் நம்பிக்கொள்வது பழி என்றால்  -  துயிலாது அழுகுன்ற கண்களோடு வருந்திச் சாதலும் இனியதாகும். அவ்வாறு இறத்தல் இயற்கைக்கு ஒத்தது அன்று ஆயினும் …..! ( அவன் சான்றோன் என எண்ணி ஆற்றியிருப்பாள்)
நற்றிணை – அரிய செய்தி – 82
மழை – அறிவியல்
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். நற். 329 : 11 – 12

 கருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக