செவ்வாய், 22 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 83 -84

நற்றிணை – அரிய செய்தி – 83 -84
பன்றிக் கறி விருந்து
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்
கல் அதர் அரும்புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி
குடிமுறை பகுக்கும் …………………………
கபிலர். நற். 336 : 1 – 6
 சொரசொரப்பான பிடரியை உடைய ஆண் பன்றி  தோலாய் வற்றிவிட்ட முலையை உடைய பெண் பன்றியுடன் சென்று திரண்ட  அடிப்பகுதியைக் கொண்ட தினைக்கதிரைஅளவிறந்து தின்னும்; அதனையறிந்த கானவன் கல் நெருங்கிய அரிய வழியிடையே தங்கிப் பதுங்கி வில்லினால் அம்பு எய்து; வெண்மையான தந்தத்தையுடைய ஆண் பன்றியைக் கொல்வான் : தான் கொன்ற பன்றியை அழகூட்டிய கரிய கூந்தலையுடைய மனைவியிடம் கொடுத்தான். அவளும் அப்பன்றியை அறுத்துத் தன் குடியினர் யாவர்க்கும் முறையுடன் பகுத்துத் தருவாள்.

நற்றிணை – அரிய செய்தி – 84
பொருள் வயிற் பிரிவு
உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே
…………………………………………
அரும்பெறல் பெரும் பயம் கொள்ளாது
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே
பாலை பாடிய பெருங்கடுங்கோ . நற். 337 : 1-2 ; 9 – 10

தலைவியால் பெறும் பெரிய பயனைக் கொள்ளாது ; பிரிந்துறைகின்ற மரபினவாய்ப் பொருளீட்டும் வழிகளை நாடிப் பொருளீட்டுவார் இவ்வுலகு தோன்றிய காலம் முதலாகத் தம்மை அடைந்தாரைக் காக்கின்ற மரபை மறந்தனரோ ; அங்ஙனமாயின் (இகழ்ச்சியாக ) சிறந்தவரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக