திங்கள், 4 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1153


திருக்குறள் -சிறப்புரை :1153

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். ----- ௧௧௫

அறிவுடைய காதலரிடத்தும்  ஒரு காலத்தில் பிரிவு என்பது நிகழ்தலால் ,  காதலர் கூறும் நின்னைப் பிரியேன் என்ற சொல்லையும் நம்பித் தெளிவது  அருமை உடையதாகின்றது.

நாடல் சான்றோர் நம்புதல் பழியெனின்
பாடில கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே காதல் அம்தோழி
அந்நிலை அல்லவாயினும் சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து
உலகம் கூறுவது உண்டு……………..” ------நற்றிணை.

தோழி..! நம்மை நாடி ஒழுகும் பெரும் பண்புகள் நிறைந்த நம் தலைவரை, நாம் நம்பிக்கொள்வது பழி என்றால், துயிலாது அழுகின்ற கண்களோடு வருந்திச் சாதலும் இனியதாகும். அவ்வாறு இறத்தல் என்பது இயற்கைக்கு ஒத்தது அன்றாயின், சான்றாண்மை மிக்கவர் தம் கடமையிலிருந்து குறைவுபட  மாட்டார் என்று கருதி உலகம் கூறுகின்ற வழக்கமான பண்பு தழுவி உளத்தில் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக