ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-28 ஈதலின் நன்றே இன்சொல்


தன்னேரிலாத தமிழ்-28
ஈதலின் நன்றே இன்சொல்


அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின் .

முகமலர்ச்சியுடன் இனிய சொற்களையே பேசும் பண்புடையனாயின், அஃது அகம் மகிழ்ந்து ஆற்றும் ஈகையைவிட ப் பெரிதும் நன்மை பயக்கும். இன்சொலால் ஈத்துவக்கும் இன்பம் பெறுக என்பதாம்.
வாங்க ,வணக்கம் ,நலமா என்பனவெல்லாம் இன்சொல் ஈதலின் முகவுரை என்க.

இன்சொல்லான் ஆகும் கிளமை இயல்பு இல்லா
 வன்சொல்லான் ஆகும் பகைமை…”சிறுபஞ்ச மூலம்.

 இனிய சொற்களால் உறவு உண்டாகும் ; கடும் சொற்களால் பகை உண்டாகும்.

இனியவர் என்சொலினும் இன்சொல்லே இன்னார்
கனியும் மொழியும் கடுவேஅனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினும் நோய் தீர்க்கும் மெய்பொடிப்பச்
சிங்கி குளிர்ந்துங் கொலும்.”  --நீதிநெறி விளக்கம்.

தீப்போலச் சுடும் வெங்காரமானது வெம்மை கொடுப்பதாயினும் நோயினை நீக்கி, உடல் நலம் என்னும் குளிர்ச்சியைத்தரும் ; நஞ்சானது, உடல் மகிழும்படியாகக் குளிர்ச்சியைக்  கொடுத்தாலும் பின்னர்க் கொன்றுவிடும். அதுபோல, நல்லோர் என்ன சொன்ன போதிலும் அவையாவும் நன்மை பயக்குமாதலால்   இனிய சொற்களேயாகும்.  தீயவர்களிடத்துக் கனிந்து தோன்றும்  சொற்கள் தீமை பயக்குமாதலால் அவை நஞ்சேயாகும்.

ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லன்
நோயிலை ஆகுமதி பெரும…..” --- புறநானூறு.

 பெருந்தகையே ! நீ, பரிசில் கொடுக்கவில்லையானாலும் அதற்காக நான் வருந்த மாட்டேன் ; நோயின்றி வாழ்வாயாக.

  ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
 கழல்தொடித் தடக் கைக் காரி…” --- சிறுபாணாற்றுப்படை.

பரிசில் பெற வருவோரிடம் இனிமையாகப் பேசிக் கொடை வழங்கி, ஒளி பொருந்தியதும் பகைவர்க்கு அச்சத்தைத் தரக்கூடியதுமான  வேலைத் தாங்கிய, தொடியணிந்த கையை உடையவன் காரி.

நசையாகு பண்பின் ஒருசொல்
 இசையாது கொல்லோ காதலர் தமக்கே.”குறுந்தொகை.

என் தலைவி விரும்புகின்ற பண்புடைய தலைவனே ! ‘ உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்ற ஓர் ஒப்பற்ற சொல்லைத் தலைவியிடம் சொல்ல உனக்கு இயலாதா.. ?

வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
 பொய்யோடு இடைமிடைந்த சொல்.” --- நாலடியார்.

 இந்த உலகம் முழுவதையும் பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் பொய் கலந்த சொற்களைப் பேசாதே.

நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
 அறியாமை என்று அறியல் வேண்டும்.” --- சிலப்பதிகாரம்.

நெறி தவறி நடப்போர் தகாதவற்றைக் கூறினாலும் அவர்கள் தம் அறியாமையால் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக