வெள்ளி, 10 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-32 கற்றோன் சிறப்பு


தன்னேரிலாத தமிழ்-32
கற்றோன் சிறப்பு

மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன் மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
 சென்ற இடம் எல்லாம் சிறப்பு.”----- வாக்குண்டாம்.

நாடாளும் மன்னனையும் குற்றமில்லா வகையில் கற்றறிந்த புலவரையும் ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றறிந்தவன் சிறப்புடையவனாவான். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.


தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை ஆசு இன்றிக்
கற்றல் கடன் அறிதல் கற்றார் இனத்தாராய்
நிற்றல் வரைத்தே நெறி. –அறநெறிச்சாரம்.

புகழும், நன்மை தீமைகளின் தகுதிகளை நன்கு அறிந்த உள்ள உறுதியும், மெய்ப்பொருளைத் தெளிந்து உணர்ந்து, மனத்தின்கண் எவ்விதமான குற்றமும் இல்லாமல், பிழையின்றிக் கற்கவேண்டிய அறிவு நூல்களைக் கற்றாலும் தான் ஆற்ற வேண்டிய  கடமைகளை அறிந்து கொள்ளுதலும், கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர்களைச் சேர்ந்து நிற்றலும் ஆகிய எல்லைகளைக் கொண்டதே கற்றவர்களுக்கு உரிய


நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச் சாம்
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச் சாம்நான்மணிக்கடிகை.

அழகும் இளமையும் வறுமையால் கெடும் ; குலத்து உயர்வும் குடிப்பெருமையும் கல்லாமையால் கெடும்.

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லோரும் சென்று அங்கு எதிர்கொள்வர்இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்
செல்லாது அவன் வாயில் சொல்.”நல்வழி.

செல்வம் நிறைந்தவன் கல்வியறிவு இல்லாதவனாயினும் அவனை எல்லோரும் கொண்டாடுவர். பொருளீட்டும் திறன் அற்றவனை தான் கொண்ட மனைவியும் பெற்ற தாயும் மதிக்க மாட்டார்கள். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் உண்மையாயினும் அவை எவரிடமும் மதிப்பைப் பெறா.

சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
 மேவல் எளிது அரிது மெய் போற்றல்….. “ ---- ஏலாதி.

உயிரை விடுதல் எளிது ; மேலான கல்வி கேள்விகளால் நிறைந்து ஒழுகுதல் அரிது. மனை வாழ்க்கை ஏற்றல் எளிது ; அதன்கண் ஒழுக்கத்தைக் காத்தல் அரிது.

1 கருத்து:

  1. கற்றவர்களுக்கு உரிய.....முற்றுப்பெறவில்லையே ஐயா?
    கற்றோன் சிறப்பினை அறிந்தேன். அருமை.

    பதிலளிநீக்கு