தமிழமுது –271– தொல்தமிழர் இசை மரபு:131. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி: பண்சுமந்த பாடல்கள்.சுந்தரர் செந்தமிழ்:
இவ்வுலக இயல்புகளிலே உழன்றும், இறைவனைத் தோழனாகவும் தொண்டனாகவும் தலைவனாகவும் கொண்டவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் “ஏழிசையாய் இசைப்பயனாய்் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழைஒண்கண் பரவையைத் தந்தாண்டனை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.”
என்று இறைவனைக்கண்டவர் முன்னைய இருவர் தேவாரங்களில் உள்ள நயமும் கவித்துவமும் இசையும் உணர்வும் இவர் பாடல்களிலும்் உண்டு. ஆலால சுந்தரர் இவ்வுலகிலே திருநாவலூர் ஆதிசைவராகிய சடையனார்க்கு இசைஞானியார் பால் “தீதகன்றுலகு முய்யத் திருவவதாரம் செய்தார்.” நரசிங்க முனையர் என்னும் பல்லவ வேந்தரால் மகன்மை முறையுடன் சீரும் சிறப்புமாக வளர்க்கப் பெற்றார் ; மாலயன் காணா ஆலமர் செல்வனால் வெண்ணெய்நல்லூரில் ‘அற்புதப் பழைய ஆவணங்காட்டி. ஆட்கொள்ளப் பெற்றார். அவ்விறைவன் அருள்வழி நின்று பரவையாரையும் சங்கிலியாரையும் திருமணம் புரிந்தார். தம்பிரான் தோழராய் என்றும் மணக்கோலந் தாங்கி இன்ப விளையாட்டுகள் நிகழ்த்தினார். சேரமான் பெருமாளைத் தோழமைகொண்டார். மூவேந்தரும் உடனிருந்து பரவத் திருப்பதிகம் பாடினார். மாதொருபாகனைத் தூதெனக் கொண்டார். அவ்விறைவனாற் பொன்னும் பொதிசோறும் பெற்றார். மற்றும் பல அற்புதங்கள் நிகழ்த்தினார். இறுதியில் இறைவன் அருளிப் பாட்டால் களையா உடலோடு வெள்ளானை மேற்கொண்டு சேரமானுடனாகத் திருக்கயிலையுற்றார். மேற்குறித்துள்ள வரலாற்றுச் சான்றுகளாக அவர்தம் பாடல்களில்.....
“நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முறையரையன் ஆதரித் தீசனுக்கு ஆட்செயுமூர் அணிநாவலூர்.”
“ என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்.”
“மாழை ஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை.”
“சங்கிலியோடு எனை புணர்த்த தத்துவனை.”
“அடியேற்கு எளிவந்த தூதனைத் தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன்.”
“செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை”
“பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்த்த நன்மையினார்” “மூவேந்தர் முன்னே மொழிந்த..
” இவ்வாற்றால் இவரது இன்பம் நிறைந்த பெருமித வாஅழ்க்கையின் இயல்பு புலனாகுமன்றோ..! நாவலர் ந.மு.வே.நாட்டார்.
......................தொடரும் ..................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக