செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 9

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 9
மாடு - செல்வம்
உறை அமை தீம்தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நல்மா மேனி
சிறுகுழை துயல்வரும் காதில் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை உணவின் கிளைவுடன் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்
 கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 158 - 165

பறவைகள் எழும்போதே எழுந்துவிடும் ஆயர்மகள் – குடைக்காளானின் முகிழ் போலும் முகிழை உடைய உறையிட்டு இறுகிய  தயிரைப் புலிபோலும் முழக்கத்தை உடைய மத்தினை  ஆரவாரிக்கும்படி  கயிற்றை வலிந்துக் கடைந்து, வெண்ணெயை எடுத்த பிறகு, மோரைப் பானையில் ஊற்றுகிறாள் -  தலையின் மேலே மெல்லிய சுமட்டின்கண் அம்மோர்ப் பானையை ஏற்றிச் சென்று – புதிய மோரை விற்கும் நல்ல மாமை நிறமுடையவளும், சிறிய குழை அசையும் காதை உடையவளும் – மூங்கில் போன்ற தோளை உடையவளும் , அறல்பட்ட கூந்தலை உடையவளும் ஆகிய இடையர் மகள் மோர் விற்றதனால் கிடைத்த நெல் முதலிய உணவால்  தன் சுற்றத்தார் அனைவரையும் உண்ணச் செய்கிறாள் ;  தான் நெய் விற்ற  விலைக்குக் கட்டிப் பசும்பொன்னையும் விரும்பிக் கொள்ளாது எருமையையும், நல்ல பசுக்களையும் அவற்றின் கன்றுகளோடு வாங்குகின்றாள் ..
( பொன்னை விட ஆநிரை பெரிதெனப் போற்றினாள் ஆயர்மகள் ; அளை – மோர் ;  மூரல் – சோறு ;  தொடு தோல் – அடியை மூடாத செருப்பு ; அடிபுதை அரணம் – அடியை மூடும் செருப்பு .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக