தமிழமுது –174– தொல்தமிழர் இசை மரபு:
சான்றோர் ஆய்வுரை – 34
தமிழிசை ஆய்வறிஞர்ஆபிரகாம் பண்டிதர்.
ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகத்து 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது.
பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது.[3] இரண்டு பாகங்களாக வெளி வந்த இந்நூலில், மிகவும் அறியப்படாத பல தமிழிசை இராகங்கள் ஆராயப்பட்டு சுமார் 95 பாடல்கள் வெளியிடப்பட்டன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார்
பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. பரதரின் "நாட்டிய சாஸ்திரம்", சாரங்க தேவரின் "சங்கீத இரத்தினாகாரம்" முதலிய பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் விரிவாகக் கற்ற பண்டிதர் தன் ஆய்வுகளில் இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 20-24.3.1916-இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப் பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.(விக்கிபீடியா)
.............................................தொடரும்..................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக