தமிழமுது –186– தொல்தமிழர் இசை மரபு:46 .
தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர்.
தொல்காப்பியம் - கலியும் பரிபாட்டும்:
தமிழ் நிலத்தில் விளைந்த, காலத்தால் அழியாத அரிய கலைகளைப் போற்றி வளர்த்த பெருமைக்குரியவர் தொல்காப்பியர் .
. ” தொல்காப்பியர் வழியில் இயற்றமிழ்ப் புலவர் பெருமக்களும் இசைத்தமிழைப் பாணரும், நாடகத்தமிழை கூத்தரும் போற்றி வளர்த்தனர். முத்தமிழ் போற்றிய கலைஞர் பெருமக்களை மன்னர்கள் புரந்தனர்..”முத்தமிழ்” எனப் பழந்தமிழ் மக்கள் கொண்ட நுட்பம் பெரிதும் வியத்தற்குரியது. மனத்தின் சிறந்த இயல்புகளாக, அறிதல், உணர்தல், செயலாற்றல் என்ற மூன்றையும் முறைப்படுத்திக் காட்டுவர் உளநூலார். இம்மூவியல்புகளும் முத்தமிழுள்ளே அடங்கும் பெற்றியனவாம். இயற்றமிழுள் அறிதற் கூறும், இசைத்தமிழுள் உணர்வுக்கூறும், நாடகத் தமிழுள் செயற்கூறும் அடங்குகின்றன. ஆகவே முத்தமிழ் மனச் செம்மைக்கு வழிவகுத்தது ; செம்மை, முழுமைக்குச் செலுத்தியது ; செம்மையும் முழுமையுங் கொண்டு சிறந்த மனம், அறவினை பற்றி நின்றது ; அந்த அறம் அகம், புறம், ஆய இரண்டினும் பொருந்தி நின்றது. அறவழி படர்ந்த சமுதாயம் பண்பாட்டிலே தலைமையாகத் திகழ்ந்தது. அந்தப் பண்பாட்டின் அடிப்படையில், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று எழுந்த குரலே, காலத்தையும் வென்று இன்றும் ஒலிக்கின்றது.”
--- பேராசிரியர் சிவா.
தொல்காப்பியம் - கலியும் பரிபாட்டும்:
எட்டுத்தொகை நூல்களுள் கலிப்பாவினால் கலித்தொகையும் பரிபாடல் என்னும் பாவகையால் பரிபாடலும் அமைந்துள்ளன. இப்பொழுது நாம் பயிலும் இவ்விரு இலக்கியங்களும் தொல்காப்பியர் காலத்தே தோன்றியவையல்ல. அவர்காலத்துத் தோன்றியவை கிடைக்கப்பெறவில்லை இவையிரண்டும் பிற்காலத்தே தோன்றியவை என்பர்.
கலியாப்பு பிற யாப்பு முறைகளினின்றும் வேறுபட்டது. தரவு, தாழிசை, அம்போதரங்கம், அராகம், தனிச் சொல், சுரிதகம் ஆகிய உறுப்புகளைக் கொண்டது.
.........................................தொடரும்........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக