செவ்வாய், 24 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 3

பரிபாடல் – அரிய செய்தி - 3
உலகத் தோற்றம்
தீவளி விசும்பு நிலன் நீரைந்து
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின்வயிற் பரந்தவை உரைத்தோம்
கடுவன் இளவெயினனார். பரிபா. 3 : 4 – 10
நெருப்பும் காற்றும் வானமும் நிலமும் நீருமாகிய ஐம்பெரும் பூதங்களும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும்  - கோள்களில் நீங்கிய செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்னும் ஐவரும் – அசுரர்களும் - விதியின் மக்களாகிய ஆதித்தர் பன்னிருவரும் – பதினோர் உருத்திரர்களும் – அச்சுவனி தேவர் இருவரும் – இயமனும் அவன் ஏவலனாகிய கூற்றுவனும் – முத்திரத்து இருபத்தோர் உலகங்களும் – அவ்வுலகினுள் வாழும் உயிர்க் கூட்டங்களும் ஆகி விரிந்தவனே ! 

விளக்கம்:
அவ்விறைவனிடமிருந்து தோன்றிய உலகமாவது -  இறைவன் வடிவங்களாகத் திகழும் எண் வகை வடிவங்களாவன - வானம் காற்று தீ நீர் நிலம் என்னும் பூதங்கள் ஐந்தும் ;  ஞாயிறு திங்கள் வேள்விமுதல்வன் ( இயமானன்) ஆகிய மூன்றும்  இவ்வெட்டினையும் “ அட்டமூர்த்தங்கள்” எனப. கோள்கள் ஒன்பதனுள் ஞாயிறும் திங்களும் எண்வகை வடிவங்களுள் அடங்குதலானும் – இராகு கேதுக்கள் காணப்படாதன ஆகலானும் எஞ்சியவற்றைப் பெயர் கூறாது ஐவரும் எனத் தொகையாகக் கூறினார். ஐவர் என்றது செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்னும் கோள்கள் ஐந்தினையும் என்க.
(இதன்கண் உள்ள புராணக் கதைகளை மீட்டுருவாக்கி  அறிவியல் உண்மைகளை  அறியுமாறு ஆய்க.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக