தமிழமுது –277– தொல்தமிழர் இசை மரபு:137. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி: பண்சுமந்த பாடல்கள்.
பண் சுமந்த பாடல்களுக்காக இறைவன் மண் சுமக்கிறான். அவன் பொன்மேனி புண் சுமக்கின்றது ; அனைவரும் உழைக்க வேண்டும் ; உழைக்கத்தவறியோர் யாராய் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்பதையும் இந்தத் திருநிகழ்வு உணர்த்துகின்றது. யார் சதுரர்....யார் வல்லவர்..? என்ற ஒரு கேள்வியை மணிவாசகர் எழுப்புகின்றார்.
“தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றது ஒன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யான் இதற்கிலன் ஓர் கைம்மாறே.”
இறைவனொடு தனக்கு ஏற்பட்ட உறவால் ‘யாருக்கு ஆதாயம்’ என்று மணிவாசகர் கேள்வி எழுப்புகின்றார் ; மணிவாசகர் கடைக்கோடி ஆன்மாவான தான் பேரின்பப் பெருவெள்ளத்தில் நீந்தித் திளப்பதாக மகிழ்கின்றார்.
இறைவனுக்குத் தன்னிடமிருந்து பெற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று மணிவாசகர் எண்ணூகின்றார். மணிவாசகரிடம் இருந்து பெறப்பட்ட திருவாசகம் ஊழிக்கலத்தில் தன் தனிமைத் துயரத்தைத் தவிர்க்கும் என்று இறைவன் கருதுகின்றார், ஆன்மாவை ஈடேற்றுவது இறைவனின் கடமை, உலகத்தில் உள்ள ஆன்மாக்களை ஈடேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு உலகத் தலைவனின் பொறுப்பு. திருவாசகத்தை ஓதுகின்ற உயிர்கள் பிறவிப்பெருங்கடலில் நீந்திக் கரையேறும். திருவாசகம் ஓத,ஓத மனத்தின் குற்றங்கள் விலகும். மலங்கள் ஒடுங்கும், ஆணவம் அகலும், பிறவாப் பெருவாழ்வுக்கு ஒளி கிட்டும். திருவாசகம் ஓதுகின்ற உயிர்கள் பேரின்பப் பெருங்கடலில் நீந்தித் திளைக்கும். மணிவாசகர் தந்த திருவாசகத்தால் தம் கடமை எளிதானதால் தாமே பயன் பெற்றதாய் இறைவன் கருதுகின்றார்.
“ஒரு மொழியால் அறிவைப் பெறலாம் ;
ஒரு மொழியால் ஞானத்தைப் பெறலாம்;
ஒரு மொழியால் வீடுபேற்றை அடைய இயலும்.
வீடு பேற்றைக்கூட அடைய இயலும் என்று வழிகாட்டுவது சமயத்தமிழ்.” தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். ................................தொடரும் ...........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக