செவ்வாய், 14 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 6.

 களப்பிரர் _ களப்பாள் : 6.

களபப்பு நாட்டைச் சேர்ந்த களப்பிரர்தான் சோழநாட்டுக் களப்பாளை உருவாக்கினார்களா? களப்பிரரை களவர்/ கள்வர் என்றும் குறிக்கிறதே?

களப்பாள் எனும் சொல் கள- களம்  என்னும் சொல்லடியாகலாம். தமிழர்தம் தொன்மை நிலப்பகுப்பில் மருதமும் ஒன்று. மருத நில மக்களுக்கு களமர் என்றும் பெயர். களமர் என்றால் உழவர் / வீரர் என்பதாம். களமர், களவர், கள்வர் ஆகிய சொற்கள் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் இருந்து வருகின்றன. கள்வர் குலத்தார் அரச மரபினர் ஆவர். கள்வர் என்பது கள்ளர் வகுப்பினைக் குறிபிதாகும். “ கள்ளர்கள் கருநாடகப் பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு அவர்களிடமிருந்து மகாராட்டியர் செளத் என்ற வரி வாங்கி வந்ததுபோல் ஒரு வரியும் வாங்கி வந்திருக்கின்றனர்என்கிறா அறிஞர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். சங்க காலத்தில் தமிழகத்தின் வடக்கிலிருந்த வேங்கடநாட்டை அரசாண்ட புல்லி என்ற அரசர்  ‘கள்வர் கோமான் புல்லி’ (அகம்.61) என்று அழைக்கபடுகிறார். வேங்கடமலை தொண்டையர்க்கு (தொண்டைமான்) உரியது. அறிஞர் மு. இராகவையங்கார் கள்வர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்கிறார்.  களப்பிரரும் பல்லவ அரசர் ஆண்ட தொண்டை மண்டலம் தவிர சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

…………………….தொடரும்………………… 

திங்கள், 13 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 5

 களப்பிரர் _ களப்பாள் : 5

ஆயினும் சிலர் களப்பிரர் தாய்மொழி கன்னடம் அல்ல என்றும் பாலிபிராகிருதம் அவர்தம் தாய்மொழி என்றும் கூறுவதை இவர்கள்  மறுக்கிறார்கள். ’வேள்விக்குடிச் செப்பேடுஅளவரிய ஆதிராஜரை அகல் நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னும் கலி அரைசன் கைக்கொண்டான்என்று கூறுகிறது. மூவேந்தர்களையும் வென்று ஈழத்தையும் வென்று சுமார் முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிரர் குறித்து அறிந்து கொள்ள, போதிய சான்றுகள் இல்லை. வரலாற்றுச் சுவடுகள் எதுவுமே இல்லாமல் தமிழகம் இருந்திருக்கிறது, அப்படியெனில் களப்பிரர்கள்  கலகக்காரர்களா / அரச மரபினர்களா..?

கன்னட தேசத்தின் வரலாறு (கன்னட இதிஹாஸ தர்ஸன்) எனும் நூலும் பழைய கன்னட சாசனமும் இப்போதைய சிரவணபெளகொள பகுதியே பழங்காலத்தில் களபப்பு நாடு என்று பெயர் பெற்றிருந்தது என்றும் களபப்பு நாடு களவர ராச்சியம் என்பது மைசூர் பிரதேசமே என்றும் கூறுகின்றன. களவர் நாடு, களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு சாசனங்களிலும் கூறப்படுகின்றன. இச்சான்றுகளினால் கன்னட நாட்டவராகிய  களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான களப்பிர நாட்டை அரசாண்டனர் என்று தெரிகிறது. அவர்கள் ஏறத்தாழ கி.பி. 250இல் தமிழகத்தைக் கைப்பற்றி அரசாண்டனர் என்கிறார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.
 ……………………………………தொடரும்…………………….. 

ஞாயிறு, 12 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 4.

 களப்பிரர் _ களப்பாள் : 4.

வேள்விக்குடிச் செப்பேடு, தளவாய்புரச் செப்பேடு ஆகியவற்றை ஆராய்ந்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூறுவதைத் தளவாய்புரச் செப்பேடு களப்பாழர் (களப்பாளர்) என்று கூறுகிறது.  “கடிராறு கவனலங்கல் களப்பாழர் குலங்கலைந்தும்என்றும்களப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோன் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்என்று தளவாய்புரச் செப்பேடு (வரி, 131-132) கூறுகிறது. எனவே களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்று கூறுகிறார்.

மேலும் அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமிகளப்ரர், களப்பரர், களப்பிரர், களப்பாளர், களப்பாழர் என்றெல்லாம் அழைக்கப்படுவோர் களப்பிரர்களே. இவர்கள் தமிழர் அல்லர் திராவிட இனத்தைச் சார்ந்த கன்னட வடுகர்.”  என்றும் கூறுகிறார். ………………………. தொடரும்…………………………………….. 

சனி, 11 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 3.

 

களப்பிரர் _ களப்பாள் : 3.

தமிழக வரலாற்றில்இருண்ட காலம்என்று ஒரு காலப் பகுதியை வரலாற்றறிஞர்கள் சுட்டுகின்றனர். இது, கடைச்சங்க காலத்தின் பிற்பகுதியாகும். கி.பி. 250 முதல் 550 வரை தமிழகத்தைக் களப்பிரர்கள் அரசாண்டனர் என்பர்.

கடைச்சங்க காலத்தின் இறுதியில் அரசாண்ட சேர அரசன் கோக்கோதை மார்பன், கொங்கு நாட்டை ஆண்ட கணைக்கால் இரும்பொறை, பாண்டிய நாட்டை ஆண்ட தலையாலங்கானத்துச் செருவெண்ற நெடுஞ்செழியன், சோழ நாட்டை ஆண்ட செங்கணான் ஆகிய அரசர்களைப் போரிலே வென்று சேர சோழ பாண்டிய நாடுகளோடு துளு நாடு, கொங்கு நாடு, இரேணாடு ( பல்லவ நாட்டின் ஒரு பகுதி) ஈழ நாடு ஆகியவற்றையும் களப்பிரர் கைப்பற்றினர் என்கிறார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.

களப்பாளில் இருந்தவர்களே களப்பிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்களப்பாள்என்ற  சோழ நாட்டு ஊர் ஒன்றில் முற்காலத்தில் வாழ்ந்துவந்த அரசியல் தலைவன் ஒருவன்களப்பாளன்என்று சிறப்பித்து வழங்கப் பெற்றமையால் அவன் வழியினர் களப்பாளன் எனவும் களப்பராயர் எனவும் குடிப்பெயர் பெற்று, பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே தமிழராகிய களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரேயாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஒத்துக்கொள்ளத் தக்கதன்று என்று கூறுகிறார்.

................... தொடரும்............

வெள்ளி, 10 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 2.

 

களப்பிரர் _ களப்பாள் : 2.

களப்பாள், இது ஏழு ஊர்களுக்குரிய பொதுப் பெயர். நடுவக் களப்பாள், கோயில் களப்பாள், அகரம் களப்பாள் ,தூரி களப்பாள், துயிலி களப்பாள், நருவளிக் களப்பாள், நாராயணபுரம் களப்பாள் என்பவை அருகருகே இருக்கும் ஏழு ஊர்களாகும்.

களப்பாள், வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஓர் ஊர். இன்று, இருந்த இடம் தெரியாமல் மண்மூடிப் போன கைலாசநாதர் கோயில், கற்சிலைகளும் இலிங்கங்களும் சிதறிக் கிடந்த இலிங்கத்தடி, பொலிவிழந்த திரெளபதி அம்மன் கோயில், அரண்மனைக் குளம், இராஜபாளையத் தெரு, இப்படி அரசர்களோடு தொடர்புடைய எச்சங்கள்! அரண்மனையே இல்லாத ஊரில் அரண்மனைக் குளம் எனும் பெயர் எப்படி வந்தது என்று கேட்டேன், “அரண்மனைக் குளத்துக்குள்ளே ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது என்றார் அந்தப் பெரியவர்.-----------------------------தொடரும்…………………….

வியாழன், 9 மார்ச், 2023

 

களப்பிரர் _ களப்பாள் : 1.

பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்க வேண்டும்,இல்லையேல் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களையாவது பெருமைப்படுத்த வேண்டும். அந்த வகையில் நான் பிறந்த ஊராகிய களப்பாளுக்குப் பெருமை சேர்த்த திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயர் என்கிற மு. சுவாமிநாத மாதவராயர் அவர்கள் எழுதிய “களப்பாள் என்னும் திருக் களந்தை (1941), களப்பாள் சிவஷேத்திர விளக்கம் (1911), முப்பொருள் விளக்கம் (1911) என்னும் கிடைத்தற்கரிய மூன்று நூல்களையும் மறுபதிப்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிறந்த மண் –தாய் மண்! வாழ்வது எந்த மண்ணாயினும் சாவது தாய் மண்ணில்தான் எனும் கொள்கை நம் முன்னோர்களிடத்தில் இருந்தது; இன்றும் பலருக்கும் அந்த ஏக்கம் இருப்பினும் நிறைவேற்ற ஆள் இல்லை; நிறைவேற வழியும் இல்லை. நகர்ப்புறத்தில் வாழ்வோர்க்குப் பிறந்த மண்ணின் பெருமை தெரியாமல் போவதில் வியப்பொன்றும் இல்லை.

களப்பாள், அன்று அந்த மண்ணில்…. அந்தச் சிவந்த மண்ணில், பண்ணைகள் வளமாக இருந்தன; பாட்டாளி வர்க்கமும் பலமாக இருந்தது. செங்கொடியும் சிவப்புத்துண்டும் சிவப்புச் சட்டையும் பண்ணைகளுக்குச் சிம்ம சொப்பனமாகிவிட்ட காலம் 1946,இல் நடந்த நாணலூர்க் கலகமும் களப்பாள் கலவரமும் பண்ணைகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அன்று அந்த ஊரில் உயரே பறந்த ஒரே கொடி செங்கொடி மட்டுமே. நிலப்பறி இயக்கம் நடந்தது; நில உச்சவரம்பு வந்தது. செங்கொடிகளின் அமாவாசை கூட்டமும் உழுதொழில் வேலை நிறுத்தமும் பண்ணைகளைத் தூங்கவிடாமல் செய்துவிட்டன; பெருநிலக்கிழார்கள் இடம்பெயர்ந்து விட்டனர். இன்று அந்த ஊர்……. ஒரு பெரிய திருவிழா நடந்து முடிந்ததைப் போல ஆரவாரமின்றி….! -------------------தொடரும்…………….

புதன், 1 பிப்ரவரி, 2023

அமேசான் கிண்டில் பதிப்புகள்.

 

அன்புடையீர் வணக்கம், மேற்குறித்துள்ள நூல்களைப் படித்து மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன்...நன்றி..