வெள்ளி, 25 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 15

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 15
கடல் வாணிகம்
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்
அரம் போழ்ந்து அறுத்த கண்நேர் இலங்கு வளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள் உப்பு
 பரந்து ஓங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல்
 விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்று ஆங்கு
ஐம்பால் திணையும் கவினி அமைவர
மாங்குடி மருதனார், மதுரைக்.6: 315 – 326

ஒலிக்கும் கடல் தந்த ஒளியுடைய முத்து . அரத்தால் கீறி அறுத்துச் செய்யப்பட்ட நேரிய வளை ;  வணிகர்கள் கொண்டுவரும் பண்டங்கள் ;  வெள்ளிய உப்பு ;  கரும்புக்கட்டியோடு சேர்த்துப் பொரித்த புளி ;  கடற்கரை மணற் பரப்புகளில் – வலிய கையையுடைய திமிலர், கொழுவிய மீன்களை அறுத்த, துடியின் கண்போல் அமைந்துள்ள உருண்டைத் துண்டுகள் ; ஆகிய இவற்றை ஏற்றிய சீரிய மரக்கலங்களைப் பெரு நீராகிய கடலில் செலுத்தும் மீகாமர் ; அகன்ற இடத்தையுடைய யவனம் முதலிய நாடுகளிலிருந்து வந்தவர் , இவ்விடத்தில் உண்டாய பேரணிகலன்களைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்ல பலரும்  ஒருங்கு கூடுவர்.  தங்களுடன் கொண்டு வந்த குதிரைகளோடு இப்பொருள்களும் நாள்தோறும் முறை முறையே மிகுவதால்  பல செல்வமும் நெருங்கி விளங்கும் இடம் நெய்தல் நிலம் .  பாண்டி மண்டலத்தின்கண் இவ்வாறு மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல் என்ற ஐந்து கூறுகளை உடைய நிலங்களும் அழகு பெற்று விளங்கும்.
 பாண்டிய நாடு ஐவகை நிலங்களும் அமையப்பெற்றது, ஆதலின் பாண்டியனுக்கு ‘பஞ்சவன்’ எனப் பெயர் உண்டாயிற்று.
( பரதர் – பண்ட வாணிகர் ; கூலம் – பல்பொருள் ; செறு – பாத்தி ; திமிலர் – படகில் சென்று மீன் பிடிப்பவர்; துணியல் – துண்டு ; பெருநீர் ஓச்சுநர் – கடலில் மரக்கலங்களை இயக்கும் மீகாமர்.) 

1 கருத்து: