செவ்வாய், 26 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 86. பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

 சான்றோர் வாய் (மைமொழி : 86.   பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

                         தொல்காப்பியர்,  நிலவியல் சூழலியல், தொழில்,  இன்னபிற முறைகளை ஆராய்ந்து முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றிப் பார்த்தறிந்தறிந்து  மக்கள் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, சிந்தித்து வகுத்தளித்தவற்றைக் காண்போம்.

      தலைவனும் தலைவியும் ஒத்துணர்ந்து களவு கற்பு என்னும் நிலையில் ஒழுக்கம் தவறாது நின்று மணம் செய்துகொள்வதை  இருவகையாகக் கூறுவார்.

கற்பு மணம் :

 

1.”கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.” – 1088.

கற்பு என்று கூறப்படுவது, வதுவைச் சடங்குடன் பொருந்திக் கொள்வதற்குரிய மரபினை உடைய  தலைவன், தலைவியைக் கொடுப்பதற்குரிய மரபினையுடையோர் கொடுப்பக் கொள்வது.

2, களவு மணம்:

”கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்து உடன்போகிய காலையானே.” – 1089.

 தலைவனும் தலைவியும் கொடுப்போர் இன்றியும் மணம் செய்து கொள்வர், அவ்விருவரும் களவு ஒழுக்கத்தில் இணைந்து உடன்போக்கு மேற்கொண்டு மணம் புரிந்து கொள்வர் என்பதாம்.

 

  களவு ஒழுக்கத்தின் இயல்பு:

 

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.” -1038.

 

 இன்பமும் பொருளும் அறனும் என்று சொல்லப்பட்ட அன்பொடு புணர்ந்த நடுவண் ஐந்திணியிடத்து நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்காலத்து என்றவாறு “ –இளம்பூரணர்.  

இல்லறம் ஏற்றல் :

“கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயிகட்கு உரிய.”-1098.

 

     கணவனே தன் தலைவன் என்ற மனத்திண்மையும் மாறாத அன்பும் நன்றின்பால் உய்க்கும் ஒழுக்கமும் மென்மை தன்மையால் பிறரைக் காக்கும்  தன்மையும் விருந்தினரைப் பேணலும் சுற்றத்தாரைக் காத்தலும் இவை போன்ற இல்லறக் கடமைகள் தலைவியின் பண்புகள் ; மனைவியின் வெயல்களை முகம் மகிழ்ந்து கேட்கும் நிலையில்  கணவனிடம் உரைத்தல்,  மனைக்கண் பழகும் பாணர் போன்றோர் கூற்றுக்களாக அமையும்.

 

இல்லறத்தின் பயன் :

”காமம் சான்ற கடைக் கோட் காலை

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.” -1138.

இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து, பெருமை பொருந்திய பிள்ளைகளுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது நினைத்தல் மனையறத்தின் கடந்தகாலப் பயனாகும்.

………………………தொடரும்………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக