வியாழன், 28 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 87. பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 87.   பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

மெய்ப்பாட்டியியல்:

மெய்ப்பாடு உணர்த்தினமையாற்  பெற்ற பெயர் என்பார் இளம்பூரணார். அஃதாவது உடம்பின்கண் தோன்றும் புறப்புலப்பாடுகள் பற்றிக் கூறுவதாம்.

“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்

கண்ணிய புறனே நானான்கு என்ப.”- 1195.

அறிவின்பம் பயக்கும் விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய 8 *4= 32 கருத்துக்களும் எண்வகைச் சுவைகளையும் வெளிப்படுத்தும் விறல் அல்லது சுவை 4*4 = 16.

“நாலிரண்டாகும் பாலுமா ருண்டே.” -1196.

 

 

 எண்வகைச் சுவைகளை வெளிப்படுத்தும் சுவை 8 ஆகும். அவையாவன …..

”நகை அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே  மெய்ப்பாடு என்ப. “ – 1197.

 சிரிப்பு, அவலம், இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்யின் புறப்புலப்பாடுகள் எட்டு வகைப்படும் என்பார். மேலும் இவ்வெட்டு வகைச் சுவை என்னென்னெ சூழ்நிலைகளில்  வெளிப்படும் என்பதையும் மிக விரிவாக எடுத்தியம்பியுள்ளார்.

வடமொழியாளர் மெய்ப்பாடுகள் ஒன்பது என்பர். மேற்கூறிய எண்வகைச் சுவைகளோடு  சமத்துவம்  என்ற ஒன்றினைக்குறிப்பர். சமத்துவம் அல்லது அமைதி என்பது  மெய்யின்கண் எவ்விதச் சலனமும் இன்றி இருப்பதாம்.  தொல்காப்பியர் சுட்டாத  சமத்துவம்  தமிழுக்குப் பொருந்துவதாக அவர் கருதவில்லை உடம்பில் அசைவற்று, புறப்புலப்பாடு ஏதுமின்றி இருத்தல் சுவையாகாது .

சமத்துவம் என்ற சுவைக்குச் சான்றாகக் கம்பர், ஓரிடத்தில் இராமனைக் குறிக்கும் பொழுது ”மணிமுடி கொண்டு இந்நாட்டினை  நீ ஆள்வதாக என்று முனிவர் கூறிய போதும் ; நாட்டைத் துறந்து பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிய வேண்டும் என்று கைகேயி கூறிய போதும் இராமனின் முகம் துயரத்தைக் காட்டவில்லை. “ அன்றலர்ந்த செந்தாமரை ஒத்தாக இருந்தது “ என்பார் கம்பர். இராமனின் இந்நிலையைச்   சமத்துவம் என்னும் சுவைக்கு எடுத்துக்காட்டுவர்.

 

 ………………………தொடரும்………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக