தமிழமுது –279– தொல்தமிழர் இசை மரபு:139. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி:
பண்சுமந்த பாடல்கள்.காரைக்காலம்மையார்:
சைவ அடியவர்களான நாயன்மார்களில் காலத்தால் முந்தியவர் காரைக்கால் அம்மையார். இவரது காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அம்மையார் சோழ நாட்டினர் ஆயினும் அவர் தில்லை எனுமிடத்தில் சிவனார் நாட்டியம் ஆடியதாக ஓரிடத்திலும் கூறவில்லை. மாறாக சிவன் ஆடிய தாண்டவங்கள் அனைத்தும் திருவாலங்காட்டில் என்றே தனது அனைத்துப் பதிகங்களிலும் எழுதியுள்ளார். மேலும் சிவனது தாண்டவத்தில் அவர் குறிப்பிடுவது ‘ஊர்துவ தாண்டவம்’ எனும் ஒன்றையே.
“ ஒப்பினை இல்லவன் பேய்கள் கூடி
ஒன்றினை ஒன்று அடித்து ஒக்கலித்து
பப்பினை இட்டுப் பகண்டை பாட
பாடி இருந்த அந்நரி யாழ் அமைப்ப
அப்பனை அணிதிரு ஆலங்காட்டு எம்
அடிகளைச் செடிதலைக் காரைக்கால் பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்து இன்பம் எய்து வாரே.”
(மூத்த திருப்பதிகம்-11) எனும் பாடலைச் சான்றாகக் காட்டலாம்.
காரைக்கால் அம்மையார் வாழ்ந்த கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே பஞ்சமரபு எனும் நூளை இயற்றிய அறிவானரும் வாழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில் அறிவானார் 16 தாண்டவங்களும் திரு ஆலங்காட்டிலேயே நடந்ததாக பஞ்சமரபில் விளக்கியுள்ளார். எனவே கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரை சிவன் என்னும் இறைவன் ஆடிய தாண்டவங்கள் அனைத்தும் ஆலங்காடு என்றிருக்க , தேவாரம் தோன்றிய காலத்தில் ஆலங்காடு செல்வாக்கினை இழக்க, தில்லை முதன்மை பெறுகின்றது. தில்லைக்கோயில் தில்லைவாழ் அந்தணர்களைச் சார்ந்ததாயும், அந்தணர்கள் வடமொழியாகிய சமஸ்கிருதத்தைத் தெய்வ மொழி என்று கருதியதாலும், வடமொழியில் எழுந்த புராணங்கள் தமிழ் மண்ணில் செல்வாக்கைப் பெற்றதாலும் சைவ சமயத்தில் வட நாட்டில் உள்ள ருத்திரனும் தென்னாட்டுச் சிவனும் ஒன்றே எனும் கருத்து வலுப்பெற்றதாலும் தில்லை வனம் எனும் ஊர், தில்லை என்றும் சிற்றம்பலம் என்றும் புலியூர் என்றும் பல்வேறு பெயர்களைப் பெற்றுச் சிறந்தது. அடியவர்கள் அனைவரும் தில்லையைக் கோயில் என்றே போற்றினர்.
தேவாரங்களில் அனைத்துத் தலங்களின் பெயர்கள் தலத்தில் உள்ள இறைவன், இறைவி பெயர்கள் தமிழிலேயே இருக்க, சோழர் காலத்திற்குப் பிறகு அனைத்துக் கோயில்களில் உள்ள இறைவன், இறைவி பெயர்கள் வட மொழியில் மாற்றம் பெற்றுவிட்டது. இறைவனோடு தொடர்புபடுத்தப்பட்ட அனைத்துச் செயல்பாடுகளும் வடமொழியாக மாற்றப்பட்டுவிட்டன.- முனைவர் சே.இரகுராமன். .................................தொடரும்..................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக