சனி, 7 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 10

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 10
மாலைக் காலம்  ( அன்றில் – பாம்பு மணி உமிழ்தல்)
மான்கணம் மரமுதல் தெவிட்ட ஆன்கணம்
கன்று உயிர் குரல் மன்றுநிறை புகுதர
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்குஇரும் பெண்ணை அகமடல் அகவ
பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பலம் தீம்குழல் தெள்விளி பயிற்ற
ஆம்பல் ஆயிதழ் கூம்பு விட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்
விண்தோய் பணவைமிசை ஞெகிழி பொத்த
வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்ப கானம்
கல்லென்று இரட்ட புள்ளினம் ஒலிப்ப
சினைஇய வேந்தன் செல்சமம் கடுப்பத்
துணைஇய மாலை துன்னுதல் காணூஉ
                                         கபிலர், குறிஞ்சிப் . 217 – 230
மான் கூட்டங்கள் மரங்களின் கீழ் திரண்டு கூடும் ; பசுக் கூட்டம் தம் கன்றுகளை அழைக்கும் ; ஊது கொம்பு போல் வளைந்த வாயினையுடைய அன்றில் பறவைகள், உயர்ந்த பெரிய பனையின் உள் மடலில் இருந்து தம் பேடுகளை அழைக்கும் ;  பாம்புகள் இரை தேடிச்செல்வதற்காகத் தம்மிடம் உள்ள மாணிக்க மணிகளை உமிழும் ; இடையர்கள் பல இடங்களிலும் நின்று ஆம்பல் என்னும் பண்ணினைத் தம் அழகிய இனிய குழலில் இசையை எழுப்புவர் ;  ஆம்பலின் அழகிய இதழ்கள் தளையவிழ்ந்து மலரும்; அந்தணர்கள் அந்திக்காலத்துச் செய்யும் கடன்களை இயற்றுவர் ; செல்வ மனைகளில் தொடி அணிந்த மகளிர் விளக்கு ஏற்றுவர் ;  காட்டில் வாழ்பவர் விண்ணைத்தீண்டும் பரண்களின் மேல் தீக்கடை கோலால் நெருப்பை உண்டாக்கி எரிப்பர். காட்டில் உள்ள விலங்களெல்லாம் கல்லென்ற ஓசையுடன் ஒன்றை ஒன்று அழைக்கும்;  பறவைகள் தம் கூடுகளிலிருந்து ஆரவாரம் செய்யும் ;  சினம் கொண்ட வேந்தன் படை நடத்திச் செல்லும் போர்க்களத்தைப் போல விரைந்த மாலைப் பொழுது வந்தது.
( தெவிட்ட – திரள ; பயிர் – அழைத்தல் ; மன்று – கொட்டில் ; வயிர் – ஊது கொம்பு ; பெண்ணை – பனை மரம் ; அகவ – அழைக்க ;  கொளுவி – கொளுத்தி ; ஞெகிழி – தீக்கடை கோல் ; இரட்ட – மாறி கூப்பிட.) 

வெள்ளி, 6 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 9

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 9
தேறல் உண்ட  மயில்
……………………………… அந்நிலை
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர          
ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ
ஆகம் அடைய முயங்களில் அவ்வழி
பழுமிளகு உக்க பாறை நெடுஞ் சுனை
முழுமுதற் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் ஏறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகுநறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக
                                  கபிலர், குறிஞ்சிப் . 184 – 195
தலைவன். தலைவியை அணுகிய அளவில்  தனக்கு இயல்பாகிய நாணமும் அச்சமும் இவளிடம் வெளிப்பட்டுத் தோன்றியமையால், விரைந்து அவனிடமிருந்து இவள் நீங்க முற்பட்டபோதிலும் அவன் விடாமல்,  அவளைக் கையால் அணைத்து, அவள் மார்பு, தன் மார்பில் ஒடுங்கும்படி தழுவினான்.
 பழுத்த மிளகு சிந்திக் கிடக்கின்ற கற்பாறையில் உள்ள நீண்ட சுனையில்,   மாவின் இனிய பழங்கள் உதிர்ந்தன, பலா விரிந்து தேன் சிந்தும் நறிய பழத்தானும் உண்டாகிய கள்ளின் தெளிவு நிரம்புவதால் தன்னை நுகரும் தேனீக்களை விலக்கி, தேனடைகள் உகுத்த தேனுடன், கலந்தது. அத்தேறலைத் தனக்கு உண்பதற்கு ஒத்த, எளிய நீராகக் கருதி, மயில் உண்டது, விழாக் கொள்வதற்கு உரிய இடங்களைக் கொண்ட அகன்ற ஊர்களில், விழா நடைபெறும் களத்தில் மேம்படச் சென்று, அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிப்ப ஆடுகின்ற மகள், கழாய்க் கயிற்றில் ஏறி ஆடும் போது தாளத்திற்கு ஆற்றாது தளர்வதுபோல் மயில் தளர்ச்சியடையும்.
 மயிலின் தளர்ச்சியும் ஆடுமகளின் தளர்ச்சியும் புணர்ச்சியின்பின் தலைவி அடைந்த நிலையைக் குறிப்பால் உணர்த்தும்.
( ஒய்யென – விரைந்து (ஒலிக் குறிப்புச் சொல்) ; ஆகம் – மார்பு ; முயங்குதல் – தழுவுதல் ; உக்க – வீழ்ந்த / உதிர்ந்த ; கொக்கு – மாமரம் ; புள் – பறவை (ஈண்டு வண்டுகளைக் குறித்தது,) ; பிரசம் – தேன் ; செத்து – கருதி ; அயின்ற – உண்ட ; தோகை – மயில் ; சாறு – விழா ; நந்தி – மிகுந்து ;  ஆங்கண் – அவ்விடத்து ; வியல் ஊர் -  பெரிய ஊர்.) 

வியாழன், 5 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 8

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 8
       
தலைவன் விடுத்த அம்பு
…………………………………. வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணிமுகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர
புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப
                                           கபிலர், குறிஞ்சிப் .169 – 175
நெடிய கோலையுடைய, உடுச் சேர்ந்த கடுவிசையையுடைய அம்பை, நன்றாக வலித்துத் தலைமையுடைய யானையின் அழகிய முகத்தே எய்தனன். அவ்யானையின் புள்ளியையும், புகரினையும் உடைய மத்தகம் அழகழியுமாறு, அம்புபட்டு உருவிய புண்களால் உமிழப்படும் குருதி, அதன் முகத்தே பரவிற்று, முருகனால் வருத்துதல் உற்ற மகளிர்க்கு, மறியறுத்து ஆடும் வெறியர் களத்தில், குருதி குதிக்குமாறு போலப் பெருகி வெளிப்படலால், அவ்யானை தன்னை மறந்து ஆண்டு நிற்றலாற்றாது புதுகிட்டுச் சென்றது.
( வார் கோல் – நீண்ட கோல் ; உடு – நாணைக் கொள்ளும் இடம் ; பகழி – அம்பு ; வாங்கி – வலித்து ; நுதல் – மத்தகம் ; அணங்குறு மகளிர் – வருந்துதல் உற்ற மகளிர் ;  நெடுவேள் – முருகன் ; ஆடுகளம் ;  வெறியாடல் களம்.)  

புதன், 4 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 7

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 7
தழை  உடுத்தி…
 கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா
பைவிரி அல்குல் கொய்தழை தைஇ
பல்வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்
மெல்லிரு முச்சி கவின் பெறக் கட்டி
                                           கபிலர், குறிஞ்சிப் .   101 -104
புற இதழ்களை பறித்து நீக்கிப் பான்பின் படம் போன்று அகன்று விளங்கும் அல்குலுக்குத் தழையாடையைக் கட்டி உடுத்தினோம். பலவாய் வேறுபட்ட நிறத்தைக்கொண்ட அழகமைந்த மாலைகளை எம்முடைய கரிய தலைமுடியில் அழகு பெறச் சூட்டிக்கொண்டோம்.
தலைவியும் தோழியும் நீராடி, மலர்கள் பறித்து, இடையிடையே கிளிகளை ஓட்டி, தழையாடை புனைந்து அணிந்து, தலையில் மாலை சூடி, அசோக மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தனர்.
( கிளை இதழ் – புற இதழ் ; கொய் தழை – நறுக்கி மட்டம் செய்யப்பட்ட தழையாடை ; உரு – நிறம் ; கவின் – அழகு ; செயலை – அசோகு.)  

செவ்வாய், 3 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 6

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 6

                                              99 மலர்கள்
…………………………. வள் இதழ்
ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
…….   ……..      ………       ………
மா இருங் குருந்தும் வேங்கையும் பிறவும்
                                      கபிலர், குறிஞ்சிப் .   61 – 95
 பெரிய இதழ்களையுடைய ஒள்ளிய சிவந்த காந்தள்பூ, ஆம்பல் பூ, அனிச்சம் பூ முதலாக குருந்தம் பூ வேங்கைப் பூ ஈறாகத் தொண்ணூற்றொன்பது மலர்களின் பெயர்கள் ஈண்டுக் குறிக்கப்பட்டுள்ளன.  
  தலைவியும் தோழியும் அருவியிலும் சுனையிலும் நீராடியபின் மரம், செடி,   கொடி அகியவற்றில் பூத்த மலர்களியும் பூக்களைல்ப்போல விளங்கும் இலைக் கொழுந்துகளையும் பறித்து அகன்ற பாறையில் குவித்தனர். இச்செயல் , மலர்கள்மேல் அவர்கள் கொண்ட வேட்கையைப் புலப்படுத்தும். இம்மலர்கள், நிறத்தாலும் வடிவாலும் வேறுபட்டவை. தனியாகவும் கொத்துக்களாகவும் பூப்பவை, ஓரிதழாகவும் பல இதழ்களும் கொண்டு விளங்குபவை; விரிந்தும் குவிந்தும் காட்சியளிப்பவை ; கிள்ளியும் பறித்தும் உதிர்த்தும் எடுக்கப் பெறுபவை ; ஒவ்வோர் இனத்திலும் பல்வேறு வகைகளாய்ப் பிரித்து அறியப்படுபவை ; தேன், மணம், தாது ஆகியவற்றால் பகுத்து உணரப்படுபவை ; இவையாவும் குறிஞ்சி நில மலைசாரலில் பூப்பவை. குறிஞ்சி நிலத்திற்கும் கூதிர்காலத்திற்கும் யாமப் பொழுதிற்கும் உரிய பூக்கள், பிற நிலப் பூக்களுடன் மயங்கியும்  காணப்படுகின்றன. 

திங்கள், 2 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 5

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 5
யானை முத்து
நெற்கொள் நெடுவெதிற்கு அணந்த யானை
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
                                        கபிலர், குறிஞ்சிப் .  35 - 37
நெல்லைத் தன்னிடம்கொண்ட நெடிய மூங்கிலைத் தின்பதற்காகத் தன் தலையை மேல்நோக்கி உயர்த்தி நின்று வருந்திய யானை, அவ்வருத்தம் தீர்வதற்காகத் தன்னுடைய முத்துக்கள் நிறைந்த கொம்பின்மேல் துதிக்கையை இட்டுக்கொள்ளும். அதன் கொம்புகளுக்கிடையே தொங்குகின்ற துதிக்கையின் காட்சியைப்போலப்  பஞ்சு போன்ற, தலை வளைந்த, ஈன்றணிமை நீங்கிய பெரிய தினைக்கதிர்கள், தினைத் தாள்களுக்கிடையே காணப்படும்.
                முற்றிய மூங்கிலின் அரிசி, குறிஞ்சி நில மக்களின்  உணவு – யானை, மூங்கிலை விரும்பியுண்ணும் – முத்துக்கள் விளையும் இடங்களில் ஒன்றாக யானையின் மருப்பும் கூறப்படும்.
( வெதிர் – மூங்கில் ;  அணந்த – அண்ணாந்த ; மருப்பு ; கொம்பு ; இறங்குகை ; தொங்கவிடப்பட்ட துதிக்கை ; துய் ; பஞ்சு ; வாங்கிய – வளைந்த ; குரல் – கதிர்.  ) 

ஞாயிறு, 1 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 4

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 4
தோழி அறத்தொடு நிற்றல்
இகல்மீக் கடவும் இருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
இருபேர் அச்சமோடு யானும் ஆற்றவென்
கொடுப்பின் நன்கு உடைமையும் குடிநிரல் உடைமையும்
வண்ணமும் துணையும்பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ
கபிலர், குறிஞ்சிப் .  27 – 34
தம்முள் மாறுபாடுகொண்டு மிக்குச் செயற்படும்  இரு பெரிய அரசர்களைச் சந்து செய்விக்கும் தொழிலை மேற்கொண்ட அறிவுடையாரைப் போல, உனக்கும், இவள் வருத்தத்திற்கும் அஞ்சுகின்ற இரு பெரிய அச்சத்தால் யானும் வருந்தாநின்றேன்.
இவளை, அவள் விரும்பிய தலைவற்கு மணம் முடித்துக் கொடுத்தபின்பு, எல்லாவற்றானும் இடையூறின்றி இனிது முடிதலையும், தனித்தனி ஒருகுடியாகாமல் இரண்டு குடியும் ஒத்து ஒரே குடியாய்ப் பொருந்துதல் உடைமையும் ;  குணத்தையும் சுற்றத்தின் உதவிகளையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பின்னரும் பலருடன் கலந்து உசாவாமல், நும்மையின்றித் தமியேமாய், யாங்களே துணிந்த, உயிர்க்குப் பாதுகாவலாய் அமைந்த, செய்தற்கரிய, இக்களவுமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நடந்தவாறு நீ நன்றாக அறிந்துகொள்ளும்படி நினக்குக் கூறுதல் அமைந்தேன், அதனைக் கேட்டுச் சினம் கொள்ளாதிருப்பாயாக.
 தலைவியால் விரும்பப்பட்ட தலைவற்கு மணம் முடித்துக்கொடுப்பதால், தலைவியின் இல்லற வாழ்வு எல்லா நிலைகளிலும் நன்றாக விளங்கும் என்றாளாக.
( இகல் – மாறுபாடு ; மீ – மிகுதி ; வண்ணம் – குணம் ; எண்ணாது – பலருடன் கூடி உசாவாது ; ஏமம் – பாதுகாவல் ;  அருவினை – செய்தற்கரிய களவு மணம் ; செப்பல் – சொல்லுதல்.)