வியாழன், 21 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 6

நெடுநல்வாடை அரிய செய்தி  : 6
மனை முகூர்த்தம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோள் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து
                                             நக்கீரர், நெடுநல் .  7: 74 – 79
                               விரிந்த கதிர்களைப் பரப்பும் அகன்ற இடததையுடைய கதிரவன், மேற்குத் திசை நோக்கிச் செல்வதற்கு விண்ணில் எழுந்தது.
 வடக்கிலும் தெற்கிலுமாகிய இரண்டு இடங்களில், இரு கோல்கள் நடப்பட்டு, அவற்றின் இடையே இடப்பட்ட குச்சிகளின், கிழக்கு மேற்காகத் தரையாக ஓடும், ஞாயிற்றின் கதிர்ப்ட்டு உண்டாகும் நிழல், ஒரு பக்கத்தைச் சாராமல் நேர் ஒழுங்காக வீழும் அமையம் குறித்துக் கொள்ளப்படும், அந்நாளில், அவ்வமையத்தில் அரனுடைய அரண்மனை அமைப்பதற்காகத் ”திருமுளைச் சார்த்து” என்னும் சடங்கு செய்யப்பெறும்.
                                      சிற்ப நூலை அறிந்த தச்சர்கள், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்துக் கட்டடங்கள் அமைக்கப்பெறும், அவர்கள், அரண்மனையின் ஒவ்வொரு பகுதியும் அமைய வேண்டிய திசைகளைக் கருத்தில் கொண்டு அத்திசைகளில் காவலாக நிற்கும் தெய்வங்களால் எக்குறையும் நேரா வண்ணம் அவற்றிற்கு வழிபாடுகளை நிகழ்த்துவர். பெரும் புகழுடைய மன்னர்களின் தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப மனைகளும் மண்டபங்களும் வாயில்களும் பாகுபடுத்தப்பட்டு அமைக்கப்பெறும்.
கணிதம்
                             சித்திரைத் திங்களில் முதல் பத்து நாட்களும், இறுதிப் பத்து நாட்களும் நீக்கி நடுவில் நின்ற பத்து நாட்களில் யாதானும் ஒரு நாளில், பகற் பொழுது பதினைந்தாம் நாழிகையில், வடக்கு தெற்காக அமைந்த கோல்களிடையே இடப்பட்ட இரு கோல்களின் நிழலும் ஒன்றன்மேல் ஒன்றாய் நேர்க்கோட்டில் விழும்.
( மண்டிலம் – ஞாயிற்று மண்டிலம் ; அரைநாள் – நண்பகல் ; தேஎம் – தேயம், திசை ; நூல் அறி புலவர் – சிற்பிகள்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக