தமிழமுது -21 - கடவுள் கோட்பாடு
- தொல்தமிழர் வழிபாடு.
சிறு தெய்வ வழிபாடு:
சங்கத் தமிழர் வழிபாடு – நடுகல்:
நடுகல் போரில் இறந்த வீரர்களின் நினைவாக, ஊருக்குப் புறத்தே
இருக்கும். ஓங்கிவளர்ந்த வேங்கையின் மலர்களை வெள்ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்து
மாலையாகச் சூட்டி வழிபடுதல், இது குறித்து….. அகநானூறு 131 ஆம் பாடல்…
“வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண்பர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேலூன்று
பலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுந கானம்…..” மதுரை மருதனிள நாகனார்.
நாம் கடந்து செல்லும் காடோ, சீழ்க்கை ஒலி பொருந்திய அம்பினது
தப்பாத் தொடையினையுடைய வெட்சி சூடின மறவர்கள்,
விடியற்காலையில் பசுக்கூட்டத்தைக் கவர்ந்து கொண்டு போகும் அச்சம் தரும் கொடிய பாலை
வழியினை கொண்ட்து,; வெட்சியருடன் போரிட்டு ஆனிரைகளை மீட்டுவரச் சென்ற கரந்தையார், அச்சுர
வழியைக் கடந்து நெடுந்தூரம் நடந்து வந்தமையால்
தம் தாயுடன் செல்ல மாட்டாது நடை தளர்ந்து நின்றுவிட்ட
கன்றுகளின் கண்ணின் கருமணியின் கடையினின்றும் சிந்துகின்ற நீரைத் துடைத்து அவற்றின்
துயரைப் போக்கினர் ; நிரைமீட்ட போரில் இறந்துபட்ட
கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து,
மயிற்பீலி சூட்டப்பெற்ற விளங்கும் சிறப்பினைக் கொண்ட நடுகல்லின் முன் ஊன்றிய வேலும்,
அதன்கண் சார்த்தப்பெற்ற கேடகமும் செல்லும் வழிதோறும் வேற்று வேந்தரது போர் முனையை ஒத்துக்
காணப்படும், அச்சம் தரும் இயல்பினை உடையது அக்காட்டுவழி.
( பாலைத்
திணைப் பாடல் --- தலைவி தரும் இன்பத்தினும் ஈதல் இன்பம் சிறந்தது எனக் கூறிப் பொருள் ஈட்ட வேண்டும் என வற்புறுத்திய
செஞ்சிற்கு தலைவன் கூறியது.)
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக