செவ்வாய், 3 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 91 . பட்டறிவியச் சிந்தனைகள். – ஜான் லாக். John Loke – 1632 – 1704.

 

சான்றோர் வாய் (மைமொழி : 91 . பட்டறிவியச் சிந்தனைகள். – ஜான் லாக். John Loke – 1632 – 1704.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

 “Nothing eas made by God for man to spoil or destroy.”

                    சிந்தனை ஒரு வெற்று இயக்கம், சிந்தனையால் பொருளறிவைப் பெறமுடியாது, அனுபவமே மனிதனுக்கு அனைத்து அறிவையும்  தருகிறது எனக் கூறும் தத்துவம் பட்டறிவியம் – பகுத்தறிவியத்திற்கு எதிரானது.

                 ஒவ்வொரு மனிதனும் தன் அனுபவத்தைத் தவிர வேறு எதையும் அறியவே இயலாது என்று உறுதியாகக் கூறி அறிவின் உறுதித்தன்மையையும் பொதுமையையும் கேள்விக்குறியாக்கிவிட்டார் ஹியூம்.” என்று கருதினார்.

   ஜான் லாக் :  ஐரோப்பியர், பட்டறிவியத்தின் முதன்மைச் சிந்தனையாளர். “சோதிக்காமல் உண்மையை ஏற்பதைக்காட்டிலும் ; சோதித்தறிந்து பொய்யை ஏற்பது மேலானது.” என்றார்.

 

                    இங்கிலாந்து உரிமைப் போரில் (1688 - 89) சிக்கி, நாட்டைவிட்டு வெளியேறி அயர்லாந்து சென்றார். அக்காலத்தில்,  “மனித அறிவாற்றல் பற்றிய ஆய்வு,” என்னும் நூல் தத்துவச் சிறப்புடையது. இது நான்கு பகுதிகளைக் கொண்டது., அறிவின் இயல்பு, வகை, பயன், வரையறை  என அறிவைப்பற்றிய ஆய்வு  அறிவு தருகிறது. இவரின் “அரசு பற்றிய இரு ஆய்வுகள்,” என்னும் நூல் அரசின் தோற்றம்,பணி, பயன், நோக்கம் பற்றிக் கூறுகிறது.

 

                   மீண்டும் இங்கிலாந்து வந்தவர்,அரசுப்பணியில் சேர்ந்து சமயப் பரப்புரையும் மேற்கொண்டார்.  அன்பே கிறித்துவத்தின் அடிப்படை என்றார். முப்பொருள் உண்மை, பிறவி, பாவம், புண்ணியம் முதலிய பழைய கருத்துக்களை எதிர்த்தார் அதனால் தூற்றப்பட்டார்.

 

          பகுத்தறிவியத்தின் பிறப்பிலுறை எண்ணங்கள், கொளகைகளை முற்றிலுமாக மறுத்தார். பிறக்கும் போதே எல்லோர் மனத்திலும் எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, கடவுள் என்பது பிறப்பிலுறை எண்ணமன்று. பிறப்பிலுறை எண்ணங்களே அறிவாகும் என்றால் அனுபவம், கல்வி பயனற்றதாக ஆகிவிடும்.

 

           மனத்தில் பிறப்பிலுறை எண்ணங்கள் இருக்கின்றன என்பதை மறுத்துப் புலன்கள் வழியாகவே மனத்தில் எண்ணங்கள் உருவாகின்றன,”அனுபவமே அறிவின் ஊற்று” என்பது இவர் முடிப………………தொடரும்……….

திங்கள், 2 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 90 . பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.-நிலையாமை.

 

சான்றோர் வாய் (மைமொழி : 90 .   பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.-நிலையாமை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

யாக்கை நிலையாமை :

மாந்தர் வாழ்வியல் உண்மைகளை ஆராய்ந்து அவற்றை வாழும் மக்கள் உணர வேண்டும் ; தம் வாழ்வை பயனுள்ள முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கில்,

 பேராசான் திருவள்ளுவர் நிலையாமை என்றோர் அதிகாரம் அமைத்துள்ளார்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு. – 336.

நேற்று இருந்தவர் இன்று இல்லை ; உடலை விட்டு உயிர் பிரியும் காலத்தை யார் அறிவார்..? நிலைத்திருப்பது என்று எதுவுமில்லை என்னும் பெருமையைக் கொண்டுள்ளது இவ்வுலகம்.

 

இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்

முதுநீர் உலகின் முழுவதும் இல்லை .: சிலப்பதிகாரம். 28.

181,182.

கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் ,தம் வாழ்நாள் எல்லையை இவ்வளவு காலம்தான் என்று வரையறுத்து அறிந்து கொண்டவர் எவரும் இலர். என்றார் இளங்கோவடிகள்.

 

காடு முன்னினரே நாடு கொண்டோரும்

நினக்கும் வருதல் வைகல் அற்றே.” – புறநானூறு; 359: 8,9.

பெரிய நாடுகளை வென்ற  முடி மன்னர்களும் முடிவில் சுடுகாட்டுத் தீயில் சென்று அடைந்தனரே, அவ்வாறே உனக்கும் காடு அடையும் நாள் வரும், என்றார் காவிட்டனார்.

அரிது அரிது மானிராய்ப் பிறத்தல் அரிதுஎன்னும் வாக்கிற்கிணங்க நாம் இவ்வுலகில் வாழ்வதற்கே உயரிய பிறப்பாகிய மானிடப் பிறப்பைப்  பெற்றிருக்கிறோம். வாழ்வியல் நெறிமுறைகளை நன்கு அறிந்துகொண்டால் வாழ்க்கை இனிக்கும் . நம் வாழ்க்கைகு  வழிகாட்டிகளாக நமது முன்னோர்கள் நமக்கு  நல்வழியைக் காட்டியுள்ளனர்.

தொல்தமிழர் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து எடுத்துரைத்துள்ளனர் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.

 

இந்தப் பாடல், பட்டறிவியச் சிந்தனையின் பாடம்.

 

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர் தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

5

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு

வானம் தண் துளி தலை இ, ஆனாது

கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று

நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்

10

முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

கணியன் பூங்குன்றனார் ; புறநானூறு, 192.

யாதும் ஊரே; யாவரும் கேளிர், என்னும் ஒற்றை வரியில் உலக மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ளார் புலவர்.

ஊர், எவ்வூராயினும் அவ்வூரும் நம் ஊரே ;  மக்கள் எவராயினும்  எல்லாரும் நம் உறவினரே என்று மாபெரும் மனிதநேயத் தத்துவத்தை அளித்துள்ளார்.

நமக்கு நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை ; துன்பமும் அது தீர்தலும் கூட நம்மால் விளைவதே; சாதலும் புதியதன்று அஃது உலகத்து இயற்கை நிகழ்வே ;  வாழ்தலை இனிது என்று மகிழ்ந்ததும் இல்லை ; வெறுப்பு ஏற்பட்ட பொழுது  துன்பமானது என்று ஒதுக்கியதும் இல்லை.

இடித்து முழங்கி பெரு மழை பெய்ததால் கற்களோடு மோதி தன் வழியில் பெருக்கெடுத்து ஓடும் பெரிய ஆற்றில் மிதந்து செல்லும்  மிதவை போல நம்முடைய அரிய உயிரும் நம் செயல்களுக்கேற்பவே  (முற்பகல் செயின் பிற்பகல் விளையும்) சென்று சேரும்; 

  ஆதலால், பெருமை உடைய பெரியோரைக் கண்டு வியத்தலும் இல்லை ;அதைவிட  எளியோரைக் கண்டு இகழ்தலும் இல்லை. என்றவாறு மனிதன்  வாழ்க்கையைப் போற்றி வாழ வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார்.

 

தொல்தமிழர் வாழ்வியல் சிந்தனைகளை உலகமக்களுக்கு உணர்த்திய பேராசான்கள் வாழ்ந்த நாடு, தமிழ்நாடு. தொல்காப்பியருக்குப் பின்னே வந்த புலவர் பெரு மக்களும் சான்றோர் வாக்கினை முன்மொழிந்து போற்றியதை மேற்குறித்துள்ள மேற்கோள்கள்  தெளிவாக உணர்த்துகின்றனவே……!

………………………தொடரும்………………….

 

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 89 . பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.-நிலையாமை.

 

சான்றோர் வாய் (மைமொழி : 89 .   பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.-நிலையாமை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

தொல்காப்பியர்  அகத்திணையாகிய எழுதிணையும்  சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார்.  அப்புறத்திணைகளுள் ஒன்றாக  நிலையாமையாகிய  காஞ்சி என ஒரு குறி  பெறுதலைக் குறித்தார்.

காஞ்சி தானே பெருந்திணைப் புறனே

பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே.” – 1023.24.

 காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம்.  அது, பாங்காதல்  அரிய சிறப்பினாற் பல நெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடைத்து..” – இளம்பூரணார்.

 நிலையாமை மூவகைப்படும்

1.1. இளமை நிலையாமை

2.2. செல்வம் நிலையாமை

3.3. யாக்கை நிலையாமை.

தொல்காப்பியர்,  நில்லா உலகம் என்றார்.அஃதாவது நிலைபேறில்லாத உலக இயற்கையைக் கூறினார்.

பழந்தமிழ்ப்புலவர் மதுரை கணக்காயன் மகனார் நக்கீரன், குறுந்தொகை 143 ஆம் பாடல்..

 

அழியல் ஆயிழை அன்பு பெருது உடையன்

 பழியும் அஞ்சும் பயமலை நாடன்

நில்லாமையே நிலையிற்று ஆகலின்” -143 : 1-3. ( தோழி தலைவிக்குக் கூறுவதாக அமைந்த பாடல்.)

ஆராய்ந்து அணிந்த அணிகலன்களை உடையாய், பயனைத்தரும் மலைநாட்டிற்கு உரிய தலைவன், நின்னிடம் அன்பு மிகுதியாக உடையவன், நின்னைக் களவில் நுகர்ந்து, வரையாது ஒழுகும் பழியை அஞ்சுபவன். பல்லாற்றானும் நில்லா உலகத்தில் நிலையாக உள்ளது நிலையாமை ஒன்றேயாகும்.

நில்லாமையே நிலையானது என்று தொல்காப்பியர் வழிநின்று சங்கப்புலவரும் கூறியதைக் காரல் மார்க்சுமாற்றம் என்ற சொல் ஒன்றே மாறாதது  என்று உலகில் எல்லாமே மாற்றத்திற்குரியது என்றதை ஒப்பு நோக்கி உணர்க.

தொல்காப்பியர் வழியில் இளங்கோவடிகள்

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா.”_சிலப்பதிகாரம் ; 30:199.  என்றார்

 

இளமை நிலையாமை:

நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து

குளித்து மணற் கொண்ட கல்லா இளமை

அளிதோ தானே யாண்டு உண்டு கில்லோ.” – தொடுத்தலை விழுத்தண்டினார், புறநானூறு: 243, 9 -11

ஆழமான நீரை உடைய மடுவின்கண், துடும் எனும் ஒலி எழப் பாய்ந்து மூழ்கி, மணை அள்ளிக் காட்டிய அறியாப் பருவத்து இளமை இன்று எங்கு சென்றதோ. என்று நில்லா இளமை எண்ணி வருந்துவதைக் கூறுகின்றார் புலவர்.

 

வைகல் தோறும் இன்பமும் இளமையும்

எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து.”- ……. நற்றிணை ; 46 : 1,2.

வில்லினின்று எய்யப்படும் அம்பின் நிழல், எப்படி நொடிப் பொழுதில் மறையுமோ அப்படி இவ்வுலகத்தில் நாள்தோறும் இன்பமும் இளமையும் விரைந்து கழியும் எம்கிறார்.

 

செல்வம் நிலையாமை:

புணரின் புணராது பொருளே பொருள்வயிற்

பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்

செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு

 உரியை வாழி என் நெஞ்சேபொருளே

வாடாப் பூவின் பொய்கை நாப்பண்

ஓடுமீன் வழியின் கெடுவ ……..”

சிறைக்குடி ஆந்தையார்; நற்றிணை. 16: 1 – 6.

பொருள் தேடப் புறப்பட்ட தலைவன் ,தன் நெஞ்சுக்குக் கூறியது. “ என் நெஞ்சே ..! நீ நெடுங்காலம் வாழ்க , நீ தேடக் கருதிய பொருள், தலைவியொடு தங்கியவாறு அடைவது ஒன்றில்லை; பொருளுக்காகப் பிரிந்தாலோ இவளோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை கிடைக்கப் பெறாது ;  ஆகவே பொருளுக்காக நீ செல்வாயாயினும் செல்க ; இல்லத்தே தங்குவதாயினும் நல்லதற்கு உரியை ஆவாய் ;  பொருளானது வாடாத மலரை உடைய  பொய்கையிடத்தில் ஓடுகின்ற மீனின்  தடத்தைப் போல இருந்த இடம் தெரியாமல் அழியும் தன்மை உடையது. என்று செல்வம் நிலையில்லாதது என்பதை உணர்ந்தான்.

அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்…” –சமண முனிவர்கள்; நாலடியார். 1:,2 : 3,4.

செல்வம் யாரிடத்தும் நில்லைத்து நிற்காது ; வண்டிச் சக்கரத்தைப் போலச் சுற்றி சுற்றி வரும்.