ஞாயிறு, 8 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 95. பட்டறிவியச் சிந்தனைகள். நீட்சே : ( F.Nietzsche – 1844 – 1900. செர்மானியர்.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 95. பட்டறிவியச் சிந்தனைகள். நீட்சே : ( F.Nietzsche – 1844 – 1900. செர்மானியர்.)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

                   நீட்சே,டார்வின் பரிணாமக் கொள்கைக்குக் குழந்தை ; செருமானிய இராணுவ ஆட்சிக்குத் தந்தை. கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிச் சமய நிறுவனங்களுக்கும் இலக்கியங்களுக்கும் மூடுவிழா நட்த்தியவர். சமுகப் பிரச்சினைகள் இவர் தத்துவத்தின் மையக் கருத்துக்கள்.

                     நீட்சே இளமையில் விவிலிய நூலின் பெருமைகளை விளக்கியவர். சுகோப்பனோவரின் நூல்களில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். ஆசிரியப் பணியாற்றியவர்.  காதல் தோல்வி – பெண்டிர்மீது வெறுப்பேற்றியது. திருமணமே செய்துகொள்ளவில்லை. மன நோயாலும் உடல் நோயாலும் அவதியுற்று 1900 ஆம் ஆண்டு இறந்தார்.

 தத்துவச் சிந்தனைகள் : வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் போராட்டங்கள் இடையறாது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இப்போராட்ட முடிவுகளுக்கேற்ப வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது, எதுவும் நிலையானதன்று ; மாற்றமே நிலையானது. என்றார்.

                  இவரின், சராதுத்ரா ( Zarathustra:)) என்னும் நூல் மிகச் சிறந்த படைப்பு. சராதுத்ரா என்ற மாமனிதர் தியானநிலை முடித்து, மலையிலிருந்து கீழிறங்கி மக்களோடு உரையாடுவதாக அமைத்துள்ளார்.

 விருப்பாற்றல் (Will) உண்மையென்றாலும் இதிலும் வலிமையே வெல்லும் ; இதுவே வாழ்வின் உண்மை. ஒவ்வொரு விருப்பாற்றலும் மாமனிதன் என்ற நிலையை அடைய இடையறாது போராடிக்கொண்டிருக்கின்றன.

   அன்பே உயர்த்தும் ; அறமே வெல்லும் ; ஒழுக்கம் உயர்வு தரும்   என்பன, கோழைகள் தங்களைக் காத்துக்கொள்ள அறிவு என்ற பெயரில் அமைத்துக்கொண்ட கூடாரங்கள்.

 

             நீட்சேயின் மாமனிதன் அறிவு, ஆற்றல், மதிப்பு ஆகிய மூன்றின் சங்கமம். நெப்போலியனும் இட்லரும் நீட்சேயின் மாமனிதர்கள்.

 

             மனித இனமே மாமனித இனமாக மாற வேண்டும் ; காதல் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் ; சிறந்தவர்களோடு சிறந்தவர்கள் கூடினால் சிறந்த குழந்தை பிறக்கும்.

 

        பெண்கள் மென்னையானவர்கள், ஆண்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். ஆண்களின் போக உடைமைப் பொருள் பெண்கள்.

 

மனிதன், உணர்வுகளின் பிழம்பாக, விருப்பாற்றலின் கருவியாகச் செயல்படுபவன் என்பது இவரது முடிபு.

…………………..தொடரும்………………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக