ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 89 . பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.-நிலையாமை.

 

சான்றோர் வாய் (மைமொழி : 89 .   பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.-நிலையாமை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

தொல்காப்பியர்  அகத்திணையாகிய எழுதிணையும்  சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார்.  அப்புறத்திணைகளுள் ஒன்றாக  நிலையாமையாகிய  காஞ்சி என ஒரு குறி  பெறுதலைக் குறித்தார்.

காஞ்சி தானே பெருந்திணைப் புறனே

பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே.” – 1023.24.

 காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம்.  அது, பாங்காதல்  அரிய சிறப்பினாற் பல நெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடைத்து..” – இளம்பூரணார்.

 நிலையாமை மூவகைப்படும்

1.1. இளமை நிலையாமை

2.2. செல்வம் நிலையாமை

3.3. யாக்கை நிலையாமை.

தொல்காப்பியர்,  நில்லா உலகம் என்றார்.அஃதாவது நிலைபேறில்லாத உலக இயற்கையைக் கூறினார்.

பழந்தமிழ்ப்புலவர் மதுரை கணக்காயன் மகனார் நக்கீரன், குறுந்தொகை 143 ஆம் பாடல்..

 

அழியல் ஆயிழை அன்பு பெருது உடையன்

 பழியும் அஞ்சும் பயமலை நாடன்

நில்லாமையே நிலையிற்று ஆகலின்” -143 : 1-3. ( தோழி தலைவிக்குக் கூறுவதாக அமைந்த பாடல்.)

ஆராய்ந்து அணிந்த அணிகலன்களை உடையாய், பயனைத்தரும் மலைநாட்டிற்கு உரிய தலைவன், நின்னிடம் அன்பு மிகுதியாக உடையவன், நின்னைக் களவில் நுகர்ந்து, வரையாது ஒழுகும் பழியை அஞ்சுபவன். பல்லாற்றானும் நில்லா உலகத்தில் நிலையாக உள்ளது நிலையாமை ஒன்றேயாகும்.

நில்லாமையே நிலையானது என்று தொல்காப்பியர் வழிநின்று சங்கப்புலவரும் கூறியதைக் காரல் மார்க்சுமாற்றம் என்ற சொல் ஒன்றே மாறாதது  என்று உலகில் எல்லாமே மாற்றத்திற்குரியது என்றதை ஒப்பு நோக்கி உணர்க.

தொல்காப்பியர் வழியில் இளங்கோவடிகள்

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா.”_சிலப்பதிகாரம் ; 30:199.  என்றார்

 

இளமை நிலையாமை:

நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து

குளித்து மணற் கொண்ட கல்லா இளமை

அளிதோ தானே யாண்டு உண்டு கில்லோ.” – தொடுத்தலை விழுத்தண்டினார், புறநானூறு: 243, 9 -11

ஆழமான நீரை உடைய மடுவின்கண், துடும் எனும் ஒலி எழப் பாய்ந்து மூழ்கி, மணை அள்ளிக் காட்டிய அறியாப் பருவத்து இளமை இன்று எங்கு சென்றதோ. என்று நில்லா இளமை எண்ணி வருந்துவதைக் கூறுகின்றார் புலவர்.

 

வைகல் தோறும் இன்பமும் இளமையும்

எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து.”- ……. நற்றிணை ; 46 : 1,2.

வில்லினின்று எய்யப்படும் அம்பின் நிழல், எப்படி நொடிப் பொழுதில் மறையுமோ அப்படி இவ்வுலகத்தில் நாள்தோறும் இன்பமும் இளமையும் விரைந்து கழியும் எம்கிறார்.

 

செல்வம் நிலையாமை:

புணரின் புணராது பொருளே பொருள்வயிற்

பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்

செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு

 உரியை வாழி என் நெஞ்சேபொருளே

வாடாப் பூவின் பொய்கை நாப்பண்

ஓடுமீன் வழியின் கெடுவ ……..”

சிறைக்குடி ஆந்தையார்; நற்றிணை. 16: 1 – 6.

பொருள் தேடப் புறப்பட்ட தலைவன் ,தன் நெஞ்சுக்குக் கூறியது. “ என் நெஞ்சே ..! நீ நெடுங்காலம் வாழ்க , நீ தேடக் கருதிய பொருள், தலைவியொடு தங்கியவாறு அடைவது ஒன்றில்லை; பொருளுக்காகப் பிரிந்தாலோ இவளோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை கிடைக்கப் பெறாது ;  ஆகவே பொருளுக்காக நீ செல்வாயாயினும் செல்க ; இல்லத்தே தங்குவதாயினும் நல்லதற்கு உரியை ஆவாய் ;  பொருளானது வாடாத மலரை உடைய  பொய்கையிடத்தில் ஓடுகின்ற மீனின்  தடத்தைப் போல இருந்த இடம் தெரியாமல் அழியும் தன்மை உடையது. என்று செல்வம் நிலையில்லாதது என்பதை உணர்ந்தான்.

அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்…” –சமண முனிவர்கள்; நாலடியார். 1:,2 : 3,4.

செல்வம் யாரிடத்தும் நில்லைத்து நிற்காது ; வண்டிச் சக்கரத்தைப் போலச் சுற்றி சுற்றி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக