சான்றோர்
வாய் (மை) மொழி : 90 . பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.-நிலையாமை.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.
யாக்கை நிலையாமை :
மாந்தர்
வாழ்வியல் உண்மைகளை ஆராய்ந்து அவற்றை வாழும் மக்கள் உணர வேண்டும் ; தம் வாழ்வை பயனுள்ள முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கில்,
பேராசான் திருவள்ளுவர் நிலையாமை என்றோர்
அதிகாரம் அமைத்துள்ளார்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. – 336.
நேற்று
இருந்தவர் இன்று இல்லை ; உடலை விட்டு உயிர் பிரியும் காலத்தை
யார் அறிவார்..? நிலைத்திருப்பது என்று எதுவுமில்லை என்னும் பெருமையைக்
கொண்டுள்ளது இவ்வுலகம்.
“
இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகின் முழுவதும் இல்லை .: சிலப்பதிகாரம். 28.
181,182.
கடல்
சூழ்ந்த இந்நிலவுலகில் ,தம் வாழ்நாள் எல்லையை இவ்வளவு காலம்தான்
என்று வரையறுத்து அறிந்து கொண்டவர் எவரும் இலர். என்றார் இளங்கோவடிகள்.
“காடு முன்னினரே நாடு கொண்டோரும்
நினக்கும் வருதல் வைகல் அற்றே.” – புறநானூறு; 359: 8,9.
பெரிய
நாடுகளை வென்ற முடி மன்னர்களும் முடிவில் சுடுகாட்டுத்
தீயில் சென்று அடைந்தனரே, அவ்வாறே உனக்கும் காடு அடையும் நாள்
வரும், என்றார் காவிட்டனார்.
“அரிது அரிது மானிராய்ப் பிறத்தல் அரிது” என்னும் வாக்கிற்கிணங்க
நாம் இவ்வுலகில் வாழ்வதற்கே உயரிய பிறப்பாகிய மானிடப் பிறப்பைப் பெற்றிருக்கிறோம். வாழ்வியல்
நெறிமுறைகளை நன்கு அறிந்துகொண்டால் வாழ்க்கை இனிக்கும் . நம்
வாழ்க்கைகு வழிகாட்டிகளாக
நமது முன்னோர்கள் நமக்கு நல்வழியைக் காட்டியுள்ளனர்.
தொல்தமிழர்
வாழ்க்கையை எவ்வாறெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து எடுத்துரைத்துள்ளனர் என்பதற்குச் சான்றாக
விளங்குகிறது.
இந்தப் பாடல், பட்டறிவியச்
சிந்தனையின் பாடம்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
5
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலை இ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர்
உயிர்
10
முறை வழிப்படூஉம்' என்பது
திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
–
கணியன் பூங்குன்றனார் ; புறநானூறு,
192.
யாதும் ஊரே; யாவரும் கேளிர், என்னும் ஒற்றை
வரியில் உலக மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ளார் புலவர்.
ஊர், எவ்வூராயினும் அவ்வூரும் நம் ஊரே ; மக்கள் எவராயினும் எல்லாரும் நம் உறவினரே என்று மாபெரும்
மனிதநேயத் தத்துவத்தை அளித்துள்ளார்.
நமக்கு நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை
; துன்பமும் அது தீர்தலும் கூட நம்மால் விளைவதே; சாதலும் புதியதன்று அஃது உலகத்து இயற்கை நிகழ்வே ; வாழ்தலை இனிது என்று மகிழ்ந்ததும்
இல்லை ; வெறுப்பு ஏற்பட்ட பொழுது துன்பமானது என்று ஒதுக்கியதும் இல்லை.
இடித்து முழங்கி பெரு மழை பெய்ததால் கற்களோடு மோதி தன் வழியில் பெருக்கெடுத்து
ஓடும் பெரிய ஆற்றில் மிதந்து செல்லும் மிதவை போல நம்முடைய அரிய உயிரும்
நம் செயல்களுக்கேற்பவே (முற்பகல் செயின் பிற்பகல் விளையும்) சென்று சேரும்;
ஆதலால், பெருமை
உடைய பெரியோரைக் கண்டு வியத்தலும் இல்லை ;அதைவிட எளியோரைக் கண்டு இகழ்தலும் இல்லை.
என்றவாறு மனிதன் வாழ்க்கையைப் போற்றி வாழ வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார்.
தொல்தமிழர் வாழ்வியல் சிந்தனைகளை உலகமக்களுக்கு உணர்த்திய பேராசான்கள்
வாழ்ந்த நாடு, தமிழ்நாடு. தொல்காப்பியருக்குப்
பின்னே வந்த புலவர் பெரு மக்களும் சான்றோர் வாக்கினை முன்மொழிந்து போற்றியதை மேற்குறித்துள்ள
மேற்கோள்கள் தெளிவாக
உணர்த்துகின்றனவே……!
………………………தொடரும்………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக