சனி, 7 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 94. பட்டறிவியச் சிந்தனைகள். டேவிட் ஹியூம் ( David Hume- 1711 – 1776.) இங்கிலாந்து.

 

சான்றோர் வாய் (மைமொழி : 94. பட்டறிவியச் சிந்தனைகள். டேவிட் ஹியூம் ( David Hume- 1711 – 1776.)  இங்கிலாந்து.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

                          இவரெழுதிய முதல் நூல் “ மனித இயல்பு பற்றிய ஆய்வு “ அறிஞர்களிடையே வரவேற்பு பெறவில்லை. “ தமக்கு இறந்து பிறந்த குழந்தையென” இந்நூலைப் பற்றிக்குறிப்பிடுகிறார்.

 

 “அறநெறி, அரசியல் பற்றிய கட்டுரைகள், மனித அறிவாற்றல் பற்றிய ஆய்வு, அரசியல் விசாரணை, பிரிட்டானிய வரலாறு, சமய வரலாறு ஆகிய நூல்கள் இவர் எழுதியவையாகும்.

பகுத்தறிவியத்தை மறுத்துப் பட்டறிவியத்தைத் திருத்தி

அறிவாராய்ச்சி செய்தார் ; ஆராய்ச்சியின் பயனாக – “புலக் காட்சி, மனப்பதிவு, எண்ணம் ஆகிய மூன்றினைக் குறிப்பிடுகிறார்.

 

 புறவுலகப் பொருள்கள் ஐம்பொறிகளைத் தாக்கி மாற்றம் நிகழ்த்துவது – புலக்காட்சி.

 

 இம்மாற்றம் முறையாக மனத்தில் பதிவது – மனப்பதிவு.

 மனப்பதிவு – நினைவாற்றல், கற்பனை இரண்டையும் இணைத்துக் கூட்டியும் தொகுத்தும் எண்ணங்கள் உருவாகின்றன.

 

எண்ணங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பே – அறிவு .

 

ஒப்புமை, தொடர்ச்சி, காரண காரியம் –ஆகிய மூன்று வழிகளில் (விதிகள்) எண்ணங்களிடையே  தொடர்புகள் உருவாகின்றன. இதனால் மனிதன் தன்னையும் உலகத்தையும் அறிகிறான்.

                   அறிவாராய்ச்சியில் ஈடுபட்ட  ஹியூம் தன் ஐயத்திற்குத் தெளிவு தராதவர்றையெல்லாம் துணிந்து ஒதுக்கி விடுகிறார்.

புறவுலகில் சடப் பொருள் இல்லை .

அகவுலகில் ஆன்மப் பொருள் இல்லை.

காரண காரியத் தொடர்பிலும் உறுதியில்லை.

நம் மனப்பதிவுகளைத் தவிர வேறு எதையும் அறிய முடிவதில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.

 

                     எண்ணங்கள் ஏற்படுத்தும் நம்பிக்கைதான் அறிவெனப்படுகிறது. நம்பத்தான் வேண்டும்  என்ற கட்டாயச் சூழலில் சில எண்ணங்களை நாம் நம்புகிறோம். அவற்றை அளவையியல் முறைகளால் நிரூபிக்க முடியாது.  எண்ணங்கள் ஏற்படுத்தும் நம்பிக்கை இல்லையெனில் வாழ்க்கை குழப்பம் மிகுந்ததாகிவிடும்.என்கிறார்.

……………தொடரும்……….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக