சனி, 1 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 139. அறிவியல் சிந்தனைகள். வடலூர் வள்ளலார்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 139. அறிவியல்

சிந்தனைகள்.  வடலூர் வள்ளலார்.

மெளனம்;

வள்ளலார் வழங்கிய சிந்தனைகளுள் தலையாயது மெளனம் எனும் மனவளக் கலையே.

உடலுக்கும் உள்ளத்திற்கும் உலக அமைதிக்கும் உயிர்கள் யாவும் இன்புற்றிருக்கவும் மெளன நோன்பு அருட்பிரகாச வள்ளலாரின் உள்ளத்தில் உதித்த எண்ணங்கள்

 

மெளனம் உலக மக்களின்    தாய்மொழி ; ஆறறிவுமனம் படைத்த மனிதனிடம் மாண்புறும் மொழி ; அளந்தறிய இயலாத ஆற்றல் வாய்ந்த மொழி ; அன்புருவின் ஆட்சிமொழி.  

 

மெளனம், ஓர் இனிய மொழி, அலை பாயும் மனம் அமைதியுற, அவ்வழி உன்னை நீ உணர, உன்னுள் உன்னைக் காண, உன்னுள் உயிர் வளம் பெற, இனம்புரியாத இன்ப நிலை எய்தி, மெளனத்தால் ஆக்கம் பெற்று, இன்புற்று வாழ்தல் எளிதாகின்றது.

·         மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே

·         சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்

·         இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்

·         கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.

·          

மன மாயை நீங்கி இறவனின் அருள் பெற்றுப்  பெரிய போற்றத்தக்க நெறியை  எய்தி  அருட்பெருஞ்சோதியைக் கண்டு மகிழ்ந்த நிலையை அடைந்தார் வள்ளலார்.

மெளனம், பேச்சின் தந்தை என்று அழைக்கப்படுகிறது. மெளனம் உலகின் மிகப் பெரிய மொழி. அதைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெறுங்கள் ; கையாளுவதில் திறமை பெறுங்கள்.” என்கிறார். ( டேல் கார்னகி. மேடைப் பேச்சுக்கலை,பக்.53.)

  • மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
  • இனம்பெறு சித்த மியைந்து களித்திட

மெளனத்தால் மனம் ஆர்றைப் பெறுகின்றது. அன்பினால், கருணையினால் உள்ளம் உருகித் தெளிவு பிறக்க இன்பம் விளைகிறது.

பேசாதீர்கள், மனப்பூர்வமாக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பேசாதீர்கள் , மெளனத்தில் உங்கள் எண்ணம் முதிர்ச்சி அடையும்வரை பேசாதீர்கள். அமைதியிலிருந்துதான் உங்கள் ஆற்றல் பிறக்கிறது. பேச்சுவெள்ளி ; அமைதிபொன் . பேச்சு மனிதத் தன்மை உள்ளது ; அமைதி தெய்வீகமானது.” என்கிறார் கார்லைல் (மேலது.)

  • மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
  • அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

 

மனித உயிர்கள் அனைத்திற்கும்  மன மே முதல் கருவியாகச் செயல் படுகிறது . மனத்தூய்மை அறம். “மனத்துக்கண் மாசிலனாதலே அறம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்  இவை நான்கையும் ஒழித்தால் நன்னிலை  எய்தலாம் என்றார் திருவள்ளுவர்.

 

 

       மனமெலி யாமல் பிணியடை யாமல் வஞ்சகர் தமைமரு வாமல்

  • சினநிலை யாமல் உடல்சலி யாமல் சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய்
  • அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
  • இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
  • மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
  • மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
  • இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
  • இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
  • தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
  • சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
  • நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
  • ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே (விக்கிபீடியா)

 

மன மாசு, வஞ்சகம் நிறைந்த நெஞ்சத்தார் எவ்வளவு  வளம் பெற்றிருந்தாலும்  அதனால் பயன் ஒன்றும் இல்லை என்பதை

 கற்றதம் கல்வியும் கடவுள் பூசையும்

நற்றவம் இயற்றலும் நவையில் தானமும்

 மற்றுள அறங்களும் மனத்தின்பால் அழுக்கு

அற்றவற்கே பயனளிக்கும்  என்பரால்.”

என்றது , காசிக்காண்டம் உரைக்கும் உண்மையாகும்.

 தன்மனத்தை தான் அடக்கி வெல்லல் ஓர் அரிய கலை, வித்தை. சிந்தையை அடக்கியே சும்மாவிருக்கின்ற திறம் அரிது என்று உணர்ந்த தாயுமான சுவாமிகள்

மனமான வானரக் கைம்மாலை ஆகாமல்

எனையாள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ என்று ஏங்குகிறார்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழ், உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதல் நன்று. குறள். 294. உயர்ந்த எண்ணங்களே என்றும் உள்ளத்தில் நிலவ வேண்டும். குறள். 596. ; செல்லும் வழி மனத்தைச் செல்லவிடாது அடக்கின் எழுபிறப்பும்நல்ல பயனேயாம். மனத்தை அடக்கி ஆள்வது எளிதோ… “பயிற்சி செய் பலன் கிடைக்கும் ; நலம் விளையும் ; வளம் பெருகும் ; வாழ்க்கை இனிக்கும்.

இறைவன் மொழி.

“ மவுனம் இறைவன் மொழி, அது தட்சிணாமூர்த்தி தத்துவம் 

“பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப் பெருமையினான் “ என்று தாயுமானவர்  தன் மவுன குருவைப் பாடுவார். “சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே என்று முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த மந்திரமொழி மவுனம் தான். கல் ஆலின் குடை அமர்ந்து மவுனித்து உடல் மொழியால் சின் முத்திரை தத்துவத்தை போதித்த  தட்சிணாமூர்த்தியை “ வாக்கு இறந்த பூரணம்” , “சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வருணிக்கும் அமைதி வேறு, மவுனம் வேறு. போருக்குப் பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது, மவுனம் உள்ளிருந்து வருவது, அது வார்த்தைகளற்ற நிலையல்ல; எண்ணங்கள் அற்ற நிலை. மவுனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.” – டாக்டர் பி.கி. சிவராமன், தஞ்சாவூர்.

 சீவகாருண்ய ஒழுக்கத்தினால்  மக்கள் உள்ளத்தில் தோன்றும் இரக்கத்தின் விளக்கமே கடவுள் விளக்கம். அவ்வொழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம்.  இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்  கண்டு நுகர்ந்து நிறைவு பெற்றவர்களே சீவன் முத்தர்கள் ஆவர் என்பது வள்ளலாரியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக