சனி, 7 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 427

திருக்குறள் – சிறப்புரை : 427
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர் . ~    ௪௨௭
அறிவுடையவர்கள்  எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பின்விளைவுகளை எண்ணிப்பார்த்தே செய்வார்கள் ; அறிவில்லாதார் அப்படி எண்ணிச் செய்யமாட்டார்கள் .. எண்ணித் துணியாது இன்னல் அடைவார்கள்.

“ நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.” .. கொன்றை வேந்தன்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 426

திருக்குறள் – சிறப்புரை : 426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு. ~ 426
உலகத்துச் சான்றோர் கூறிய அறிவுரையின்படி இவ்வுலகம் எப்படி நடந்து கொள்கிறதோ அப்படியே தானும் நடந்து கொள்வதே அறிவுடைமையாகும் “ உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பதறிக.
“ சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

 ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர் …..” வாக்குண்டாம்.

வியாழன், 5 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 425

திருக்குறள் – சிறப்புரை : 425
உலகம் தழீஇயது  ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. ~ 425
அறிவு எனப்படுவது உலகத்தைத் தன்வயப்படுத்துவதாக அமைதலாம் அவ்வாறான ஆற்றலுடைய அறிவு    மங்குவதும் இல்லை மறைவதும் இல்லை ; எக்காலத்தும்  நிலைத்த தன்மை உடையதாம்.
“ ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
 ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.” ~ முதுமொழிக் காஞ்சி.

இவ்வுலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும் உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும் சிறந்த இயல்புகளையே பேசப் பழகுதல் வேண்டும்.

புதன், 4 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 424

திருக்குறள் – சிறப்புரை : 424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. ~ 424
பிறர்க்கு அரிய பொருளை விரித்துரைக்கும்போது அவர் எளிதில் புரிந்துகொள்ளுமாறு சொல்லவேண்டும் ; பிறர் கூறும் கருத்துக்களின் நுண்பொருளைத் தாமே ஆராய்ந்து அறிந்துகொள்வதே அறிவாகும்.
“ புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
 புலம் மிக்கவர்க்கே புலனாம் ….” ~ பழமொழி.

அறிவு மிக்கவரது அறிவினை ஆராய்ந்து அறிதல் அறிவு மிக்கவர்க்கே உளதாம்.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 423

திருக்குறள் – சிறப்புரை : 423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. ~ 423
எத்தகைய பொருள் குறித்தும் யார் ஒருவர் சொல்லக் கேட்பினும்  அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெளிவு பெறுதலே அறிவுடைமையாகும்.
“உணர உணரும் உணர்வு உடையாரைப்
 புணரப் புணருமாம் இன்பம் ….” ~ நாலடியார்.

நூலின் பொருளை உணரத்தக்க வகையிலே உணர்ந்துகொள்ளும் அறிவுள்ளவரை நண்பராகச் சேர்த்துக் கொள்வதனால்தான் இன்பம் உண்டாகும்.

திங்கள், 2 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 422

திருக்குறள் – சிறப்புரை : 422
சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. ~422
மனம் போன போக்கில் போகாது தீயவற்றினின்று விலக்கி நல்வழியில் செலுத்துவது அறிவாகும்.
“மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து
 சிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய்.” ~ நாலடியார்.

மறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை. மயக்கமில்லாமல் தெளிவுடன் செய்து.. துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 421

திருக்குறள் – சிறப்புரை : 421
43.அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
 உள்ளழிக்க லாகா அரண். ~ 421
அறிவு என்பது அழிவு வாராமல் காக்கும் கருவியாகும் மேலும் பகைவராலும் உள்ளே நுழைந்து அழிக்கமுடியாத  மனவலிமை என்னும் பாதுகாப்பையும் தருவதாகும்.
“ அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்” ~ கலித்தொகை .133.

அறிவு எனப்படுவது  அறியாதார் கூறும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதலாம்.