சனி, 2 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 23

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 23
காவிதி மாக்கள்
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
                        மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  496 – 499
 அரசனிடம் உள்ள நன்மைகளையும் தீமைகளையும் மனத்தால் கண்டு, அத்தீங்குகளை ஆராய்ந்து அவற்றில் ஒழுகாமல் அடக்குபவர்.  சுற்றத்தாரிடம் செல்லும் அன்பும், எல்லா உயிர்களிடத்தும் நிகழும் அறமும், எக்காலத்தும் தம்மைவிட்டு நீங்காமல் பாதுகாப்பவர், பழி தம்மிடம் வராமல் நீக்கி, அதனால் ஏனையோரினும் உயர்ந்து விளங்குபவர். பரவிய புகழால் நிறைந்தவர் – விளங்குகின்ற மயிர்க்கட்டுக் கட்டி, அரசனால் தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்.
(முடியுடை வேந்தர்க்கு மகட்கொடை நேரும் வேளாளரை நச்சினார்க்கினியர், ‘ பாண்டி நாட்டில், காவிதிப்பட்டம் எய்தினோரும்” எனக் குறிக்கின்றார். காவிதிப் பூ – இப்பட்டத்திற்கு அணியும் பூ ) 

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 22

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 22
அறம் கூறு அவையம்
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்
                            மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 489 – 492
 நடுவு நிலையுடன் தீர்ப்புக் கூறுவாரோ, கூறாரோ என்று அஞ்சி வந்த அச்சத்தையும், அவர்க்குத் தோல்வியால்  நெஞ்சில் தோன்றும் வருத்தத்தையும், அவர்தம் நெஞ்சு கருதின பொருள் மேல் தோற்றிய பற்று உள்ளத்தையும் போக்கி (அவர்தம் உளம் கொள விளக்கிக் கூறி)
ஒரு கூற்றில் செற்றம் செய்யாமல், ஒரு கூற்றில் உவகை செய்யாமல் நெஞ்சினைப் பாதுகாத்து,  துலாக்கோலைப் போல நடுவு நிலைமையுடையவராய் இக்குணங்களால் சிறந்த விரதங்களையுடைய அறநூலைச்  சொல்லும் சான்றோர்களும் – மதுரை நகரில் வாழ்ந்தனர்.
( அறம் கூறு அவையம் – நீதி மன்றம்  அறநூல் முறைப்படி அறம் கூறும் தருமாசனத்தார்.) 

வியாழன், 31 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 21

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 21
சாவகர்
வண்டுபடப் பழுநிய தேன் ஆர் தோர்றத்துப்
 பூவும் புகையும் சாவகர் பழிச்ச
சென்ற காலமும் வரூஉம் அமையமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
 வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கை சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் ….
                   மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 475 - 481
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த, தேன் இருந்த தோற்றத்தையுடைய பூக்களையும், புகையினையும் ஏந்தி விரதம் கொண்ட சாவகர் அருக தேவரைத் துதிப்பர்.
சென்றகாலத்தையும், வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடு மிக உணர்ந்து அவற்றை உலகத்தார்க்கு உரைப்பர்.
 தேவர் உலகத்தையும், அதன் செய்திகளையும், எல்லா நிலங்களின் செய்திகளையும் தம் நெஞ்சால் அறிதற்குக் காரணமாகிய அறிவுடையவர்.
தமக்கு அமைந்த விரதங்களையும், அவ்விரதங்களால் இளையாத உடம்பினையும் உடையவர். கல்விகளால் நிறைந்து, களிப்பின்றி அடங்கிய அறிவினையுடையவர்,
( சாவகர் – உலக நோன்பிகள்  ; சமண சமயத்தில் விரதம் காக்கும் இல்லறத்தார் ; சேக்கை – பள்ளி .) 

புதன், 30 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 20

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 20
ஐவகை ஒழுக்கம் –பஞ்சசீலம்
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு
தாமுன் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவளர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும்   
                                        மாங்குடி மருதனார், மதுரைக். 6:  463 – 467
திண்ணிய ஒளியையுடைய பேரணிகலன்களை அணிந்து, விருப்பம் பொருந்திய அழகினோடு, பேரிளம் பெண்டிர்,   கணவரோடு கூடித் தாது சேர்ந்த செவ்வித் தாமரைப் பூவைப் பிடித்தாற்போலத் தம் ஒள்ளிய சிறு பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, தாமும் தம் கணவரும் தம் பிள்ளைகளும் ஒருசேர சீலத்தால் சிறந்து விளங்கும்படி, பூசைக்கு வேண்டும் பூவினையும் தூபங்களையும் ஏந்தி வணங்கி, மிகுதியாகத் துதித்துப் பாதுகாத்து நடத்தும் பெளத்தப் பள்ளியும்…
( மதாணி -  பேரணிகலன் ; குறு மாக்கள் – சிறு பிள்ளைகள் ;  ஓராங்கு – சீலத்தால் சிறந்து விளங்க ; சீலம் -  கொல்லாமை, கள் உண்ணாமை, பொய் கூறாமை, கள்ளாமை, பிறன்மனை நயவாமை என்பன - இவை பஞ்ச சீலம் எனப்படும். ) 

செவ்வாய், 29 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 19

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 19
நெடியோன் – சிவன்
நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக
மாங்குடி மருதனார், மதுரைக். 6: 453 – 455
திசைகளை உடைய ஆகாயத்துடன், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து பூதங்களையும் சேரப்படைத்த மழுப்படையாகிய வாளினையுடைய பெரியோன் – ஏனையோரின் முதல்வன் ஆவான்.
சிவபெருமான், நெடியோன் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளான்.
( மாகம் – திசை ; மழு – சிவன் கையில் உள்ள வாள் ; நெடியோன் ; சிவபெருமான்.) 

திங்கள், 28 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 18

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 18
தீர்த்த நீராடல்
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்
மாங்குடி மருதனார், மதுரைக். 6: 427 - 429
தீவினையைக் கழுவுவதற்குக் காரணமான தீர்த்த நீரைத் தன்னிடத்தே கொண்ட – நெருங்கும் திருநாளை உடைய ஏழாம் நாள் அந்தியில், விழாவைக்காணத் திரண்டுவரும் நாட்டிலுள்ளார் ஆர்த்த ஆரவாரம் போலப் பெரிய நான்மாடத்தால் மலிந்த புகழொடு விளங்கும் நகரின் அகன்ற இடத்தையுடைய, நாட்காலத்துக் கடையில் ஆரவாரம் எழுந்தது.
 மதுரைக்கு ’நான் மாடக் கூடல்’ என்ற பெயரும் உண்டு.  திருஆலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்கு மாடங்கள் கூடலின் இப்பெயர் பெற்றது.
( தீர்த்த நீர் – பாவம் போக்க நீராடல் ; எழுநாள் அந்தி – கால்கோள் தொடங்கி ஏழாம் நாள் அந்தியில் நடைபெறும் தீர்த்தமாடல் ; கழு நீர் – கழுவும் நீர்.)

ஞாயிறு, 27 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 17

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 17
ஆதி போகிய ….
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதிபோகிய
 கொடிபடு கவல விடுமயிர்ப் புரவியும்
                         மாங்குடி மருதனார், மதுரைக். 6: 389 -391

கையில் எடுத்த மத்திகையை உடைய  வல்லவன் ஐந்து கதிகளிலும், பதினெட்டுச் சாரிகைகளிலும் அக்குதிரைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளமையால் – தங்கள் குளம்புகள் அழுத்திய வட்டமான இடத்திலும், ஆதி என்னும் கதியில் அவை ஓடின – ஒழுங்குபட்ட பிடரினையும் , இடுமயிரினையும் கொண்டவை.
( கோலன் – சவுக்கு உடையவன் ; கொள்கை – ஐந்து கதி , பதினெண்சாரிகை  ஆகிய இயல்பு ;  ஆதி – நெடுஞ் செலவு இயக்கம் ; கவல் – பிடரி ; இடுமயிர் – நிறம் ஊட்டப்பட்ட கவரி)