செவ்வாய், 27 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 40 - 41

கலித்தொகை – அரிய செய்தி – 40 - 41
சங்கப் பாடல்களுள் சிறப்பிடம் பெறும் பாடல்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் 
(ஆற்றுதல் - வறுமை உற்றவர்க்கு உதவுதல்)

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
(-  போற்றுதல் – இனிது கூடினாரைப் பிரியாதிருத்தல்)

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
( பண்பு -  இயல்பறிந்து பழகுதல்)

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
(அன்பு -  சுற்றத்தாரைச் சினவாதிருத்தல்)

 அறிவு எனப்படுவது  பேதையர் சொல் நோன்றல்
 (அறிவு -  அறியாதார் சொல்வதைப் பொறுத்துக்கொள்ளுதல்)

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
 ( செறிவு – சொன்ன சொல்லை மறவாதிருத்தல்- காப்பாற்றுதல்)

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
 (நிறை –  மறைவான(கமுக்கம் – இரகசிய்ம்) ஒன்றைப் பிறர் அறியாது காத்தல்)

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்
 ( முறை – உற்றாராயினும் ஒருபால் கோடாது (குற்றம் கண்டு) உயிரையும் எடுத்தல்)

பொறை எனப்படுவது  போற்றாரைப் பொறுத்தல்
( பொறை – போற்றாரையும் பகையாதிருத்தல்)
நல்லந்துவனார். கலித் . 133  : 6 – 14
கலித்தொகை – அரிய செய்தி – 41
கூடலிழைத்தல்
கோடு வாய் கூடாப் பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ….
நல்லந்துவனார். கலித் . 142  : 24 – 25

 தலைவி – என்னுடைய சிறிய இல்லத்தினுள்ளே அவனைக் காணப்பெறுவேனோ என்று கூடலிழைத்தேன். அக்கூடலை முற்றிலும் இழைக்கும் முன் வளைவு முழுவதும் வாய் கூடாத இளம் பிறை வடிவாகத் தோன்றியது.  (பிரிவினால் வாடும் தலைவி தலைவன் வருவானோ என்று கூடலிழைத்துக் காண்பாள் – கண்களை மூடிக்கொண்டு தரையில் விரலால் சுழன்று சுழன்று வட்டம் இடுதல் வேண்டும் – இரண்டு முனைகளும் சரியாக இணைந்தால் தலைவன் வருவான்; சேராவிட்டால் வாரான் என்று கொள்வது மரபு.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக