வெள்ளி, 31 அக்டோபர், 2025

தமிழமுது –159 – தொல்தமிழர் இசை மரபு:.... முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –159 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 19.

தமிழிசை.

 முனைவர் ராம. கெளசல்யா.

 

 

 

எனினும் 19ஆம் நூற்றாண்டையே தமிழிசையின் பொற்காலம் என்று கூறவேண்டும். ஏராளமான இயலிசைப் புலவர்கள் இக்காலகட்டத்தில் அருமையான பதங்களையும் கிருதிகளையும் இயற்றி, தமிழிசையை வளப்படுத்தினார்கள். இதற்கு அக்காலச்சூழல் துணைநின்றது, மராட்டிய கதை சொல்லும் வடிவமான கீர்த்தன் என்பதனை ஒட்டி தஞ்சாவூரில் தமிழில் உருவானதே ‘ஹரிகதை’ என்னும் வடிவமாகும்.

 

 தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதரால் உருவாக்கப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த இந்த ஹரிகதை வடிவத்தில் புராண இதிகாசக் கதைகளைச் சொல்ல நிறையப் பாடல்கள் தேவைப்பட்டன. இதன் விளைவே அப்போது தோன்றிய நாடகக்கீர்த்தனைகளும் சரித்திர கீர்த்தனைகளும் ஆகும். ஏராளமான இதிகாச, புராணக் கதைகள் கீர்த்தனை வடிவில் இயற்றப்பட்டன.

 

கிருதி என்னும் இசை வடிவம் முழுமை பெற்று  இயற்றுவதற்கு எளிமையாக அனைவருக்கும் கைவந்தது. ஐரோப்பியரால் அறிமுகப்படுத்தப்பட்ட அச்சுக்கலையைப் பயன்படுத்தும் உரிமை அனைத்துத்தரப்பினருக்கும் கிடைத்தது. இந்த வசதி இப்பாடல்கள் பரவ மிகப் பெரிய அளவில் உதவியது. அக்காலத்து பிரபல இயலிசைப் புலவர்களின் பட்டியலே பிரமிப்பைத் தருகிறது..

 

ஆனையா, கனம் கிருஷ்ணய்யர், தஞ்சை நால்வர், மழவை சிதம்பர பாரதி, கோபாலகிருஷ்ணபாரதியார், லாவணி வெங்கடராவ், வள்ளலார், தரங்கம்பாடி பஞ்சநாத அய்யர் சகோதரர்கள், சின்னு சுவாகிதாசர், ராமசாமி சிவன் மகா வைத்தியநாத அய்யர் சகோதரர்கள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி, நீலகணடசிவன், கிருஷ்ண பாகவதர், அண்ணாமலை ரெட்டியார், அனந்த பாரதி,…….

………………………. தொடர்கிறது…………………………….

வியாழன், 30 அக்டோபர், 2025

தமிழமுது –158 – தொல்தமிழர் இசை மரபு:................முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –158 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 18.

தமிழிசை.

 முனைவர் ராம. கெளசல்யா.

தாயுமானவர் (18ஆம் நூற்றாண்டு) பாடல்கள் சமயங்களைக் கடந்து எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று உலகளாவி நின்றன. சீர்காழி மூவர் என்று அழக்கப்படுகின்ற முத்துத்தாண்டவர் (17ஆம் நூற்றாண்டு) அருணாசலக் கவிராயர் (1711 – 1778) மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1787) ஆகியோர் தத்தம் அளவில் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள்.

 

 தமிழில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்புடைய கிருதி வடிவத்தையும் பதம் என்ற வடிவத்தையும் முதன்முதலாக இயற்றியவர் முத்துத்தாண்டவர்.  ராமாயணத்தைக் கீர்த்தனைகளாக ராம நாடகக் கீர்த்தனைகள் என்ற பெயரில் இயற்றித் தமிழில் இசை நாடகங்களுக்கு முன்னோடியாகத் திமழ்ந்தவர் அருணாசலக் கவிராயர். நிந்தாஸ்துதி (பழிப்பது போல் புகழ்வது)  என்ற அமைப்பில் படல்களை இயற்றி  அவ்வகைப் பாடல்களை

அறிமுகப்படுத்தியவர் மாரிமுத்தாப்பிள்ளை.

 

ஊத்துக்காடு வெங்கட கவி பாடல்கள் தமக்கெனத் தனி முத்திரை பதித்தவை. 18ஆம் நூற்றாண்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க  இயலிசைப் புலவர் பாபவிநாச முதலியார் ஆவார். அதிகமாகப் புழக்கத்தில் உள்ள நடமாடித் திரிந்த, முகத்தைக் காட்டி பேரும் நல்ல தியாகர் ஆகிய மூன்று நிந்தாஸ்துதிப் பாடல்களும் உம்பேசர் குறவஞ்சியும் இவருடைய படைப்புகள்.

எனினும் 19ஆம் நூற்றாண்டையே தமிழிசையின் பொற்காலம் என்று கூறவேண்டும்

………………………. தொடர்கிறது…………………………….

புதன், 29 அக்டோபர், 2025

தமிழமுது –157 – தொல்தமிழர் இசை மரபு:...........முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –157 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 17.

தமிழிசை.

 முனைவர் ராம. கெளசல்யா.

”திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பதற்கேற்ப  மாணிக்கவாசகருடைய திருவாசகப் பனுவல்கள் உள்ளத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. சில திருவாசகப் பாடல்களைத் தவிர ஏனையவை பொதுவாக மோகன ராகத்தில் சுத்தாங்கமாகப் பாடப்படுகின்றன. சுத்தாங்கம் என்பது தாளமில்லாமல் இன்றைக்கு விருத்தம் பாடுவதுபோலப் பாடுவதாகும். சந்தப்பாவலப் பெருமான் என்று போற்றப்படுகின்ற அருணகிரிநாதர் பாடிய பாடல்கள் திருப்புகழ் என்று அழைக்கப்படுகிறது.

 

தொங்கல் என்ற அமைப்போடு சந்தப் பாடல்களாக அமைந்த இப்பாடல்களும் பாடப்பட்ட காலத்தில் அமைந்த ராகங்கள் மறைந்து புதிய இசையமைப்பிற்கே பாடப்படுகின்றன. பண் தாளக்குறிப்புகல் எதுவும் கிடைக்கவில்லை.

 

 தாளக்கடல் என்று அழைக்கப்படும் திருப்புகழ்ப் பாடல்களை அவற்றின் சந்தத்தின் அமைப்பிலேயே தாளங்கள் அமைத்து சாதனை புரிந்திருக்கிறார் அருணகிரிநாதர். ஆனால், இன்று இவை குறித்து ஓரளவு அறிந்தவர்கள்கூட மிகச்சிலரே. நடைமுறையில் உள்ள தாளங்களிலேயே இவை பாடப்படுகின்றன. இறைவன் ஒருவனே என்றும் சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் பயனற்றவை என்றும் யோக நிலையில் நின்று பாடிய சித்தர் பாடல்கள் உயரிய தத்துவக்கருத்துகளை உட்கருத்துகளாகக் கொண்டு அனைவரையும் அவற்றிலே ஈடுபாடு கொள்ளச் செய்தன.

 

………………………. தொடர்கிறது…………………………….

செவ்வாய், 28 அக்டோபர், 2025

தமிழமுது –156 – தொல்தமிழர் இசை மரபு:........... முனைவர் ராம. கெளசல்யா.

 

                  தமிழமுது –156 – தொல்தமிழர் இசை மரபு:

                           சான்றோர் ஆய்வுரை – 16.

                                             தமிழிசை.

                                 முனைவர் ராம. கெளசல்யா.

உலக இசை வரலாற்றில் ஞானசம்பந்தர்தான் வயதில் மிகவும் குறைந்த இயலிசைப் புலவர் ஆவார். இவர் தமது முதல் பதிகமான தோடுடைய செவியனைப் பாடியபோது இவருக்கு வயது 3.

 

 தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டபோது நிலவிய இசைமுறை பண்முறையாகும். இப்பதிகங்கள் ஓதும் முறையைக் காப்பாற்றி நமக்குத் தந்துள்ள ஓதுவாமூர்த்திகள் வணக்கத்துக்குரியவர்கள். இவற்றின் தாளம் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை. பண்கள் குறித்த செய்திகளிலும் இன்னும் ஆய்வு செய்யவேண்டியவை உள்ளன. 103 பண்களில் 23 பண்களே தேவாரப் பதிகங்களில் இனம் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள்ளும் ஒரே பண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ராகங்களும் பல பண்களுக்கு ஒரே ராகமும் சுட்டப்படுகின்றன.

 

சைவ சமய பக்திப் பாடல்களான தேவாரப் பதிகங்கள் போன்றே வைணவ சமய பக்திப்பாடல்களான திவ்வியப்பிரபந்தப் பாசுரங்களும் பண்முறையில் பாடப்பட்டவையாகும். ஆனால், காலந்தோறும் ஏற்பட்ட பல்வேறு சூழல்களால்  இவை பாடப்பட்ட  பண்கள் மறைந்து, இன்று ஒரு வகையான ஓதும் முறையில் ஓதப்படுகின்றன. பாட விரும்புவோர் தங்கள் மனநிலைக்கு ஏற்ப இசையமைத்து இவற்றைப் பாடுகின்றனர், இவற்றிற்குத் தாளம் குறிக்கப் பெற்றிருந்தும் அவை மறைந்துவிட்டன.

 

………………………. தொடர்கிறது…………………………….

 

 

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

 

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

 

அன்புடையீர் வணக்கம்,  என் வலைப்பூவில் இணைந்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.

 நேற்றுவரை  வலைப்பூவின் பதிவுக் குறிப்பை முகநூலில் வெளியிட்டுவந்துள்ளேன் இனிமேல் பதிவுக் குறிப்பு முகநூலில் தேடவேண்டாம். ’எக்சு’  தளத்தில் காணுங்கள்.

முகநூல், என்னுடைய வலைப்பூ விளம்பரமாக வணிகநோக்கில் செயல்படுவதாகவும் அதற்கான கட்டணமாக உரூ. 5000/- கேட்டுள்ளது. என்வலைப்பூவில்  விளம்பரங்கள் எதுவும் இடம்பெறவில்லை  விளம்பரம் பெற்று அதனால் எனக்கு வருமானம் வருவதாக முகநூல் கணித்திருக்கிறது. அதனால் நேற்றே முகநூல் கணக்கைவிட்டு வெளியேறிவிட்டேன்.  

இருபது ஆண்டுகளாக வலைப்பூவை இயக்கிக்கொண்டிருக்கிறேன், இன்றுவரை எவரிடமும் ஒரு பைசாகூடப்பெற்றதில்லை.

 

இறுதி நாள் வரை செம்மொழிக்குத் தொண்டு செய்வேன் ; உலகத் தமிழர்களோடு உறவாடி மகிழ்வேன்..!

கற்றவை யாவும் மற்றையோர்க்கே…… !

 

அறிவுக்கு விருந்தாகும் வலைப்பூவை விட்டு விலகாதீர் தங்கள் நண்பர்களையும் அழைத்துவாருங்கள்,

நன்றி நண்பர்களே..! 

 

தமிழமுது –156 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 16.

தமிழிசை.

முனைவர் ராம. கெளசல்யா.

 

………………………. தொடர்கிறது…………………………….

திங்கள், 27 அக்டோபர், 2025

தமிழமுது –155 – தொல்தமிழர் இசை மரபு:.............. முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –155 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 15.

தமிழிசை.

 முனைவர் ராம. கெளசல்யா.

பரிபாடல் போன்ற பல இசைவடிவங்கள் இன்றைய கிருதி, பதம் போன்றவைபோல் பிரபலமாக இருந்திருக்கின்றன.பரிபாடல் என்னும் வடிவம் இலக்கணம் கூறும் அளவிற்கு ஏராளமாக வழக்கில் இருந்த்ருக்கிறது. 25 அடிமுதல் 400 அடிவரை இவை இருந்திருக்கின்றன என்று கூறும்போது இவற்றை எப்படிப் பாடி இருப்பார்கள் என்று திகைப்பாக இருக்கிறது.

 

தற்போது கிடைக்கின்ற பரிபாடல்களின் இறுதியில் பாடியோன், இசை வகுத்தோன், பண் ஆகிய செய்திகள் தரப்பட்டாலும் பாடும் முறை தெரியவில்லை. கலிப்பாவின் நிலையும் இத்தகையதே. இதேபோல பண்ணத்தி என்பதும் என்ன என்றே புரியவில்லை. சிலப்பதிகாரத்தில் காணப்படும் வாழ்த்துப்பாடல்கள் பலவகைப்பட்ட வரிப்பாடல்கள் குரவைப் பாடல்களையும் பாட வேண்டிய அக்கால முறை தெரியவில்லை.

 

இன்றைக்குப் பாடப்படுகின்ற பாடல் வடிவங்களுள் இசையோடு கிடைக்கின்ற  பழைய வடிவம் தேவாரம் தான். இவற்றைப்பாடிய திருஞானசம்பந்தர் (கி.பி 7ஆம் நூற்றாண்டு), திருநாவுக்கரசர் (7ஆம் நூற்றாண்டு), சுந்தரர் (8ஆம் நூற்றாண்டு) மூவரும் தலங்கள்தோறும் சென்று பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டனர். பக்தியோடு தமிழையும் , இசையையும் வளர்த்தனர். இந்திய பக்தி இயக்கத்தையும் இவர்களே தொடக்கிவைத்தனர்.

…………………………………………………………….

பெண்ணின் பாட்டு

பொதுப்படையாகப் பார்க்குமிடத்து, நமது மாதர்

 பாட்டுகளின் இனம் பின்வருமாறூ:

1. கல்யாணப் பாட்டு, நலங்கு, பத்யம், ஊஞ்சல்,

ஓடம் முதலியன.

2. கும்மிப் பாட்டு, குதித்துப் பாடுகிற பாட்டுகள்

இவ்வகுப்பில் கிளிப் பாட்டு, பல்லிப் பாட்டு

முதலியனவும் அடங்கும்.

3.அம்மானை , தூது, மாலை, சோபனம் முதலிய

நீண்டகதைப் பாட்டுகள்.

4.பொதுத் தாலாட்டு, விளையாட்டுப் பாட்டுகள்

ஜாவளிகள், கீர்த்தனை முதலியன.

மேலும் பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள்

நெல் குத்துவோர், சுண்ணாம்பு இடிப்போர், குறிகாரி, தொம்பச்சி முதலிய வகுப்பினர் தமக்கென்று தனியான

மெட்டுகள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மேற் கூறப்

பட்ட பாட்டுகளில் மிக இன்பமான சந்தங்கள் இருகின்றன.

இவை கால வெள்ளத்தில் மறைந்துபோகுமுன்பாக

 ஸங்கீத வித்வான்கள் பொறுக்கியெடுத்து

ஸ்வர நிச்சயம் செய்து வித்தைப் பழக்கத்திலே

சேர்த்துவிட வேண்டும்.   – பாரதியார்.

……………………………………………………

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD

………………………. தொடரும்…………………………….

 

 

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

தமிழமுது –154 – தொல்தமிழர் இசை மரபு:.....தமிழிசை. முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –154 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 14.

தமிழிசை.

 முனைவர் ராம. கெளசல்யா.

உலக மொழிகளில் இயல், இசை,நாடகம் என்ற முக்கூறுகளையும் தன்னிடத்தே கொண்ட ஒரே மொழி தமிழ்மொழி ஆகும். இலக்கணத்தில் வாழ்வியலைப் பேசிய மொழியும்   தமிழ்மொழிதான். இசைக்கலை பண்டைத்தமிழர்களின் வாழ்க்கையில் பேரிடம் பெற்று இருந்திருக்கிறது. ஆனால், இச்சிறப்புகுறித்த முழுச் செய்திகளும் நமக்குக் கிஐக்கவில்லை. கிடைத்தவற்றையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இடையில் ஏற்பட்ட ஓர் இடைவெளி  காரணமாக அம்மரபின் இழை தொய்ந்துபோய் பல செய்திகள் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போனதொரு நிலையில் நாம் இருக்கிறோம்.

 

இசைப்பாடல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பாடும் முறை தெரியவில்லை அறுவடைக் களத்திலிருந்து போர்க்களம்வரை வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஏராளமான இசைக்கருவிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் பல மறைந்துவிட்டன. சில வேறு பெயர்களில் வழங்குகின்றன. சில மாற்றங்கள் கண்டு தொடர்ந்து பயம்பாட்டிலும் இருந்து வந்திருக்கலாம். ஆங்காங்கே காணப்படும் மேற்கோள்கள் வாயிலாக இசை தொடர்பான நூல்கள் பல இருந்து மறைந்து[ஓயிருக்க வேண்டும் என்று புரிகிறது. 

 

இந்நிலையில் இலக்கண- இலக்கிய நூல்கள், உரைகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், செவிவழிச்செய்திகள் போன்றவற்றின் வாயிலாகப் பண்டைத் தமிழகத்து இசை மாண்பினை ஓரளவு புரிந்துகொள்ளலாம். ஓரளவுதான்.

 

 ”தமிழகத்து இசை வரலாற்றினைத் தொல்காப்பியத்திலிருந்து தொடங்க வேண்டும்” என்பார் வீ.ப.கா. சுந்தரனார். இன்றைய ராகத்தை ஒத்தது பண் எனலாம். பண்முறைதான் அன்று வழக்கில் இருந்திருக்கிறது.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD

………………………. தொடரும்…………………………….

 

சனி, 25 அக்டோபர், 2025

தமிழமுது –153 – தொல்தமிழர் இசை மரபு:............பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.

 

தமிழமுது –153 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 13.

பேராசிரியர், முனைவர்  தமிழண்ணல்.

பாட்டு வடிவமும் உள்பொருள் உணர்வும் :

புறநானூற்றுப் பாடல்கள் தன் முன்னேற்றம், தன்னம்பிக்கை, பெருமித வாழ்வு, நிலைத்த உண்மைகள், மெய்மைத் தத்துவச் சிந்தனைகளின் கொள்கலமாக உள்ளன. தொடித்தலை விழுத்தண்டினார், முதுமையில் தம் இளமையை எண்ணிப்பார்க்கிறார். இனி நினைந்து இரக்கமாகின்று என்று தொடங்குகிறார். எது?

 

 நெடுநீர்க் குட்டத்துத் துடும் எனப் பாய்ந்து குளித்து மணற்கொண்ட கல்லா இளமை மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே. உண்பது நாழி; உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே, தமக்கென முயலா நோன்தாள். பிறர்க்கென முயலுநர் உண்மையான் உண்டாலம்ம இவ்வுலகம். உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே. எவ்வழி ஆடவர் நல்லவர் அவ்வழி வாழிய நிலனே (ஒரு  பெண்ணின் குரல்). ஒரே தெரு, முதல் வீட்டில் மணம்; அதே தெருவில் கடைசி வீட்டில் மரணம். இப்படிப் படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்! ஆகவே, இன்னாது மன்ற இவ்வுலகம் ; ஆனாலும் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே – நம்பிக்கை ஊட்டுகிற நல்ல மனம். நாட்டை ஆள வருவது தாமும் தம் உறவுகளும் செல்வர்களாகவா? தன்னல நோக்கமா?.

 “மழை வளங் கரப்பின் வான்பேர் அச்சம்

 பிழை உயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்

குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி

மன்பதை காக்கும் குடிப் பிறத்தல்

துன்பமல்லது அது தொழுதகவு இல்லை.” (சிலம்பு)

வாழ்க்கைக்கு சாதுரியம், திறமை மட்டும் போதாது. மதலையாம் சார்பும் வேண்டும் காற்றாற்றில் தெப்பம் போலத் தான் வாழ்க்கை. காற்றடிக்கும் திசை அல்லது நீரோடும் வழியில் போகிறது. இவ்வுலகில் சாவது ஒன்றும் புதியதன்று நாளும் நடப்பதே அது.  உனக்கு நீயே துணை. தீதும் நன்றும் பிறர் தருவதில்லை . உலகிடைப் பிறந்த எவரும் சமமானவரே . சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறுபடுத்துகின்றன. அதனால், பெரியோரை வியத்தலும் இலம் ; சிறியோரை இகழ்தல் அதனினும் இலம்.

 

”சங்க இலக்கியத்தின் செவ்வியற் பண்புகளை” எழுதிப் பார்ப்பதைவிட வாழ்ந்து பார்ப்பது உலகை உயர்த்தும்.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD

………………………. தொடரும்…………………………….


வெள்ளி, 24 அக்டோபர், 2025

தமிழமுது –152 – தொல்தமிழர் இசை மரபு:,.............பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.

 

தமிழமுது –152 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 12.

பேராசிரியர், முனைவர்  தமிழண்ணல்.

பாட்டு வடிவமும் உள்பொருள் உணர்வும் :

 

நிலைபெற்ற மானுட விழுமியங்கள்:

புறநானூற்றுப் பாடல்களிலும் அகத்திணைப் பாடல்களிலும் மனித வாழ்வின் உச்சத்தைத் தொட்டுக்காட்டும் சிந்தனைகள் கொட்டிக்கிடக்கின்றன.

 

“உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்” என்ற நற்றிணைப் பாட்டு,  தலைவி தரும் இன்பம் ‘நினைத்த காரியம் வெற்றியாக முடிந்தபோது அடையும் இன்பம் போன்றது’  என்று கூறுகிறது.

“உள்ளது சிதைப்போர் உளரெனப்படார்.” ; வினையே ஆடவர்க்கு உயிரே ’ ; “காமம் செப்பாது கண்ட்து மொழிமோ,  செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு, ; நில்லாமையே நிலையிற்றாகலின்”. என்பன போன்ற குறுந்தொகை அகப்பாடலடிகள், மனித வாழ்வை உயர்த்த முயலுகின்றன,,

மனித வாழ்வை மட்டுமன்று, சிட்டுக்குருவி முதல் யானை வரை அவற்றின் இயல்பை எடுத்துரைப்பன, கண்ணாற்கண்டது போல நடப்பியலாகக் காட்டுவனவாகும். சங்கப் புலவன் அடைமொழி என்ற படக்கருவியைப் பயன்படுத்தி, வண்ணப் படங்களைத் தருவதில் வல்லவன்.

 

“மெய்மலி உவகை புதுப் பூங்கொன்றை

கயலேர் உண்கண் பெருங்கை வேழம்

நனைமுதிர் ஞாழல் கருவி மாமழை

 மணிச்சிறைத் தும்பி கருங்கால் வேங்கை

தொடுவளை முன்கை கருங்கோல் குறிஞ்சி

செங்காற் பல்லி செந்தார்ப் பைங்கிளி.

” இங்ஙனம் சங்கப்புலவர்கள் ‘கிளிக்’ செய்த காட்சிகள் கணக்கற்றவை.” முளிதயிர் பிசைந்த”……எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் நல்ல குடும்பத்தைக் காட்டுகிறது. “நீர்நீடு ஆடின் கண்ணும் சிவக்கும். ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்” என்ற பாடல் மோகம் முப்பது நாள் என்பதை உணர்த்துகிறது. “வேம்பின் பைங்காய்” என்று தொடங்கும் பாடல் ஆடவரின் சலனப்படும் மன மாற்றத்தை இடித்துரைக்கிறது. தோழி, தலைவன் பிரிந்து காலங்கடத்தியதால் அவனைப் பழித்துப் பேசினாள். அதற்குக் காதலி அவர் நல்லவர், வந்துவிடுவார், நமக்கு வேண்டியவர்களுக்காகப் படும் துன்பமே இன்பம்., அதைவிடச் சொர்க்க இன்பமும் பெரிதன்று என்று மறுமொழிகிறாள்.  இனத்தின் இயன்ற, இன்னாமையினும் இனிதோ இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே” என்பது கபிலரின் குறுந்தொகை. ………………………..தொடரும்………………….

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD

………………………. தொடரும்…………………………….

வியாழன், 23 அக்டோபர், 2025

தமிழமுது –151 – தொல்தமிழர் இசை மரபு:.................பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.

 

தமிழமுது –151 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 11.

பேராசிரியர், முனைவர்  தமிழண்ணல்.

பாட்டு வடிவமும் உள்பொருள் உணர்வும் :

 

 

 பேச்சு நடை:

சங்கப் பாடல்களில் சொற்களே கடினம் போல் தோன்றும். பாட்டு நடையில், இன்று நாம் பேசுவது, உரையாடுவது போன்ற அமைப்பைக் காணலாம்.

காதலர்களுக்குத் திருமணம் நடக்கப் போகிறது. மணவறையில் பெண், தலை குனிந்து நாணத்துடன் இருப்பதொரு பண்பாடு. தோழி இதைக் கூறி கிண்டல் செய்கிறாள்.

 

 தோழி: விண்தோய்கல் நாடனும் நீயும் வதுவையுள்

பண்டறியாதீர் போல் படர்கிற்பீர் மற்கொலோ

மைதவழ் வெற்பன் மணவணி காணாமல்

கையாற் புதிபெறூஉம் கண்களும் கண்களோ?

 

தலைவி ; என்னைமன் நின்கண்ணாற் காண்பென்

மன்யான்!

 

தோழி: நெய்தல் இதழுன்கண், நின் கண்ணாக எண்கன் மன்(கலித்தொகை.)

 

 ”மாப்பிளைக் கோலத்தில் காதலனைப் பார்க்க முடியாத கண்களும் கண்களோ” என்றதற்குத் த்லைவி ‘என்ன கெட்டுப்போனது, உன் கண்ணால் கண்டு மகிழ்வேன்’ என்று கூற, தோழி அப்படியா? ‘ உன் நெய்தல் மலர் போன்ற கண்களாக’ என்கண்கள், ஆனால் நல்லதே என்று கூறுகிறாள். இத்தகைய இனிய உரையாடல் பலவுள.

நற்றிணையில் ஒரு பேச்சு நடைப்பாட்டு ; தோழி தலைவனிடம் அவன் மிகப்பெரிய செல்வனாதலால் ஏழைகளாகிய தங்களுடன் உறவு கொள்வது இயலாதெனக் கூறுகிறாள்.

 இவளே,

கானல் நண்ணிய காமர் சிறுகுடி

நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு

மீன் ஏறி பரதவர் மகளே ,நீயே

நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்

கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி

இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ?

புலவு நாறுதும் செலநின் நீமோ

பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை

நும்மொடு புரைவதோ அன்றே

எம்மனோரில் செம்மலும் உடைத்தே.”

 

மருதநிலப் பெருஞ் செல்வ மகனுடன், மீன் பிடி  தொழிலுடைய பரதவர் மகள் காதல் எப்படிப் பொருந்திவரும்? இத்தகைய சில பாடல்களைப் படித்தால், மலையாளத் தகழியார் எழுதிய ’செம்மீன்’ நினைவு வரும்.

 

நிலைபெற்ற மானுட விழுமியங்கள்: …….தொடரும்……..

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD

………………………. தொடரும்…………………………….