வெள்ளி, 17 அக்டோபர், 2025

தமிழமுது –145 – தொல்தமிழர் இசை மரபு:.......பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.

 

தமிழமுது –145 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 5.

பேராசிரியர், முனைவர்  தமிழண்ணல்.

இயற்கைப் பாடல்களும் செம்மொழிச் செவ்வியற் பாடல்களும்.

நாம் இன்று பெற்றுள்ள சங்கச் செவ்விலக்கியம், அதற்கு முற்பட்ட பாணர், பொருநர், விறலியர் பாடிய பாடல்களிலிருந்து வடிவம், பொருள், இசை, நாட்டிய நாடகப் பண்பு அனைத்தையும் பெற்றது. பி.டி. சீனிவாச அய்யங்கார்  முன்னைய இயற்கைப் பாடல்கள் மரபு, இலக்கியமாக வளரக் குறைந்தது ஐந்நூறு ஆண்டுகளாகி இருக்கும் என்பார்.

‘பாணர் முல்லை பாட’ என்ற ஐங்குறுநூறு, அவர்கள் முல்லைப் பண் பாடினாரென்பதிலும் முல்லைப் பாடல்களைப் பாடினர் என்றே பொருள்படுகிறது. ‘வயவேந்தன் மறம் பாடிய பாடினி, பொன் அணிகளை சேர வேந்தனிடம் பெற்றதாக இளவெயினி பாடுகிறார் (புறம்)  ‘வாருற்று விசிம்பிணிக் கொண்ட மண்கனை முழவின் பாடினி பாடும் வஞ்சிக்கு, நாடல் சான்ற  மைந்தினோய்’ எனப் பாண்டியனை நெட்டியமையார் பாடுகிறார்.(புறம்)

வலித்துக் கட்டிய, மார்ச்சனை தடவிய முழவு இசைக்க பாடினி வஞ்சித்திணை (பகைவர் நாட்டை வென்றமை பற்றியது) பாடவேண்டுமென்று ஆசைப்பட்டானாம், வேந்தன். மற்றொரு புறப்பாடலில் “பாடுநர் வஞ்சி பாட” என்பதுடன், இருவர் இணைந்தாடும் ‘அல்லியம்’ என்ற கூத்துப்பற்றி வருகிறது. கரிய கோட்டையையுடைய யாழை இசைத்து இனிய பாடல்களைப் பாட வல்ல பாணர்களைப் பற்றியும் விறலி பாடிச்செல்லுதல் பற்றியும் புறநானூற்றுப் புலவர்கள் பாடியுள்ளனர். கபிலர் மூவேந்தர்களிடம் பாரியை வெல்ல முடியாதென்று கூறவந்தவர்.

“ சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி

விரை ஒலி கூந்தல்நும் விறலியர் பின்வர

ஆடினிர் பாடினிர் செலினே”

பாரி, நாடும் குன்றமும் கொடையாகத் தருவான் என்று சொல்கிறார். இதில் அன்று அவர்கள் பாடி ஆடியும் ஆடிப் பாடியும் மக்களையும் மன்னர்களையும் மகிழ்வித்தமை தெரிகிறது.

மேலும் கூத்து, நாடகம்………………………. தொடரும்……

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக