சனி, 7 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 17

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 17
நன்னன் காவல் மரம்
பொன் அம் கண்ணி பொலந் தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த
தார் மிகு மைந்தின் நார் முடிச் சேரல்
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 40 : 14  – 16
பொன்னால் செய்த மாலையையும் பொன்னால் செய்த தேரினையும் உடைய நன்னனது -  ஒளிவிடும் பூக்களையுடைய  காவல் பொருந்திய  வாகை மரத்தினை அடியோடு வெட்டி வீழ்த்திய நார்முடிச் சேரல்.
அரியல் – (தேன்) கள்; வறிது கூட்டரியல் – போதை தரும் பொருள் சிறிது அளவு சேர்க்கப்பட்டது. நனை – பூ முகை ; இது கள்ளுக்கு மணம் சேர்க்கும். நறவு – பழச் சாற்றினால் செய்யப்பட்ட -  கள். தேறல்  கள் தெளிவு.)
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தைந்து ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான். இவன் – சேரலாதனுக்கு வேளாவிக் கோமானாகிய பதுமன் மகள் பெற்றெடுத்த மகன். பூழி நாட்டில் படையெடுத்து வென்றான்.பெருவாயில் என்னும் ஊரிலுள்ள நன்னனை போரில் வென்று அவன் காவல் மரமாகிய வாகையின் அடிமரத்தை வெட்டி வெற்றி கொண்டான்.
பதிகம்
செருப் பல செய்து செங்களம் வேட்டு
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப் பாட்டு. 11- 14
சேரலாதனுக்கு வேளாவிக் கோமானாகிய பதுமன் மகள் பெற்ற மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இவன் இருபது ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 15 - 16

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 15 - 16
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் - 1
உலகத்தோரே பலர்மன் செல்வர்
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
வளம் தலை மயங்கிய பைதிரம் திருத்திய
 களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 38 : 1  – 4
 உலகத்தோரில் செல்வவளம் படைத்தோர் பலர் ; அவர்தம் புகழ் தோன்றாமல் மறைந்தது ; அவர் அனைவருள்ளும் நின் நல்ல புகழ் மேம்பட்டுத் தோன்றும். பல வளங்களும் ஒன்றோடொன்று கலந்து கிடக்கின்ற நாட்டைச் செம்மைப் படுத்திய – களங்காயால் செய்யப்பட்ட தலையில் சூடும் மாலையினையும் நாரால் செய்யப்பட்ட முடியினையும் உடைய சேரனே.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 16

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் - 2
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்கச்
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல் நின் போர் நிழல் புகன்றே
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 39 : 14  – 17
விளங்குகின்ற மணிகள் நெருங்கின பசிய பொன் தகட்டால் செய்த கூட்டினிடத்தே நூலிலே கோர்த்த ஒளியை உமிழ்ந்து விளங்கும்படி சிறப்பு மிக்க முத்து வடங்களைச் சூழக் கோர்த்து  ( சிலந்தி வலையை முத்து சூழ்ந்தால் போல ) நாரால் செய்த முடியினை உடைய சேரலே.

வியாழன், 5 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 13 - 14

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 13 - 14
எருவை
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன் புற எருவை பெடை புணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 36 : 7 – 10
 போர்க் களத்தில் – களிறுகளும் குதிரைகளும் வீரர்களும் இறந்துபட அப்பிணங்களை உண்ணும் பொருட்டுப் பொறித்து வைத்தது போன்ற புள்ளிகளையுடைய கழுத்தினையும் புல்லிய புறத்தினையும் உடைய கழுகு இனத்தின் பெண் கழுகுடன் கூடிய ஆண் கழுகு – உச்சிக் கொண்டையை உடைய புல்லூறு என்னும் பறவையுடன் கீழே இறங்கும். ( எருவை – கழுகு : தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து. எருவை போர்க் களத்தில் ஊன் உண்ணும் பொருட்டு இறங்கியது.  மேலும் காண்க : செஞ் செவி எருவை – புறநா.64. அகநா. 193. 77.)

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 14
உலகமொடு உயிர்ப்ப
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்
மா இரும் புடையல் மாக் கழல் புனைந்து
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 37 : 6  – 8
தலைவனே ! மிக உயர்ந்ததும் நல்ல புகழும் உலகம் உள்ள அளவும் அழியாமல் நிலைத்து நிற்க – வறுமையால் வாட்டமுற்ற நின் குடிகளை மேம்பத்திய வெற்றி வீரனே – அரிய பெரிய பனந்தோட்டால் ஆகிய மாலையையும் பெரிய வீரக் கழலையும் அணிந்து பகைவர்களை அழித்தொழித்தவனே ! ( சேரனின் பனம்பூ மாலை – புகழ் நிலைக்க  - ஆதாரமாகிய உலகம் அழியின் புகழும் அழியுமாதலின் ”உலகமொடுயிர்ப்ப” என்றார்.) 

புதன், 4 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 11 - 12

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 11 - 12
நான்காம் பத்து - காப்பியாற்றுக் காப்பியனார்
வள்ளல் வண்டன்
 வெண் திரை முந்நீர் வலைஇய உலகத்து
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே …..
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 31 : 21 – 23
  வெள்ளிய அலைகளை உடைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் கொடையால் வரும் புகழைத் தன்னிடத்தே நிறுத்தியவனும் பல்வகைச் செல்வங்களைக் கொண்டவனுமாகிய வண்டன் என்ற கொடை வள்ளலைப் போன்றவன் நீ. ( வண்டன் சேரமன்னனுக்கு உவமை கூறுதற்கேற்ற பெருஞ் சிறப்பு வாய்தவன் எனில் இவ்வள்ளலின் வரலாறு யாதோ? ஆய்க.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 12
ஓடாப் பூட்கை
ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழற் கால்
இரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 34 : 2 – 3

( ஓடாப் பூட்கை ) புறங் கொடுத்து ஓடாத கொள்கை – தாங்கள் செய்த அரிய போர்ச் சிறப்புக்கள் பொறிக்கப்பட்ட கழல் அணிந்த கால்கள் – நிலத்தில் தோயும்படி  ஆடை அணிந்தவர்.( தரையில் தவழும் ஆடை பெருமிதத்திற்கு அடையாளம்.)  

செவ்வாய், 3 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 9 -10

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 9 -10
ஆண்டலை – பறவை
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி
பாலைக் கெளதமனார். 25 : 8

பகைவரின் நாடு நின்னால் அழிவுண்டதால் --- காட்டுத் தீ பற்றி அழித்தலால் ஆண்டு ஆண்டலை என்னும் பறவை இயங்க … (ஆண்டலை – இது ஆண்மகனின் தலை போன்ற வடிவமுள்ள பறவை என்பர். ஆண்டலைக் கொடி என்பது முருகனது சேவற் கொடி.- ஆண்டலை நெருப்புக் கோழியாக இருக்கலாமோ ? ஆய்க.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 10
கள்ளுக்கு விலையாக ….
காந்தளஅம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செங்கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்
பாலைக் கெளதமனார். 30 : 9 - 12

காந்தள் பூவினால் செய்த கண்ணியையும் கொலை செய்யும் வில்லினையும் உடைய வேட்டுவர் சிவந்த கொம்பையுடைய காட்டுப் பசுவின் இறைச்சியோடு  வலிமையான காட்டு யானையின் கொம்புகளையும் எடுத்துக் கொண்டு செல்வம் பொருந்திய கடைத் தெருவிற்குச் செல்வர். அங்கு தாம் வாங்கும் கள்ளுக்கு விலையாகக் காட்டுப் பசுவின் இறைச்சியையும் யானையின் தந்தத்தையும் கொடுப்பர். ( பிழி – கள் ; நொடை – விலை; நியமம் – கடைத் தெரு; ஆமான் – காட்டுப் பசு. மேலும் காண்க : அகநா. 61 : 9. )
பதிகம்
பல் யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கெளதமனார் பாடினார் பத்துப் பாட்டு – 11 -12

 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பி –பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கொளதமனார் பாடினார் பத்துப்பாட்டு. உம்பற்காடு சேர நாட்டிலுள்ளது.அது வருவாயை உடைய பல ஊர்களைத் தன்னகத்தே கொண்டது. இவன் இருபத்தைந்து ஆண்டுக் காலம் ஆட்சியில் வீற்றிருந்தான். 4/11/15

திங்கள், 2 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 7 - 8

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 7 - 8
நல்ல ஆட்சிக்கு - அழகன்று
சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம் பொய்ச் சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்
 பாலைக் கெளதமனார். 22 : 1 –  4

  மிகுந்த சினமும் மிகுந்த காமமும் அளவிறந்த இரக்கமும்( தன் கட்சியினரிடத்து) பகைவர்க்கு அஞ்சுதலும் ( மக்கள் முன் தோன்ற )பொய் கூறலும் ( தேர்தல் வாக்குறுதி) பொருளிடத்து அளவுக்கு மிஞ்சிய பற்று வைத்தலும் ( சொத்துக் குவிப்பு ) அளவுக்கு மிஞ்சிய தண்டனை( வரி போட்டு வருத்துதல் )அளித்தலும் - இவை போன்ற இன்னபிறவும் நல்லாட்சிக்குத் தடையாக அமைவன ஆகும்.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 8

மழைக் கோள்
வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப
 பாலைக் கெளதமனார். 24 : 23 –  25

விளங்குகின்ற  கதிர்கள் வானத்திலெங்கும் பரந்து ஒளி வீச – வடக்கே சிறிது சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளி என்னும் கோளானது பயன் பொருந்திய பிற கோள்களோடு தனக்குரிய நல்ல நாளிலே மழை பொழிவதற்கு நிற்க…..

 ( மழைக் கோளாகிய வெள்ளி- மழை பெய்வதற்கு ஏதுவாகச் சிறிது வடக்கே சாய்ந்து நிற்குமாறு தோன்ற “ வறிது வடக்கிறைஞ்சிய வெள்ளி” என்றார். வெள்ளி தெற்கே நின்றால் மழை இல்லை. வெள்ளி – சுக்கிரன். மேலும் காண்க : ”வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும் …… புயன் மாறி வான் பொய்ப்பினும் “ ப.பாலை. 1-2. ஆநியம் – நல்ல நாள். )

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 5 -6

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 5 -6
பாதுகாப்பு இல்லா நாடு
அரணம் காணாது மாதிரம் துழைஇ
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருக இந்நிழல் …..
 குமட்டூர்க் கண்ணனார். பதிற்.17  :  9– 10

உங்கள் நாட்டில் பாதுகாப்பாய் இருப்பதற்குரிய இடத்தினைக் காணாது – திசைகளிலெல்லாம் சென்று தேடிய பரந்த இந்நிலவுலகில் உள்ள மக்களே -  சேரலாதனின் குடை நிழலில் வந்து சேருவீர் எனச் சொல்வர்.
பதிகம்
பெருவிறல் மூதூர்த் தந்து பிறர்க்கு உதவி
அமையார் தேய்த்த அணங்குடை நோன் தாள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டுர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு. 11 - 14
நிலை பெற்ற பெரும் புகழினையும் குற்றமில்லாத உண்மையினையும் இனிய ஓசையுள்ள முரசினையுமுடைய உதியஞ்சேரனுக்கு அவன் மனைவியாகிய வெளியன் வேண்மாள் நல்லினி – ஈன்ற மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் . இமயமலையின் உச்சியில் தன் கொடியின் வில் உருவத்தைப் பொறித்தவன்.ஐம்பத்தெட்டு ஆண்டுகள் அரசு  வீற்றிருந்தான்.

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 6
மூன்றாம் பத்து - பாலைக் கெளதமனார்
இயற்கையில் மணம் கமழும் கூந்தல்
மண்ணாவாயின் மணம் கமழ் கொண்டு
கார் மலர் கமழும் தாழ் இருங் கூந்தல்
ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
 வேய் உறழ் பணைத் தோள் இவளோடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே.
பாலைக் கெளதமனார். 21: 32 – 38
சேரமாதேவியின் கூந்தல் எண்ணெய் முதலிய பூசாத போதும் இயற்கை மணம் கமழ்ந்து நிற்கும். அவளது நீண்ட கரிய கூந்தல் நீராடப் பெற்றுக் கார் காலத்தே பூக்கின்ற முல்லை மலர் அணியப் பெற்றால் அப்பூவின் மணம் கமழும். அவளது பெரிய குளிர்ந்த கண்கள்  குளத்தினின்றும் நீங்கின மலர்கள் போல இரவுப் பொழுதிலும் அவளது அழகிய முகத்தின்கண் மலர்ந்து நின்று சுழலும். அசைகின்ற காந்தள் மலர் விளங்கும் -  நீரைக் கொண்ட நிலத்தில் முளைத்த மூங்கிலை ஒத்தன அவளுடைய பருத்த தோள்கள் – இத்தகைய கூந்தலினையும் கண்களினையும் தோள்களினையும் உடைய நின் தேவியாகிய இவளோடு  - நீ பல ஆயிர வெள்ளம் ஆண்டுகள் வரை வாழ்வாயாக.
( தன் கூந்தலைக் கைசெய்யாமையின் மண்ணாவாயின – என்றார். மண்ணுதல் – பூசுதல். வெள்ளம் – பேரெண்ணைக் குறிக்கும்.)