புதன், 7 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :10 . பழமொழி..!

 

சான்றோர் வாய் (மை) மொழி :10 . பழமொழி..!

கள்ளன் பெரியவனா… காப்பான் பெரியவனா..?

கள்ளம் பெரிசா … காப்பான் பெரிசா..? என்றவாறு  ஊர் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளதைக் கேட்டிருப்பீர்கள்.

              இப்படி ஒரு பழமொழிக்கு ஒரு கதையும் சொல்வார்கள்.

                                  அஃதாவது மதுரை மாநகரில் அரசு வீற்றிருந்த மன்னன் ஒருவன், கள்வர்களினால் மக்கள் படும் துன்பத்தைக் கண்டு ஆற்றாது அமைச்சர்களக் கூட்டி கள்வர்களை ஒழித்துக்கட்ட ஒரு நல்ல வழியைக் கூறுங்கள் என்று கேட்டாராம்……

                     அவையில் இருந்தோர் அனைவரும் அரசே..! கள்வர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கியும் அவர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை “ திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..” என்று பட்டுக்கோட்டையார் கூறியதுபோல விடையளித்தனர்.

                        மன்னன்  கடுங்கோபம் கொண்டு கள்வர்கள் என்ன அவ்வளவு பெரிய ஆட்களா…? நமது அரசின் படைபலத்தைக்கொண்டு அவர்களை ஒழித்துக்கட்ட முடியவில்லை என்றால் நமக்கு எதற்குப் படையும் ஆயுதங்களும் நாம் நமது மக்களைக் காப்பாற்ற வேண்டும். சரி…! நீங்கள் சொல்வது போல் கள்வர்கள் பெரியர்களா… நமது படைவீரர்கள் பெரியவர்களா என்பதைப் பார்த்துவிடுவோம்…! அமைச்சரே தளபதியை அழையுங்கள்…!

                                தளபதியே நமது கோட்டையின் நடுவே அமைந்திருக்கும் அம்மன் கோவிலுக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுங்கள் ; அர்ச்சகரை அழைத்து அம்மனுக்கு அனைத்துவகையான ஆபரணங்களை அணிவித்து விலை உயர்ந்த வேறெங்கும் காணக் கிடைக்காத வைர மூக்குத்தியை அணிவிக்கச் சொல்லுங்கள். கள்வர்களுக்கு இச்செய்தி எட்டுமளவுக்குப் பரப்பி விடுங்கள். .

அரசே…! அப்படியே செய்து விடுகிறோம் என்றார்கள். 

கள்வர்கள் காதில் தேன் பாய்ந்தது போலிருந்தது. மூன்று நாட்கள் கடந்தன கள்வர்கள் எவரும் எட்டிப்பார்க்கவிலை என்ற செய்தி மன்னருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும்…..

                               அன்று அமாவாசை படைவீரர்கள் மிகுந்த கவனத்துடன் கோட்டையைச் சுற்றி சுற்றி  காவலைக் கடுமையாக்கினர். அன்று இரவு முழுதும் அர்ச்சகர்களும் கண் மூடவில்லை.

                                   கள்வர்கள் சிலர்  தாம் திட்டமிட்டபடி  ஓர் உடும்பைக் கொண்டுவந்து அதன் வயிற்றில் கயிர்றைக்கட்டி கோட்டை மதில் மீது வீசி அவ்வழியாக கோட்டைக்குள் புகுந்து அங்கிருந்து அம்மன் கோவில் மண்டபத்திலிருந்து ஓட்டை போட்டு  அம்மன் தலைக்கு நேரே இறங்கி அம்மன் மூக்கில் இருந்த வைர மூக்குத்தியை மட்டும் களவாடிச் சென்றுவிட்டனர்.

                              பொழுது  விடிந்தது காவலர்கள் வெற்றிக்களிப்போடு இருக்க அர்ச்சகர்கள் அலறி அடித்துக்கொண்டு மன்னனிடம் அரசே ….! அம்மன் மூக்கிலிருந்த மூக்குத்தியை மட்டும் காணவில்லை என்றனர். மன்னன் கள்வனே பெரியவன் என ஒப்புக்கொண்டார். என்பதுதான் அந்தக் கதை.

                        காலம் மாறினாலும் கள்வர்கள் மாறவில்லை அவர்களே இன்றும் பெரியவர்களாகவே இருக்கின்றனர்.

“ களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும். குறள் : 283.

களவினால் கொண்ட பொருட் செல்வம் மேன்மேலும்  பெருகுவதைப் போலத் தோன்றி இயல்பாக இருந்த பொருளையும் விட்டுவைக்காது,  அனைத்தும் வெகுவிரைவாக கெட்டு அழியும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக