வியாழன், 1 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 6.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 6.

”ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா..?”

’இளமையில் கல்’ என்றார் ஒளவையார்.

                   இளமையில் கற்கும்  கல்வியே பசு மரத்தாணிபோல் மனதில் பதியும். இளமையில் நமக்குக் கற்கும் ஆற்றலை வளர்த்து நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுப்போர்                   பெற்றோர்களே, குறிப்பாகத் தாய்தான் முதன்மை ஆசிரியர் ஆகிறாள். தாயானவள் பாலூட்டும்போதே பகுத்தறிவையும் ஊட்டுகிறாள். திரைக்கவிஞர் புலவர் புலமைப்பித்தன் கூற்றினை உற்று நோக்குங்கள்….

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே அது

நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே….”

             என்றதற்கிணங்கப் பிள்ளைகளை நன்மை தீமைகளை அறியும் அறிவுடையராக ஆக்குதல் தாயின் கடமையாகும்.

“ அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா..” என்று இன்னாநாற்பதில் புலவர் கபிலதேவர் கூறுகிறார். ஒழுக்கமுடைய நல்ல பெற்றோர்க்குப் பிறக்கும் குழந்தை ஒருபோதும் சோடைபோவதில்லை.

”ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் கருவில்

எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து

சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்

காவற்கு அமைந்த அரசு துறைபோகிய

வீறுசால் புதல்வற் பெற்றனை..” –அரிசில் கிழார் ; பதிற்றுப்பத்து : 74.

                        அரசே…! நின் மனைவியின் கருவில் பத்துத் திங்களும் நிரம்பிப் பேரறிவை விரும்பி, அன்பும் நாணும் ஒப்புரவும் கண்ணோட்டமும் வாய்மையும் நடுவுநிலைமையும் உளப்படப் பிற குணங்களும் குடிகளைக் காத்தற்குப் பொருந்திய அரசின் துறைகளை முற்றக் கற்ற விருப்புடைய சிறப்புகளையும் உடைய புதல்வனைப் பெற்றனை..”

                 இவ்வாறு நன்மக்களைப் பெற்றெடுக்க ஆன்றோர் கூறிய அறிவுரைகளை ஏற்று ஒழுகுதல் வேண்டும்.

                       அதனாலன்றோ திருவள்ளுவர்  தம்மையும் உளப்படுத்திக் கூறுவதை மனங்கொள்ளல் நன்று….

”பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.” -61.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக