சான்றோர் வாய் (மை)
மொழி :22.நக்கீரர்-முத்தமிழ் முருகன்
முருகன் எழுந்தருளும் இடங்களாக நக்கீரர்….
“சிறுதினை மலரொடு விளைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆவலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலவன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்…” –திருமுருகாற்றுப்படை
: 218 – 226.
குன்றுதொறும் ஆடற்கண் நிற்றலேயன்றிச் சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக
வைத்து மறியறுத்துச் சேவற்கொடியை உயர்த்தி , அவ்விடத்தே அந்த இறைப்பொருள் நிற்பதாக
நினைத்து நிறுத்தும் ஊர்கள்தோறும் எடுக்கின்ற தலைமை பொருந்திய விழாவிடத்தும் முருகப்பெருமான்
எழுந்தருளியிருப்பான்.
தன்பால் அன்புடையோர் ஏத்துதலால் மனம் பொருந்தி அவ்விடத்தும் இருப்பான் ; வேலன்
இழைத்த வெறியாடு களத்திலும் இருப்பான்; காட்டிலும்
சோலையிலும் அழகுபெற்ற ஆற்றிடைக் குறையிலும் ஆற்றிலும் குளத்திலும் முற்கூறப்பட்ட ஊர்களன்றி
வேறுபல ஊர்களிலும் நாற்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் புதிதாக மலர்ந்துள்ள கடம்ப மரத்திலும்
ஊர்நடுவே மக்கள் குழுமியிருக்கும் மன்றத்து மரத்திலும் ஊரம்பலங்களிலும் அருட்குறியாக
நடப்பட்ட தறிகளிலும் முருகன் எழுந்தருளியிருப்பான்.
(கல்தறி – இறைவன் அருள் குறித்து நடப்பட்ட கல் வழிபாடு ; வாரணம்
– கோழி ; துருத்தி – ஆற்றிடைக்குறை ; வைப்பு – ஊர்; மறி – ஆட்டுக்குட்டி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக