வியாழன், 29 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :21.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

 

சான்றோர் வாய் (மை) மொழி :21.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

அழகன் முருகனின் தோற்றப் பொலிவை நக்கீரர்…..

“மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்

செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்

கச்சினன் கழனினன் செச்சைக் கண்ணியன்

குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்

தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம்

கொடியன் நெடியன் தொடியணி தோளன்

நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு

குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்

மருங்கில் கட்டிய நிலனேர்பு துகிலினன்

முழவு உழற் தடக்கையின் இயல ஏந்தி

மெம்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து

குன்றுதோறு ஆடலும் நின்றதன் பண்பே…” திருமுருகாற்றுப்படை, 205 – 217.

       முருகன் சிவந்த மேனியன் ; சிவந்த ஆடையை உடையவன் ;அசோகினது தளிர் அணிந்தவன் ;  வீரக்கழலைத் தரித்தவன் ; வெட்சி மாலையைச் சூடியவன் ; புல்லாங்குழலை இசைப்பவன் ; பெரிய கொம்பை ஊதுபவன் ; வேறுபல இசைக் கருவிகளையும் இசைப்பவன்

;ஆட்டுக்கிடாவை வாகனமாக உடையவன் ; மயிலை ஊர்தியாகக் கொண்டவன் ; குற்றமற்ற சேவல் கொடியை உயர்த்தியவன் ; நெடிய உருவம் படைத்தவன் ;  தொடி எனும் அணியைத் தோளில் அணிந்தவன் ; இடையில் நறிய மென்மை மிக்கதாகிய ஆடையை நிலத்தளவும் புரளும் வண்ணம் தரித்தவன் ;  முழவை ஒத்த பெரிய கைகளால் மான்பிணை போலும் பல மகளிரைத் தழுவிக்கொண்டு

அவர்க்கு முதற்கை கொடுத்து மலைகள் தோறும் சென்று விளையாடுதல் முருகக் கடவுளின் நிலைத்த குணமாகும்.

(தகர் – ஆட்டுக்கிடா ; குல்லை – கஞ்சாங்குல்லை ; வாலிணர் – வெள்ளிய பூங்கொத்து ; செய்யன் – சிவந்த மேனியன்.)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக