வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 7.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 7.

”இன்னைக்கி செத்தா நாளைக்கு ரெண்டாம் நாள்.”

இன்று  இறந்தால் நாளை இரண்டாம் நாள் …!

                 இந்தக்கணக்கில் ஒருவனுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் , அவனிடம்  சொத்து சுகம் இல்லை ; தோட்டம் துரவு இல்லை ; காசு பணம் இல்லை ;சேமிப்பு இல்லை சேர்த்துவைக்க எதுவும் இல்லை அன்றாடம் உழைத்தால்தான் சோறு, நாளைக்கு இருக்கிறது என்று சொல்ல எதுவும் இல்லாத ஓர் ஏழையின் வாயிலிருந்து  வரக்கூடியதுதான் இந்தப் பழமொழி.

“ பறந்து பறந்து பணம் தேடிப்

பாவக் குளத்தில் நீராடிப்

பிறந்து வந்த நாள் முதலாய்

பேராசையுடன் உறவாடி

அப்படி இறந்தவனைச் சுமந்துவனும்

இறந்திட்டான்…… என்னும் திரைப்பாடல்,

                       ஊரை அடித்து உலையில் போட்டு, மலையை உடைத்து மணலாய் விற்று, காட்டை அழித்துக் காசு பணம் சேர்த்துத்  தலைமுறையையே பாவக் கிணற்றில் தள்ளிவிட்டு மாண்டு போன மானங்கெட்டவர்கள் எத்தனை பேர்..? பட்டுக்கோட்டையார் பாடினார்…

“செல்வமெல்லாம் சேர்த்தாலும்

செவுரு வச்சிக் காத்தாலும் நீ

செத்த பின்னே அத்தனைக்கும்

சொந்தக்காரன் யாரு.. துணிவு இருந்தா கூறு..?

ரொம்பப் பெரியவரும் எளியவரும்

எங்கே போனார் பாரு……? 

               என்று  மனதில் இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்.. இவ்வாறு பொதுச் சொத்தைக் கொள்ளையடித்துப் பழியொடு குழியில் வீழ்ந்து மடிந்தவர் எத்தனை பேர்.. யாரறிவார்… ? நாம் அறிவோமே..!

             இளமை நில்லாது, செல்வம் நில்லாது வாழும் நாள் கூடத் தெரியாது.

 காடு முன்னினரே நாடு கொண்டோரும்

நினக்கும் வருதல் வைகல் அற்றே ..” –காவிட்டனார், புறநானூறு.359.

                     பெரிய நாடுகளை வென்ற முடிமன்னர்களும் முடிவில் சுடுகாட்டுத் தீயில் சென்று அடைந்தனரே, அவ்வாறே உனக்கும் காடு அடையும் நாள் வரும். என்று வாழ்வின் உண்மையைப் புலவர் உணர்த்துகிறார் உணர்ந்தார் யாரே .?

                  இருப்பவனுக்கு எல்லாம் சொந்தம் ; இல்லாதவனுக்கு நாள் ஒன்றே சொந்தம். இன்று இறந்தால் நாளை இரண்டாம் நாள். அவ்வளவுதான்  வாழ்க்கை.

வள்ளுவர் வாய்மொழி உரத்துக் கூறும் உண்மையாவது..

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு. 336.

                         நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும் பெருமை உடையது இவ்வுலகம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக