சான்றோர் வாய் (மை)
மொழி :13. – மாங்குடி மருதனார்.
உலகத் தோற்றம் – 3.
“ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆகத்
தேன் தூங்கும் உயர்சிமைய
மலை நாறிய வியல்ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கெட்ப
வியல் நாள் மீன் நெறி ஒழுகப்
பகற் செய்யும் செஞ்ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
………………………………..மதுரைக்காஞ்சி: 1- 12.
அகன்ற நீர்ப்பரப்பில் உயர்ந்த
அலைகள் எழுந்து ஒலிக்கும் கடலை எல்லையாகக் கொண்டு, தேன் அடைகள் தொங்குகின்ற உயர்ந்த சிகரங்களைக் கொண்ட மலைகள் தோன்றிய இவ்வுலகத்தில்,
ஆகாயத்தின்கண் காற்று வலமாகச் சுழன்று வீசிற்று, அகன்று விளங்கும் நாள் மீன்கள், தாம்
இயங்குவதற்குரிய பாதைகளில் பிறழாது இயங்கின.
பகற்பொழுதை உண்டாக்கும் சிவந்த கதிகளையுடைய ஞாயிறும்,
இரவுப் பொழுதை உண்டாக்கும் வெண்ணிறக் கதிர்களையுடைய திங்களும் குற்றமில்லாமல் விளங்கித் தோன்றின. மேகங்கள் மழை
வேண்டும் காலத்துப் பிழையாது தம்முடைய பெய்தல்
தொழிலால் உதவி புரிந்தன. அதனால் எல்லாத் திசைகளிலும் விளையுள் பெருகி வளம் கொழித்தது.
ஒரு விதைப்பில் விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகி
விளைந்தது. விளை நிலங்களும் மரங்களும் பல்லுயிர்க்கும் தாம் பயன் கொடுக்கும் தொழிலை
ஏற்றுக் கொண்டு தவறாமல் வழங்கின.
நீர்ப் பரப்பு முதலில் தோன்ற , அதன்பின் நிலப்பரப்பு
கடலிலிருந்து வெளிப்பட்டது. உலக அமைப்பு, காற்று மண்டிலம் விண்மீன்கள் இயக்கம் ஆகிய உலகத்தோற்றம் குறித்த செய்திகள் அறிவியல் ஆய்வன்றோ..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக