திங்கள், 12 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :14. –பிசிராந்தையார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :14. –பிசிராந்தையார்.

                               வயதாகியும்  முடி நரைக்கவில்லையே..!

”யாண்டுபல வாக நரையில வாகுதல்

யாங்காகியரென வினவுதி ராயின்

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை

ஆன்று அவிந் தடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.” –பிசிராந்தையார், புறநானூறு: 191.

                                       நரை தோன்றாமைக்குரிய காரணங்களை விரித்துரைக்கும் பிசிராந்தையார், தான் எல்லா நலன்களும் பெற்றுக் கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருப்பதால் இளமை கழிந்து, ஆண்டுகள் பல சென்றபோதும் தனக்கு நரை தோன்றவில்லை என்கிறார்.

                               மாட்சிமைப்பட்ட குணங்களை உடைய மனைவியுடன் பிள்ளைகளும் அறிவு நிரம்பினர் ; யான் கருதியதையே ஏவல் செய்வாரும் கருதுவர்.; அரசனும்  முறையல்லாதன செய்யானாய் மக்களைக் காப்பான்; இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஊரின்கண்  நற்குணங்கள் நிறந்து, உயர்ந்தோரிடத்து ப் பணிந்து ஐம்புலனும் அடங்கிய கொள்கையுடைய சான்றோர் பலர் வாழ்தலால்  கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருப்பதால்  நரை தோன்றவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக