திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :9. ஆண் என்பவன்..!

 

சான்றோர் வாய் (மை) மொழி :9. ண் என்பவன்..!

“கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.”

மேல் உதட்டை மறைக்கும் அளவுக்கு மீசை வைத்துக்கொண்டு கூழைக் குடிக்க முடியுமா..? முடியாது ஆனால் இரண்டையும் விடமுடிய வில்லையே என்று ஏங்குவதைப் போலத்தான் உழைக்காமல் உயரவேண்டும் குறுக்குவழியில் புகுந்தாவது பணக்காரனாக் வேண்டும் ஆனாலும் எல்லோரும் மதிக்க வேண்டும் என்று வேலையற்ற வீணர்களின் பித்தலாட்டங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது இப்பழமொழி.

“எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நலனே.” –ஒளவையார், புறநானூறு:187.

ஆடவர் ஒழுக்கமே நாட்டின் நலம்,வளம் என்கிறார் ஒளவையார். நிலமே..! ஆடவர் எவ்விடத்து நல்லவராக விளங்கிகின்றனரோ அவ்விடத்து நீயும் வாழ்வாயாக.

“மாண்ட நின் ஒழுக்கத்தான் மறுவின்றி வியன் ஞாலத்து

யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்.” மருதனிளநாகனார், கலித்தொகை: 100.

                     வேந்தே…! குற்றமற்ற மேன்மையான நின்னுடைய ஒழுக்கத்தால் பரந்த இவ்வுலகத்தைப் பேணிப் பாதுகாத்து வருகின்றாய், உலகில் உள்ளோர் வணங்கித் தொழுது போற்றும் வண்ணம் ஒலிக்கின்ற முரசினை உடையவன் நீயே…என்று பாராட்டுகின்றார் புலவர்.

 

ஒழுக்கமில்லாதவன் கையில் உயர் பதவி

“ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தால் குரங்கின் கைக்

கொள்ளி கொடுத்து விடல்..” – முன்றுறை அரையனார், பழமொழி: 200.

                       ஆடவரின் ஒழுக்கக்கேடு நாட்டை அழிக்கும் ; பண்பாட்டைச் சீரழிக்கும் . ஒழுக்கமில்லாதவனிடம்  உயர்ந்த  முதன்மைப் பதவியைக் கொடுத்தால், அது குரங்கின் கையில் கொள்ளிக்கட்டையைக் கொடுத்தலோடு ஒக்கும்.

                             பொய், களவு, காமவெறி,கள் குடித்தல், பிறர் பொருளக் கவர்தல் இன்னபிற கேடுகெட்ட செயல்களைக் கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் செய்பவன்,  நல்ல குடும்பத்தில் பிறந்தவன் ஆகான்.

“ ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறல்ல

நாண் உடைமை மாந்தர் சிறப்பு. குறள்: 1012.

உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவை எல்லாம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை; மக்களின் சிறப்பியலாக விளங்குவது, பழி, பாவங்களுக்கு அஞ்சி நடக்கும் நன்னடத்தையாகிய நாணுடைமையே ஆகும்.

ஆடவனுக்கு ஆளுமையாக அமைவது….

“ இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே.” –பெருஞ்சித்திரனார்,புறநானூறு: 163.

                                என் இனிய துணைவியே….! குமணன் எமக்கு அளித்த செல்வத்தை இன்னார் இனியார் என்று பாராது, என்னையும் கேட்காது, நாம் மட்டுமே வளம் செழிக்க வாழ வேண்டும் என்று பாதுகாத்து வைத்துக் கொள்ள நினையாது எல்லோர்க்கும் வழங்கி மகிழ்வாயாக.

இப்புலவர், கூழுக்கும் ஆசைப்படவில்லை மீசைக்கும் ஆசைப்படவில்லை.  மனிதநேயத்துடன் மட்டுமே வாழ ஆசைப்பட்டார்.

ஓர் ஆண்மகனின் ஆளுமையை அறிவீராக…!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக