சான்றோர்
வாய் (மை)
மொழி :8. பெண் என்பவள்..!
“அழுதாலும்
பிள்ளை அவள்தான் பெறவேண்டும்.”
பெண்மையின் சிறப்பே
தாய்மைதான் என்பார்கள். ஒவ்வொரு பெண்ணும் மணமுடித்து இல்லறமாகிய நல்லறம் ஏற்று இல்லத்தரசி
ஆவாள். புகுந்த வீட்டில் நலம், வளம் சிறக்க
வந்தவள் என்று போற்றப்படுபவள் ஆவாள். பிறந்த வீட்டின் பெருமை விளங்க நல்லொழுக்கம் தவறாது
உற்றார் உறவினரைப் போற்றி வாழ்தலைக் கடமையாக் கொண்டு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவளே
நன்மகளாம். இல்லறம் செழிக்க ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் பெரும் பேற்றினைக் கொண்டவள்,
மனைவி என்னும் பெயரில்..வாழ்க்கைத் துணைவனோடு நன்மக்களைப் பெற்றுக் குடும்பத் தலைமைப்
பொறுப்பை ஏற்றுக் கொண்டு பெருமை சேர்ப்பவள்.
திருவள்ளுவர் கூறும் இல்லற
வாழ்க்கையைப் போற்றி வாழ்தல் வேண்டும்.
“ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.” -45.
”அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.”49.
“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” -56.
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.” 60.
இல்லற வாழ்க்கையில்
இன்பமோ துன்பமோ எதுவந்தாலும் துவண்டு சோர்ந்துவிடாமல் வாழ்க்கைப் பயணத்தை இனிதே தொடரவேண்டும்.
உண்மையில் இப்பழமொழியின் உள்ளார்ந்த பொருள் மக்களின் பொதுவான வாழ்வியலை உணர்த்துவதாகும்.
எந்த ஒரு செயலையும் திட்டமிட்டே தொடங்கியிருந்தாலும் சூழ்நிலையால் சிலவேளைகளில் இடையூறு
ஏற்படலாம் ஆயினும் அச்செயலைக் கைவிட முடியாது எப்பாடு பட்டாவது எவரையும் எதிர்பாராமல் அச்செயலை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நம்மை ஆற்றுப்படுத்துவதே
ஊரார் கூறும் பழமொழி அழுதாலும் பிள்ளையை அவள்தானே பெற்றாக வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக