செவ்வாய், 15 ஜூலை, 2025

தமிழமுது –.74 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆன்மா, அழிவதில்லை….? பேரின்பம் – சிற்றின்பம்

 

தமிழமுது –.74 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆன்மா, அழிவதில்லை….? பேரின்பம் சிற்றின்பம்

 

இல்லறம்துறவறம்.:

இல்லற நெறிநில்லாதுஇளமை முதற்கொண்டேஇறைநெறி ஏற்று, வீடு பேறு  எனும் பேரின்பம்அடைதல் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு வாழ்வோர் துறவறம் கொள்வர். துறவறம் தமிழர் வழக்கன்று. அஃது இயற்கைக்கு எதிரான செயலாகும் என்பதைத் தமிழர்கள் நன்கு உணர்ந்ததனால் “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்  பழிப்பது இல்லாயின் நன்றே”  எனும் வள்ளுவர் வகுத்த வாழ்வியல் நெறி இயற்கையோடியைந்த வாழ்தலைப் போற்றினர்.அதனால் பருவத்தில் இயல்பாய் விளையும் காதலும் காமமும்  வாழ்வியல் நெறியாயின. அஃதே பேரின்பம் என்றும் கண்டனர்.

 

 இல்லறம் - காதல் :

 “ யாயும் ஞாயும் யார் ஆகியர்ரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” –குறுந்தொகை.

அவனும் அவளும் ஒருவருக்கொருவர் நேரில் கண்டு மகிழ்ந்த நிலையில்  இருவர் உள்ளமும்  செம்மண்ணில் பெய்த மழைநீர் தன்னை இழந்து மண் நிறத்தோடு இரண்டறக் கலந்தது போல்  இருவரும் காதல் வயப்பட்டனர். இஃது ஓர் இயற்கை நிகழ்வே ; பருவத்தில் முகிழ்க்கும் உணர்வே.

 

 ”காதல் தானும் கடலினும் பெரிதே” நற்றிணை.

காதல் –தலைவன் கூற்று:

“அன்பும் மடனும் சாயலும் இயல்பும்

என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி

 இன்றே இவணம் ஆகி….” –அகநானூறு.

நெஞ்சே…! தலைவியின் அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் உயிரை மகிழ்விக்கும் இனிய சொல்லும் ஒன்றுபட்டுள்ள கொள்கையும் பிறவும் ஒரே தன்மை உடையதாய் என்றும் இருக்க, இன்று இவ்விடத்தே இருந்து மகிழ்ந்தோம்.

காதல் உள்ளம் –தலைவி கூற்று:

 

‘யாத்தேம் யாத்தன்று நட்பே

அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே.” –குறுந்தொகை.

 தலைவனோடு யாம் காதல் உறவினால் பிணிக்கப்பட்டுவிட்டோம்

அந்நட்பை இனி எவராலும் பிரிக்க முடியாது. இந்நட்பு பிறவிகள்தோறும் தொடருமாறு முன்பே முடிக்கப்பட்டு அமைந்ததாகும்.

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக